Advertisment

சிலைகள், பூங்காங்கள் ஏன் தலித் சின்னங்களாக கொண்டாடப்பட வேண்டும்?

ஒடுக்கப்பட்டவர்கள் பொது இடத்திலும், சரித்திரத்திலும் தங்களுடைய உரிமையான பங்கை கோருவதற்கு வழி இருக்கிறது.

author-image
WebDesk
New Update
Why statues parks celebrating Dalit icons matter

Sameena Dalwai 

Advertisment

celebrating Dalit icons matter : லக்னோவில் உள்ள அம்பேத்கர் பூங்காவுக்கு நான் செல்வதற்கு முன்பு, அருவருப்பான சிலைகள், யானைகளைக் கொண்ட காட்சிகள், கோடி கணக்கான ரூபாய் பணம், நிலம் பெரும் அளவு வீணாக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் ஒரு மருத்துவமனை அமைத்திருக்கலாம். எங்கு பார்த்தாலும் பர்சுடன் கூடிய மாயாவதியின் சிலைகள்-எவ்வளவு அநாகரீகம் என கடந்த சில ஆண்டுகளாக என் காதில் கேட்ட அனைத்து வகையான விமர்சனங்களும் மீண்டும் என் காதுகளுக்குள் எதிரொலித்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கூட, மாயாவதி இப்படி பொதுமக்களின் பணத்தை உபயோகித்து சிலைகள் எழுப்பியிருக்கிறார்.அதற்கான செலவை அவர் அரசுக்கு திருப்பிச் செலுத்த வேண்டும் என்று கருத்துத் தெரிவித்தனர்.

இவையெல்லாம் என் தலைக்குள் எதிரொலித்தபடி இருந்ததால், நானும் ஒரு ஏமாற்ற மனநிலைக்கு தயாராகி இருந்தேன். ஆனால், அந்த பூங்காவுக்குள் நுழைந்தபோது, அதன் முழுமையான பெரிய அளவிலான பரப்பில் அமைந்த பிரமாண்டத்தால் வியந்துபோனேன். ஒரு பரந்த திறந்த வெளியில் பல கட்டமைப்புகள் இருந்தன. அசோக சக்கரத்துடன் கூடிய பெரிய தூண், மரங்களின் வரிசை, கற்களால் ஆன யானை சிலைகள் ஆகியவை காணப்பட்டன. மகாத்மா ஜோதிராவ் பூலே, சாஹூ மகராஜ், கபீர்,ரவிதாஸ், புத்தர், பிர்ஷா முண்டா, கடைசியாக அம்பேத்கர், கன்சிராம் ஆகியோரின் சிலைகள் மற்றும் கதைகள் வாயிலாக சமூக சீர்திருத்த வரலாறு அங்கு உயிர்ப்போடு இருக்கிறது. சாதி அல்லது பாலின ஒடுக்குமுறை, முற்றிலும் மாறுபட்ட சமுதாயத்தை கற்பனை செய்தவர்களின், அதற்காக பாடுபட்டவர்களின் கண்ணோட்டங்களை காணமுடிந்தது. பூலே, சாவித்திபாய் ஆகியோர் பெண் குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதை நாம் பார்த்தோம், பிர்ஷா முண்டா ஆங்கிலேயர் ஆட்சியில் போரிட்டார், சைக்கிளில் கன்சிராம் ஆகியவற்றையும் பார்த்தோம். பள்ளிகளில் அரிதாக கற்பிக்கப்படும் பகுஜன் வரலாறு, சிலைகள் மற்றும் படங்கள் இங்கே கதை வாயிலாக விளக்கப்பட்டுள்ளது.

நம் வரலாறு என்ன? நாம் எங்கிருந்து வந்தோம் என்பதை புரிந்து கொள்ளும் முயற்சி, என்ன பாரம்பர்யத்தை நாம் கொண்டிருக்கின்றோம். ஆனால், பேரரசர்கள் மற்றும் போர்கள் குறித்துதான் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. வாழ்ந்து மறைந்த ஒடுக்கப்பட்டவர்கள், பெண்கள், விவசாயிகள், கைவினைஞர்கள் பற்றி நாம் மிகவும் அரிதாகத்தான் தெரிந்து கொள்கின்றோம். இந்தியாவில் ஹரப்பா நாகரீகம் இருந்தது அல்லது பொருள் கலாச்சாரத்தின் எச்சங்களிலிருந்து பெருவில் உள்ள இன்காக்கள் என்பது பற்றி நமக்குத் தெரியும். அமெரிக்காவில் அடிமைகளாக இருந்த ஆப்ரிக்கர்களைப் பற்றி தெரிந்து கொள்ள வரலாற்றை வெளிப்படுத்த அந்த நாடு எதைக் கொண்டிருக்கிறது. இரும்பு சூட்டுக்கோல், கைவிலங்குகள், கழுத்து விலங்குகள் மற்றும் சாட்டைகள் ஆகியவற்றைக் கொண்ட அடிமை கண்காட்சியங்கள் அமெரிக்கா, இங்கிலாந்தில் இன்றைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்தியாவில் தலித்கள் தங்கள் அடையாளமாக எதை காட்சிப்படுத்துவார்கள்? பிராமண சமுதாயத்தவர்களுக்கு கோயில்கள் உள்ளன. க்ஷத்திரியர்கள் அவர்களின் கோட்டைகள், வைசியர்கள் அவர்களின் பஜார்களையும், சூத்ரர்கள் தங்களது கைவினைப் பொருட்களையும் காட்சிப்படுத்துவர். ஆனால், தலித்கள் எதை காட்சிப்படுத்துவார்கள்? மகராஷ்டிராவின் சில கிராமங்களில் மங்கிரா கோயில்கள் கொடூரமான கடந்த காலத்தைப் பற்றி பேசுகின்றன.கிராமத்தினர் புதிய எல்லை சுவர் அல்லது சுவர் எழும்ப ஆரம்பித்திருக்கின்றனர் என்றும், அவர்கள் நல்ல அதிர்ஷ்டத்திற்காக ஒரு மாங் இளைஞனை பலி கொடுப்பார்கள் எனவும் நம்ப ப்படுகிறது. அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்படுகிறது. இன்று தலித்துகள் இந்தக் கொடுமையான வரலாற்றின் வாரிசுகளாக இருக்கின்றனர்.

ஒவ்வொரு கிராமத்திலும் தலித்களை வெளியே வைத்து "சாதி புவியியல்" மூலம் வரையறை செய்யப்படுகிறது. அடிமை பணிகள் உள்ளிட்ட காரணங்களைத் தவிர அவர்கள் கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் செருப்பு அல்லது தலைகவசம் அணிய அனுமதிக்கப்படுவதில்லை. கிராமத்தின் வழியே அவர்களின் திருமண ஊர்வலம் நடைபெறாது. அவர்கள் சிமெண்ட்டால் ஆன வீடு கட்ட முடியாது அல்லது ஒரு குறிப்பிட்ட உயரத்துக்கு மேலே வீடு கட்ட முடியாது. என்ன பாரம்பர்யத்துக்கு அவர்கள் உரிமை கொண்டாடுவார்கள்?

2018ஆம் ஆண்டு ஜனவரியில் மஹகர்களின் பீமா கோரேகான் வருடாந்திர யாத்திரை வலது சாரிகளால் தாக்குதலுக்கு உள்ளானது. இது பீமா கோரேகான் சண்டையின் 200வது ஆண்டாகும். புனேவின் கடைசி பேஷ்வாக்கள் மீதான சண்டையில் பிரிட்டிஷ் ஒரு தீர்க்கமான வெற்றியைப் பெற்றது. உயர் சாதி மகாராஷ்டிரர்கள் இது இந்தியர்களின் தோல்வி என புலம்பினர். ஆனால், பேஷ்வா ஆட்சி தலித்துகளுக்கு அடக்குமுறையாக இருந்தது. சித்பவன் கோகனாஸ்த பிராமணர்கள் மட்டுமே ராணுவத்தில் உயர் பதவிகளை வகித்தனர். சாஹுகாரர்கள் மற்றும் பூசாரிகள் நிதி மற்றும் மத அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். அதிகப்படியான வரிகள் மூலம் விவசாயிகளிடம் வருமானத்தைப் பிடுங்கினர். தீண்டத்தகாதவர்களை மனிதாபிமானமற்ற முறையில் மந்தைகளைப் போல நடத்தினர். புனே நகர சுவர்களில் மஹர்கள் கழுத்தில் துப்புவதற்காக ஒரு மண் பானையையும், இடுப்பில் ஜாதுவையும் அணிந்து கொள்ள சட்டம் என்றபெயரில் கட்டுப்படுத்தப்பட்டனர். சாலைகளில் அவர்கள் நடந்து செல்லும்போது தங்கள் பாதசுவடுகளையும் அழிக்கும்படி கூறப்பட்டனர். மஹர் பெண்கள் பாலியல் தொழிலுக்காக விற்பனை செய்யப்பட்டனர். இளம் பிராமண விதவைகள் தலைமழிக்கப்பட்டனர். குடும்பத்துக்குள் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கபட்டனர். தொடர்ந்து அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.

ஆண்டுதோறும் டிசம்பர் 6ம் தேதியன்று அம்பேத்கர் ஜெயந்தியின்போது மஹர் சமூகத்தை சேர்ந்தவர்கள் தாதர் சைத்யபூமியில் கூடி புத்தமதத்துக்கு மாறுகின்றனர். பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மாநிலத்தின் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வருகின்றனர். மும்பையில் உள்ள சிவாஜி பார்க் யாத்திரை ஸ்தலம் போல மாறி விடுகிறது. ஆனால், அந்த பகுதியில் வசிப்போர் இந்த கூட்டங்களை வெறுப்பாக பார்க்கின்றனர். அரசு போதுமான வசதிகளை இங்கு ஏன் செய்ய வில்லை என்று யாரும் கேட்பதில்லை. அமர்நாத் யாத்திரை, பந்தர்பூர், ஹஜ் யாத்ரீகர்களுக்கு மானியம் வழங்கப்படுவதுடன் உரியமுறையில் நிர்வகிக்கப்படுகின்றன.

கிராமங்களுக்கு வெளியே உள்ள அம்பேத்கர் சிலைகள் வரலாற்றில் ஒரு இடத்தை அல்லது புவியல் ரீதியாக ஒரு இடத்தை கோருவதற்கான முயற்சி என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். தலித் சமுதாயத்தை சேர்ந்த பெண் முதலமைச்சராக மாயாவதி முதன்முதலாக பதவி ஏற்கும்முன்பு தலித்கள் தங்களுக்கு சொந்தமான கட்டமைப்பு என்று அழைக்கக் கூடிய வகையிலான எதையும் கட்டுவதற்கான அதிகாரமோ அல்லது பணபலமோ கொண்டிருக்கவில்லை. இந்த அம்பேத்கர் சிலைகள் எல்லாம் சர்தார் படேல் அல்லது சிவாஜி சிலைகள் அல்லது பால்தாக்ரே நினைவிடம் ஆகியவற்றை விடவும் வரிசெலுத்துவோருக்கான அதிக சுமையைக் கொண்டவையா?

லக்னோ பூங்காவில், நாக்பூரில் இருந்து வந்திருந்த ஒரு தலித் குழுவை சந்தித்தேன். அவர்கள் நாளந்தா பல்கலைக்கழகம் முதல் பீகாரின் போத்கயா மற்றும் நேபாளின் லும்பினி வரை நீண்ட யாத்திரை மேற்கொண்டிருந்தனர். அம்பேத்கர் பூங்காவானது, மதம் மற்றும் அரசியல் ரீதியாக அவர்கள் பயணத்தின் ஒரு பகுதியாக இருக்கிறது. பூங்காவில் மகிழ்ச்சியானது ஒரு தொற்று போல அவர்களிடம் ஊடுருவி இருந்தது. அவர்கள் தங்கள் செருப்புகளை கழற்றி வைத்து விட்டு, மிகுந்த பயபக்தியுடன் சிலைகளுக்கு முன்பு பிரார்த்தனை செய்தனர். பெண்கள் பூங்கா முழுவதும் சுதந்திரமாக சுற்றி வந்தனர்.

புனிதர் ரவிதாஸின் பேகம்புரா கவிதை எனக்கு நினைவுக்கு வருகிறது. சீக்கிங் பேகம்புரா (In Seeking Begumpura), புத்தகத்தை எழுதிய கெய்ல் ஓம்வெட் இதை கற்பனாவாதத்தின் பார்வை என்று அழைக்கிறார், இது பிற்கால போராட்டங்கள் மற்றும் சாதி எதிர்ப்பு அறிவுஜீவிகளின் கோட்பாட்டின் அடிப்படையாகும் என்று சொல்கிறார்.

சோகமற்ற பெயர் கொண்ட அரச சாம்ராஜ்யம்: / அவர்கள் அதை பேகம்புரா என்று அழைக்கிறார்கள், வலி இல்லாத இடம்,/ வரி அல்லது பராமரிப்பு இல்லை, யாருக்கும் அங்கு சொத்து இல்லை, / எந்த தவறும், கவலையும், பயங்கரவாதமும் அல்லது சித்திரவதையும் இல்லை./ ஓ என் சகோதரனே, நான் அதை என் சொந்தமாக எடுத்துக் கொள்ள வருகின்றேன்,/ எல்லாம் சரியாக இருக்கும் எனது தொலைதூர வீடு./ அந்த ஏகாதிபத்திய ராஜ்ஜியம் பணக்காரதனமானது மற்றும் பாதுகாப்பானது,/ யாரும் மூன்றாவது அல்லது இரண்டாவது இல்லை - அனைவரும் ஒன்றுதான்;/ அவர்கள் இதை செய்கிறார்கள் அல்லது அதைச் செய்கிறார்கள், அவர்கள் விரும்பிய இடத்தில் நடக்கிறார்கள் ,/ அவர்கள் கட்டுக்கதையான அரண்மனைகளில் தடையின்றி உலா வருகிறார்கள்./ ஓ, இப்போது தோல் பதனிடும் தொழிலாளி விடுவிக்கப்பட்டார் என கூறுகிறார் ரவிதாஸ்/என் அருகில் நடப்பவர்கள் என் நண்பர்கள்.

இந்த கட்டுரை முதலில் டிசம்பர் 7,2021 அச்சு இதழில் The architecture of justice’ என்ற தலைப்பில் வெளியானது. கட்டுரையின் எழுத்தாளர் ஜிண்டால் குளோபல் சட்டப் பள்ளியின் பேராசிரியர்

தமிழில் ரமணி

Dalit Politics
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment