ஆர்.கே.நகர் தொகுதி அதகளப்படுவது ஏன்?

ஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?யாருக்கும் யாருக்கும் போட்டி? ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் என்ன நடக்கிறது. ஏன் இத்தனை ஆர்ப்பாட்டம்?யாருக்கும் யாருக்கும் போட்டி? ஜெயிக்கப் போவது யார் என்பதை அலசுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Election 2019 Tamil nadu

Election 2019 Tamil nadu

இரா.குமார்

தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையும் இப்போது ஆர்.கே. நகர் தொகுதியில்தான் இருக்கிறது. பொதுவாக, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலால் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆளுங்கட்சி வெற்றி பெற்றால், அரசின் சாதனைக்குக் கிடைத்த வெற்றி என்று சொல்லிக்கொள்வார்கள். எதிர்க்கட்சி வெற்றி பெற்றால், இந்த அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது என்று சொல்வார்கள். இதற்குமேல் எதுவும் நடக்காது. ஒரு இடைத் தேர்தல் முடிவு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திவிடாது. ஆனாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல, ஒரு தொகுதியில் நடக்கும் இடைத் தேர்தலின் முடிவு, அரசு மீதான மக்களின் எண்ணத்தை பிரதிபலிப்பதாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இப்போது அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆளுங்கட்சி தனது அதிகார பலம், பண பலம் ஆகிய அனைத்தையும் பயன்படுத்தி வெற்றி பெற்றுவிடுகிறது. சமீப காலமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலைதான் உள்ளது.

Advertisment

ஆனால், இபோது நடைபெறும் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அப்படிச் சொல்ல முடியவில்லை. காரணம் ஆளுங்கட்சியான அதிமுக பிரிந்து கிடக்கிறது. எதிர்க்கட்சியான தி.முக கூட்டணியில் காங்கிரசும் வேறு சில கட்சிகளும் ஏற்கனவே உள்ளன.போதாக்குறைக்கு மற்ற முக்கிய கட்சிகளான, கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகியவையும் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த சூழ்நிலையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெறுவார் என்ற பலமான எதிர்பார்ப்பு உள்ளது. கருத்துக் கணிப்புகளும் அப்படித்தான் சொல்கின்றன.

வெற்றிக்காக போராடுவதை விடவும் இரண்டாவது இடத்தைப் பிடிப்பதற்கான போட்டிதான், ஆர்,கே. நகர் தொகுதியை அதகளப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஆர்.கே. நகர் தொகுதிக்கு, கடந்த ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தீவிர பிரச்சாரம் நடந்து வந்த நிலையில், பணப்பட்டுவாடா அதிகம் நடந்ததைக் காரணம் காட்டி தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம். திமுக சார்பில் அப்போது போட்டியிட்ட அதே வேட்பாளர்தான் இப்போதும் போட்டியிடுகிறார். பாஜக, வேட்பாளரை மாற்றியுள்ளது.

Advertisment
Advertisements

அதிமுகவைப் பொருத்தவரை நிலைமை மாறியுள்ளது. அப்போது ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். அந்த தொகுதியில், இருக்கும் மதுசூதனனின் உள்கட்சி எதிரியான அமைச்சர் ஜெயக்குமார் அப்போது சசிகலா அணியில் இருந்தார். சசிகலா அணி சார்பில், சசிகலாவின் அண்ணன் மகன் தினகரன் போட்டியிட்டார். இரட்டை இலை முடக்கப்பட்டதால், இரு அணியும் புதிய சின்னத்தில் போட்டியிட்டன.

இப்பொழுது அதிமுகவில் நிலைமை மாறிவிட்டது. சசிகலா அணியில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலாவையும் அவரது குடும்பத்தினரையும் ஓரங்கட்டினார். இதனால், சசிகலா அணி, இபிஎஸ் (எடப்பாடி பழனிச்சாமி) அணி ஆனது. ஓபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் இணைந்தன. சசிகலா அணி டிடிவி தினகரன் தலைமையில் செயல்பட்டு வருகிறது. இபிஎஸ்- ஓபிஎஸ் அணிதான் அதிமுக என்று, தேர்தல் ஆணையம் உறுதி செய்து, முடக்கி வைத்திருந்த இரட்டை இலை சின்னத்தை மீண்டும் வழங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில்தான் ஆர்கே நகர் தொகுதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக (இபிஎஸ்-ஓபிஎஸ் அணி) வேட்பாளராக மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி சார்பில் தினகரனே மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த முறை, தினரனுக்காக வரிந்துகட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்த இபிஎஸ் அணியினர் இப்போது மதுசூதனனுக்க்கு பிரச்சாரம் செய்கின்றனர். அதிமுக வேட்பாளரைவிட அதிக வாக்குகள் பெற்று, தாங்கள்தான் அதிமுக என்று மக்களிடம் நிரூபிக்க வேண்டும் என்று தினகரன் போராடுகிறார். இதே நிலைதான் இபிஎஸ்- ஓபிஎஸ் அணிக்கும். தினகரனைவிட அதிக வாக்குகள் பெற போராடுகின்றனர். தினகரனும் மதுசூதனனும் திமுக வேட்பாளரை போட்டியாக நினைக்கவில்லை. இவர்கள் இருவரும்தான் ஒருவரை ஒருவர் போட்டியாளராக நினைக்கின்றனர். இந்த தேர்தல் முடிவு அதிமுகவில் சில மாற்றங்களை ஏற்படுத்தும்.

இந்த தேர்தலில் தினகரனைவிட மதுசூதனன் அதிக வாக்குகள் பெற்றால், இப்போது தினகரன் அணியில் இருக்கும் சிலர், அவரைவிட்டு விலகி எதிர் அணிக்குத் தாவுவார்கள். அவ்வளவுதான். ஆனால், தினகரன் அதிக வாக்குகள் பெற்றால், அது ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். பதவிக்காக, ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இருக்கும் பலர் சசிகலா அணிக்கு வருவார்கள். அதிமுகவில் இப்போது அமைச்சர்களாக உள்ள சிலரே தினகரன் ஆதரவாளர்கள்தான். அவர்கள் தினகரனுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வாய்ப்புள்ளது. சில எம்.எல்.ஏ.க்கள் தினகரன் பக்கம் வந்தாலும் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும். இதனால், ஆர்.கே. நகர் இடைத்தேர்தல், இபிஎஸ், ஓபிஎஸ்க்கும் தினகரனுக்கும் வாழ்வா சாவா பிரச்னை என்றுகூட சொல்லலாம். அதனால், எப்பாடுபட்டாது அதிக வாக்குகள் பெற்றாக வேண்டும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் அணியினரும் தினகரன் அணியினரும் வரிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியுள்ளனர். வாக்காளர்களைக் கவர என்னென்ன வழிகள் உண்டோ அத்தனையையும் கையில் எடுத்துள்ளனர். பணம் வாரி இறைக்கப்படுகிறது. இதனால்தான் ஆர்கே நகர் தொகுதி அதகளப்படுகிறது. வெற்றிக்குப் போட்டியிடுவதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தை பிடிக்க பகீரதப் பிரயத்தனம் செய்யும் விநோதமான நிலையை ஆர்கே நகரில் பார்க்க முடிகிறது.

ஆர்கே நகரில் யார் வெற்ற்றி பெறுவார் என்பதைவிட, மதுசூதனன் அதிக வாக்குகள் பெறுவாரா? தினகரன் அதிக வாக்குகள் பெறுவாரா என்ற எதிர்பார்ப்புதான் மக்களிடமும் உள்ளது. தினகரனுக்குப் பெரிய அளவில் ஆதரவு இருக்காது என்று கருதப்பட்டது. ஆனால் உண்மை அது இல்லை என்று தெரிகிறது.

தர்மயுத்தம் தொடங்கிய ஓபிஎஸ், பேரம் பேசி, துணை முதல்வர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வாங்கிக்கொண்டு, இபிஎஸ்சுடன் சேர்ந்ததை அவரோடு இருந்த அதிமுக தொண்டர்கள் விரும்பவில்லை. எம்ஜிஆர் ரசிகர்களும் அதிமுக மீது ஆழ்ந்த பற்றுகொண்ட அக்கட்சியின் தொண்டர்களும் ஒருநாளும் திமுகவுக்கு வாக்களிக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அதிமுக வாக்காளர்கள் பலர் ஓபிஎஸ் மீதும் இபிஎஸ் மீதும் வெறுப்பில் இருக்கிறார்கள். இந்த வெறுப்புணர்ச்சி, தினகரனுக்கு ஆதரவாக மாறியுள்ளது. மதுசூதனனைவிடவும் தினகரன் முன்னேறி வருகிறார் என்றே தகவல்கள் வருகின்றன. லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் நடத்திய கருத்துக் கணிப்பும் இதைத்தான் சொல்கிறது. இது நடந்தால், தமிழக சட்டப் பேரவைக்கு விரைவில் தேர்தலை எதிர்பார்க்கலாம்.

ஆம். இப்போதே, மோடியும், கவர்னரும் முட்டுக்கொடுத்துதான் இபிஎஸ் அரசைக் காப்பாற்றிக்கொண்டுள்ளனர். ஆர்கே நகரில் மதுசூதனனைவிடவும் தினகரன் அதிக வாக்குகள் வாங்கினால், யார் முட்டுக்கொடுத்தாலும் இபிஎஸ் அரசைக் காப்பாற்ற முடியது என்ற நிலை ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

Ra Kumar

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: