நேரு பட்டேல் விவாதம் எதற்காக?

நேருவும் பட்டேலும், ஒன்றாக பணியாற்றியவர்கள், தனியாகவும் இணைந்தும் பணியாற்றிய நேருவும் பட்டேலும், இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கினார்கள்.

ராமசந்திர குஹா

முதலில் ஒரு கேள்வி. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராகாமல் இருந்திருந்தால், பிரதமர் தனது சமீபத்திய பாராளுமன்ற உரையில் ஜவஹர்லால் நேருவை விட வல்லபாய் பட்டேல் சிறந்த பிரதமர் என்று கூறியிருப்பாரா? 2014 பொதுத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி முதல் முறையாக, இதே பட்டேல் மற்றும் நேரு விவாதத் தந்திரத்தை கையாண்டார். நான்கு வருட நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது மீண்டும் இந்த விவாதத்தை தொடங்குவதன் நோக்கம் என்ன? வாக்காளர்களிடமிருந்து, அவரது அரசின் தோல்விகளை திசைத் திருப்பவே என்று உறுதியாக கூறலாம். அவர் உறுதியளித்த “நல்ல நாட்கள்” இளைஞர்களுக்கும், விவசாயிகளுக்கும் வரவேயில்லை. ஆனால், “மோசமான நாட்கள்” தலித்துகளுக்கும், சிறுபான்மையினருக்கும், வந்து விட்டன.

இன்னும் ஒரு வருடத்தில் பொதுத் தேர்தல் வர உள்ளது. எனக்கு மீண்டும் வாக்களியுங்கள் என்று எந்த அடிப்படையில் பிரதமர் வாக்கு கேட்பார்? அவ்வப்போது அவர் தவறி வெளியிடும் வார்த்தைகளில் இருந்து, பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறு என்பதையும், ஜிஎஸ்டி தவறான முறையில் அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் அவர் உணர்ந்தே உள்ளார். ஒரு குத்து மதிப்பாக பொருளாதாரம் தட்டுத் தடுமாறிக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், சமூகம் நான்காண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட பெரும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தானுடனான நமது உறவு, மோசமான நிலையை அடைந்துள்ளது. நமது உள்நாட்டு சிக்கல்களான காஷ்மீர் மற்றும் நாகலாந்தின் நிலைமை 20145ம் ஆண்டை விட மோசமடைந்துள்ளது. மே 2014ல், வெற்றி பெற்ற மிதப்பில், பிஜேபி ஆதரவாளர்கள், 2019ம் ஆண்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று கூறினர். தற்போது தேர்தல் நெருங்க நெருங்க தற்போது உள்ள பெரும்பான்மையை மீண்டும் பெறுவதே எத்தகைய சிரமம் எனபதை அவர்கள் உணர்ந்து கொண்டுள்ளனர்.

nehru - patel-759

நேருவுடன் வல்லவாய் படேல்

2014 தேர்தலில், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹரியாணா, இமாச்சல பிரதேசம், உத்தராகாண்ட், சட்டீஸ்கர் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களில் தங்கள் சொந்த பலத்தில் வென்ற பிஜேபி, பீகார் மற்றும் மகாராஷ்டிர மாநிலத்தில் கூட்டணி பலத்தில் வெற்றியடைந்தனர். இந்த இடங்களில் எல்லாம், பிஜேபியின் வெற்றி எண்ணிக்கை கணிசமாக குறைய வாய்ப்பு உள்ளது. பிஜேபிக்கு 71 எம்பிக்களை அளித்த உத்தரப் பிரதேசத்தில் கூட அந்த எண்ணிக்கை சரிய வாய்ப்பு உள்ளது. வேறு சில மாநிலங்களில் பிஜேபிக்கு கடந்த முறையை விட கூடுதல் இடம் கிடைக்கலாம். ஆனால் தற்போது உள்ள நிலைமையின்படி, பிஜேபிக்கு 2019 தேர்தலில் முழுப் பெரும்பான்மை கிடைப்பது அத்தனை எளிதல்ல.

இதை எப்படி மாற்றுவது? இரண்டு வழிகளில் இதை செய்யலாம். ஒன்று, வாக்காளர்களை மத அடிப்படையில் பிளவுபடுத்துவது. இரண்டாவது, தேர்தல் முறையை அமெரிக்க ஜனாதிபதி போல பிரதமரை நேரடியாக தேர்ந்தெடுப்பது போல, தேர்தலையே மாற்றுவார்கள். முதலாவது நடக்குமோ நடக்காதோ தெரியாது. ஆனால் இரண்டாவது நிச்சயமாக நடக்கும். வரப் போகும் தேர்தலை, மோடி மற்றும் ராகுலுக்கு எதிரான மோதல் என்று மாற்ற மோடி விரும்புவார். ஒரு சாதாரண பின்புலத்தில் இருந்து வந்த தன்னையும், நேரு குடும்பத்தில் பிறந்த செல்வந்தராக ராகுலையும் ஒப்பிடுவார். தன்னுடைய செழிப்பான நிர்வாக அனுபவத்தையும், ஒரு முறை கூட அமைச்சராகக் கூட இருந்திராத ராகுல் காந்தியின் அனுபவத்தையும் ஒப்பிடுவார். அவரது சிறந்த பேச்சாற்றலையும், பொது வெளியில் அனுபவமின்றி பேசும் ராகுல் காந்தியையும் ஒப்பிடுவார். தேர்தலுக்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னால், ராகுலை தொலைக்காட்சியில் நேரடி விவாதத்துக்கு அழைப்பார். இந்தி மொழியில் என்பதை குறித்துக் கொள்ளவும். இது கொள்கைகளுக்கு இடையேயான மோதல். ஆளுமைகளுக்கு இடையே அல்ல என்று கூறி ராகுல் அதை நிராகரித்தாரேயானால் மோடிக்கு ஆதரவான தொலைக்காட்சி சேனல்கள், அஞ்சி ஓடும் ராகுல் என்று செய்தி வெளியிட்டு, அதை வாரக்கணக்கில் தொடர்ந்து வெளியிடும்.

பெர்க்ளியில் ஒரு உரையாடலின்போது, ஒரு தனி நபரை விட குடும்பத்தின் பாரம்பரியம் முன்னிறுத்தப்படுவது இந்திய வழக்கம் என்றும், அது அரசியலுக்கு மட்டும் உரித்தானதல்ல என்று கூறினார். இது ஒரு வகையில் பாதி உண்மை. கிரிக்கெட் வீரர் எம்எஸ்.தோனியும், இன்போசிஸ் முன்னாள் இயக்குநர் நந்தன் நிலன்கேணியும் கொண்டாடப்படுவதன் காரணம், தோனி மும்பையைச் சேர்ந்தவர் அல்ல. அவர் ராஞ்சியை சேர்ந்தவர். நிலன்கேணி பிர்லா, டாட்டா அல்லது அம்பானி குடும்பத்தைச் சேர்ந்தவர் அல்ல. இந்தியர்கள், பின்தங்கி குடும்பத்தில் இருந்து வருபவர்களையும், வறுமை பின்புலத்தில் இருந்து முன்னேறுபவர்களையும் வியந்து வாழ்த்துகின்றனர். சில குழந்தைகள், தங்கள் பெற்றோரின் வெற்றியைப் பார்த்து கற்றுக் கொண்டு அதே துறையில் முன்னேறுகின்றனர் என்பது உண்மையே. ஒரு கணக்காளராகவோ, அல்லது ஒரு வழக்கறிஞராகவோ, தனது பெற்றோரின் தடத்தையொட்டி ஒரு மகனோ அல்லது மகளோ, அத்துறையை தேர்ந்தெடுப்பதை வரவேற்கலாம் என்றாலும், ஐந்தாவது தலைமுறையாக இந்தியாவின் பழமையான அரசியல் கட்சியின் வாரிசு அக்கட்சிக்கு தலைமையேற்பது என்பது, விரும்பத்தக்கதல்ல.

nehru - patel - gandhi

நேருவுடன் மகாத்மா காந்தி, வல்லவாய் படேல்

நேருவுக்கு எதிராகவோ, பட்டேலுக்கு ஆதரவாகவோ, அல்லது நேருவை மட்டம் தட்டியோ மோடி பேசினால், உடனயடியாக ட்விட்டரில், வரலாற்றை திரிக்க நினைக்கும் மோடியின் செயல் சுட்டிக்காட்டப்படுகிறது. நேருவும் பட்டேலும், ஒன்றாக பணியாற்றியவர்கள், எதிரிகள் அல்ல. தனியாகவும் இணைந்தும் பணியாற்றிய நேருவும் பட்டேலும், இந்தியாவின் ஜனநாயக அடித்தளத்தை உருவாக்கினார்கள். ஆனால், பல நேர்வுகளில் நேரு செய்த தவறுகளை சுட்டிக்காட்டி திருத்தியுள்ளார் பட்டேல். ஆனால் மீண்டும் மீண்டும், பிரதமர் மோடி மற்றும் பிஜேபி செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவதன் மூலம், பிஜேபி மற்றும் மோடி ஆகியோர் விரித்த வலையில் நாம் விழுகிறோம். விவாதத்தை தற்போதுள்ள பிரச்சினைகளில் இருந்து திசைதிருப்பி, மீண்டும் கடந்த காலத்துக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்பதே, மோடி மற்றும் பிஜேபியின் நோக்கம். காங்கிரஸ் கட்சியின் பரம்பரை அரசியலை தாக்க எப்பொதெல்லாம் மோடிக்கு வாய்ப்பு இருக்கிறதோ, அதை அவர் தவறாமல் செய்வார். தனது செயல்பாடுகள் மற்றும் தவறிய வாக்குறுதிகளில் இருந்து விவாதத்தை திசைத்திருப்ப இதை அவர் பயன்படுத்திக் கொள்வார்.

சீனாபோடு தற்போது உள்ள தோக்லாம் சிக்கல் குறித்து கேள்வி எழுப்பினால், 1962ல், நேரு, சீனாவுடனான போரை தவறாக கையாண்டது குறித்து பேசுவார். அடுத்து, இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட சமயத்தில், படைப்பு சுதந்திரத்தையும் கருத்து சுதந்திரத்தையும் பறித்தார் என்று பேசுவார். சிறுபான்மையினர் மீதான தாக்குதல் குறித்து பேசுவார். 1986ம் ஆண்டு, ஷா பானு வழக்கு தீர்ப்புக்கு எதிராக, சிறுபான்மையினருக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வந்ததைப் பற்றி பேசுவார். கடந்த 20, 40 அல்லது 60 ண்டுகளுக்கு முன்னால் உள்ள விஷயங்களைப் பற்றி விருப்பத்தோடு பேசுவார் மோடி. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின், தாய், தந்தை, பாட்டி, கொள்ளுத் தாத்தா ஆகியோரால்தான், இந்தியா சீரழிந்தது குறித்து பேசுவார். ஆனால் தற்போது உள்ள பிரதமரின் தோல்விகள் குறித்து விவாதிக்க மறுப்பார்.

தற்போது தேர்ந்தெடுத்துள்ள தலைவரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் கட்சிக்கென்று பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், அவர்தான் தலைவர் என்று அவர்கள் பிடிவாதமாக இருக்கும் வரை, அதனால் வரும் விமர்சனங்களை அவர்கள் தாங்கித்தான் ஆக வேண்டும். நேருவின் கொள்ளுப் பேரன் அவரின் கொள்ளுப் பேரன் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கிறார், இருப்பார் என்றால், மோடி அது குறித்து மீண்டும் மீண்டும் பேசி, அவரது முன்னோர்களின் தவறுக்கு, அவர்களின் தற்போதைய வாரிசே பொறுப்பு என்பதை தொடர்ந்து வலியுறுத்துவார். இதனாலேயே, காங்கிரசுக்கு எதிராக நாடு வாக்களிக்க வேண்டும் என்று கோருவார்.

மாறாக, ஒரு சிங்கோ, ஒரு நேகியோ, ஒரு திவானோ, ஒரு கங்குலியோ காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஆகியிருப்பாரே என்றால், மோடி ஒரு நாளும் வல்லபாய் பட்டேல் குறித்து ஒரு வார்த்தை கூட பேசியிருக்க மாட்டார். வாரிசல்லாத ஒரு நபர் தலைவராகியிருந்தால், மோடியால், தனது அரசின் தவறுகளை மறைக்க முடியாமல் போயிருக்கும். தன் தோல்விகளை மறைக்க ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கும். தன் தவறுகளை பின்னுக்குத் தள்ளி, 40 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள தலைவர்களை குறை சொல்ல வாய்ப்பு இருந்திருக்காது.

(இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 09.02.18 அன்று ராமசந்திர குஹா ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்)

தமிழில் : ஆ.சங்கர்

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close