Advertisment

செய்வீர்களா ராகுல் காந்தி

காங்கிரஸ் பழம்பெரும் கட்சிதான். ஆனால் இளைஞர்களை புதுமைகளை உள்ளடக்கிய கட்சி. தற்போதைய பாஜக மோடி அரசு மக்களை கற்காலத்திற்கு கொண்டு செல்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
காங்கிரஸ் கட்சி, பொதுத் தேர்தல்

சுகிதா

Advertisment

(காங்கிரஸ் கட்சி நிறுவன தினம் இன்று. அதையொட்டி இந்த சிறப்புக் கட்டுரை வெளியிடப்படுகிறது)

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா காந்தி 1998ம் ஆண்டு பொறுப்பேற்ற போது காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் 4 மட்டும் தான். அதே போன்று தற்போது 4 மாநிலங்களில் மட்டுமே காங்கிரஸ் ஆட்சி உள்ள நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ஆகியிருக்கிறார் ராகுல் காந்தி. 131 ஆண்டு கால பழமையான கட்சி, மோதிலால்நேரு, ஜவஹர்லால் நேரு, இந்திரா, ராஜூவ், சோனியா வரிசையில் நேரு - காந்தி குடும்பத்தில் இருந்து 6 வது நபராக ராகுல் அகில இந்தியா காங்கிரஸ் கட்சிக்கு தலைவராகி இருக்கிறார். 2004ம் ஆண்டு கட்சியில் சேர்ந்த ராகுல் காந்திக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட்டது. 2007ல் பொது செயலாளர், 2013ல் துணை தலைவர் என்று 13 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் படிபடியாக முன்னேறி தற்போது காங்கிரஸ் தலைவராகி இருக்கிறார். ஹார்வர்டு,டிரினிட்டி,கேம்பிரிட்ஜ் பல்கலைகழகங்களில் உயர்கல்வி, லண்டனில் மூன்றாண்டுகள் கன்சல்டிங் குருப்பில் பணியாற்றிய அனுபவம் என்று ராகுலின் இளமை காலம் இந்தியாவிற்கு வெளியே தான் இருந்தது. 2004க்கு பிறகு தான் இந்திய அரசியலை ராகுல் உற்றுநோக்க ஆரம்பித்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி மத்தியில் ஆட்சி பொறுப்பேற்று பிரதமரானார் மன்மோகன் சிங். 2014 வரை 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. ஆட்சியில் எந்த பொறுப்பும் வேண்டாம் கட்சியை வளர்ப்பதே நோக்கம் என்று அமைச்சர் பொறுப்புகளை கூட வாங்கிக் கொள்ளாமல் ஆட்சி நிர்வாகத்தில் ராகுல் ஒதுங்கி இருந்தார்.

2014 காங்கிரஸ் படுதோல்வி, அடுத்து வந்த உத்திரபிரதேச தேர்தல் தோல்வி என்று காங்கிரஸ் இறங்குமுகம் நோக்கி நகரும் போது பாஜக வசம் 16 மாநிலங்கள் சென்றுவிட்டது. பிரதமர் மோடி பொறுப்பேற்ற பிறகு தாய்லாந்துக்கு ராகுல் ஓய்வெடுக்க சென்றது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 44 மக்களவை தொகுதிகள் மட்டுமே பெற்றிருந்த நிலையில் அடுத்து வந்த 5 மாநில தேர்தலில் உத்திர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூரில் காங்கிரஸ் பஞ்சாப் தவிர மற்ற மாநிலங்களை இழந்தது. குஜராத் தேர்தல் காங்கிரசிற்கு வாழ்வா, சாவா போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய நிர்பந்தம். மதவாதம், பாஜகவின் இந்துத்வ பிரச்சாரம், மோடியின் பொருளாதார சீர்திருத்தம் என்று மக்கள் புழுங்கிக் கொண்டிருந்த வேளையில் ராகுலை தலைமை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் சோனியா காந்தி. தான் பொறுப்பேற்ற சில காலம் எதிர்கட்சியாக பல சவால்களை சந்தித்ததாக ராகுலின் பதவி ஏற்புவிழாவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக சோனியா நெகிழ்ச்சியோடு கடைசி உரை ஆற்றினார். ராகுல் மீது தனிநபர் அவதூறு தாக்குதல்கள் பல பாஜக தேர்தல் களத்தில் நடத்தியுள்ளது. அவற்றை அவர் பொறுமையாக கையாண்டது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு சிறந்தது. வெறுப்பு அரசியலின் நெருப்பாற்றில் நீந்தி வந்துள்ளார் ராகுல் என்று குறிப்பிட்டார்.

இந்த இடத்தில் சோனியாவின் உரையை இப்படியாக புரிந்துக் கொள்வதுஅவசியம். இந்திரா, ராஜூவ் என்று அடுத்தடுத்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு தலைவர்களை அரசியல் சூழ்ச்சியால் காங்கிரஸ் கட்சி அநியாயமாக இழந்துள்ளது. அந்த இடத்தில் இருந்து தான் சோனியாசொல்லும் ராகுலின் பொறுமையை அர்த்தம் கொள்ள வேண்டும். நேரு மூன்றாண்டுகள், இந்திரா மற்றும் ராஜூவ் காந்தி தலா 8 ஆண்டுகள் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவராக இதற்கு முன்பு இருந்தவர்களை விட அதிகமாக 19 ஆண்டுகள் சோனியா காங்கிரஸ் வரலாற்றில் தலைவராக இருந்துள்ளார். 19 ஆண்டு காலம் சோனியாவின் தலைமையில் காங்கிரஸ் பல ஏற்றங்களையும் இறக்கங்களையும் சந்தித்திருந்தாலும் ராகுல் தற்போது காங்கிரசை வழிநடத்தும் தருணம் பல இமாலய சவால்களை சந்திக்க வேண்டிய தருணம்.

”காங்கிரஸ் பழம்பெரும் கட்சிதான். ஆனால் இளைஞர்களை புதுமைகளை உள்ளடக்கிய கட்சி. தற்போதைய பாஜக மோடி அரசு மக்களை கற்காலத்திற்கு கொண்டு செல்கிறது. அவர்கள் நம்மிடையே பிரிவினையை விதைக்கிறார்கள். நாம் ஒற்றுமையை முன்னெடுப்போம். வெறுப்பை உமிழ்கிறார்கள். வெறுப்பை வெறுப்பால் வெல்ல முடியாது. நாம் அன்பால் அரவணைப்போம். நாம் பாஜகவினரை சகோதர சகோதரிகளாக பாவிப்போம். பாஜக மக்கள் குரல்களை ஒடுக்குகிறது. நாம் மக்கள் குரலை அனுமதிப்போம். அதற்காக போராடுவோம். இவை 13 ஆண்டு காலமாக காங்கிரஸ் கட்சியிடமும் தொண்டர்களிடமும் நான் கற்றுக் கொண்ட பாடம். காங்கிரஸ் முன்னோடிகளின் நிழலில் அவர்கள் வகுத்துக் கொடுத்த பாதையில் பயணிப்பேன்.” இது தான் ராகுல் அகில இந்திய காங்கிரஸ் தலைவரானதும் பேசிய முதல் உரை. மிகவும் பக்குவமான உரை. ஆனால் ராகுலின் இந்த உரையை சிலாகிப்பதற்குள் குஜராத் -இமாச்சல தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கைவசம் இருந்த இமாச்சல பிரதேச மாநிலமும் பாஜகவிற்கு தாரை வார்க்கைப்பட்டது. ராகுலின் தலைவர் பொறுப்பு அறிவிக்கப்பட்டது. மிக மிக தாமதமான முடிவு. காங்கிரஸ் குறிப்பாக சோனியா செய்த பெருந்தவறு. ஒரு வேளை இந்த அறிவிப்பை குஜராத் தேர்தலுக்கு முன்பே அறிவித்திருந்தால் குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கும் வாய்ப்பு கூட கிட்டி இருக்கும்.

ஏனெனில் குஜராத், பிரதமர் மோடி -அகில இந்திய பாஜகவின் தலைவர் அமித்ஷாவின் கோட்டை, 22 ஆண்டு காலமாக ஒரே கட்சிக்கு வாக்களிக்கும் வினோத குஜராத் மக்கள் என்று எதிராளிக்கு பல சாதகங்கள் இருக்கும் போது அதனை எதிர்கொள்ள முன்பே திட்டிமிட்டிருக்க வேண்டாமா? எனினும் மண்ணின் மைந்தர்களான மோடி-அமித்ஷாவை டெல்லி விருந்தாளியாக குஜராத்துக்கு சென்ற ராகுல் 77 இடங்களை பெற்று பாஜகவின் கோட்டையை அசைத்துப் பார்த்துவிட்டார். இதனால் தான் காங்கிரஸ் -பாஜக இடையே போட்டி என்ற நிலை போய் மோடி - ராகுலுக்கு இடையே ஆன தனி நபர் ஆளுமைகளுக்கான போட்டியாக மாறியது, குஜராத் தேர்தல்.

தேர்தல் அரசியல் அடிப்படையில் குஜராத் இமாச்சல் தோல்வி என்பது தோல்வி முகத்தில் ராகுல் தன் பொறுப்பை தொடங்குகிறார் என்ற எடுத்துக் கொண்டாலும் குஜராத்தில் மூன்று இலக்கத்தில் இருந்த பாஜக எம்எல்ஏக்கள் எண்ணிக்கையை இரண்டு இலக்கத்திற்கு கொண்டு வந்ததும் கடந்த முறையை விட 33 சதவித இடங்கள் அதிகமாக பெற்றிருப்பதும், ராகுல் உத்வேகத்துடனே தலைவர் பயணத்தைதொடங்கலாம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு உணர்த்தப்பட்டுவிட்டது.

தேர்தலுக்கு இன்னும் 16 மாதங்களே உள்ள நிலையில், ராகுல் செய்ய வேண்டியது என்ன? நாளை பார்க்கலாம்...

(கட்டுரையாளர் சுகிதா, கவிஞர், ஊடகவியலாளர்)

Sugitha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment