எடுபடுமா, ‘திராவிட அரசியல்’ பூச்சாண்டி?

தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரம் தலைவர்களின் குடும்பத்திலேயே தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. மு.க.ஸ்டாலின் மனைவி உள்பட பலரும் பக்தி பரவசத்துடன் உள்ளனர்.

அரவிந்தன்

‘பெரியார், அண்ணா, கலைஞர் கொள்கைகள் மூலம் பதப்படுத்தப்பட்ட திராவிட இயக்க மண், இந்த மண். இதை அழிக்க நினைத்தவர்கள் வீழ்ந்து போய்விட்டார்கள்’ என்று மு.க. ஸ்டாலின் சமீபத்தில் கூறியிருக்கிறார். இது ரஜினிகாந்துக்கு அவர் அளித்துள்ள பதில் (சாபம்!). புதிய அரசியல் கட்சி தொடங்கவுள்ள ரஜினிகாந்த், தனது பாதை ‘ஆன்மீக அரசியலை’ அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும் என்று கூறியதற்கு ஸ்டாலின் ஆற்றிய எதிர்வினைதான் மேலே கூறிய கருத்து.
ஒரு பக்கம் தமிழ்த் தேசியம் பேசும் சிறிய கட்சிகள், அமைப்புகள், ‘தமிழன்தான் தமிழ் நாட்டை ஆள வேண்டும்’ என்று ரஜினிக்கு எதிராகக் கொடி பிடிக்க; இன்னொருபுறம், ‘திராவிட இயக்கம், திராவிடக் கொள்கைகள், திராவிட அரசியலை மட்டுமே ஏற்கக் கூடிய இடம் தமிழ்நாடு’ என்ற குரல் தி.க., தி.மு.க., திருமாவின் வி.சி.க. ஆகிய கட்சிகளிடம் இருந்து எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. ரஜினியின் ‘ஆன்மீக அரசியல்’ என்பது என்ன? அது ஏற்கப்படுமா? அவரது கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்ன? மாற்றத்தை விரும்பும் வகையில் மக்கள் ஆதரவை அவர் பெறுவாரா? என்ற கேள்விகளுக்கு, இனிதான் விடை தெரிய வேண்டும்.

அதே சமயம், திராவிட அரசியல் என்பது என்ன? திராவிட இயக்கக் கொள்கைகள் வெற்றி பெற்றனவா? திராவிட இயக்கம் வேரூன்றியிருப்பது உண்மையா? – இவையெல்லாம் ஆய்வுக்குரியவை.

பெரியார் முன் வைத்த கொள்கைகளை அவரிடம் இருந்து பிரிந்து, தி.மு.க. என்ற தனிக்கட்சி கண்ட அண்ணா, முழுமையாக அப்படியே சுவிகரித்துக் கொண்டதாகச் சொல்ல முடியாது. தேர்தல் அரசியலில் நாட்டமில்லாமல் இருந்தார் பெரியார். தேர்தல் அரசியலுக்காகவே, ‘கடவுள் இல்லை’ என்ற பெரியாரின் முதல் கருத்தை, ‘ஒன்றே குலம் – ஒருவனே தேவன்’ என்று மாற்றிக் கொண்டு, முதல் ‘கொள்கை பலி’ கொடுத்தார் அண்ணா. பெரியார் ‘கற்பு’ என்பதையே ஏற்கவில்லை. கண்ணகியை ஏற்கவில்லை. திருவள்ளுவரையும் ஏற்கவிலலை. ‘தமிழ் ஒரு காட்டுமிராண்டி பாஷை; தமிழ்ப் புலவர்கள் பொய்யர்கள்’ என்றார். அண்ணாவும் கருணாநிதியும் மொழி உணர்ச்சியைக் கிளறி, கட்டமைத்து அரசியலைத் தொடங்கியவர்கள்.

தி.மு.க.வைத் தொடங்கியபோது, ‘திராவிட நாடு திராவிடர்க்கே’ என்ற முழக்கத்தை முதலில் முன் வைத்தார்கள். ‘கட்சி தடை செய்யப்படலாம்’ என்ற சட்டரீதியான மிரட்டலை மத்திய அரசு மூலம் எதிர்கொள்ள நேர்ந்ததும், இந்தக் கொள்கையையும் தூக்கிப் பரணில் போட்டுவிட்டு, சீனாவுடன் யுத்தம் வரஇருந்த நிலையை அதறகு ஒரு சாக்காகக் கொண்டார்கள். திராவிட நாடு கொள்கையைக் கைவிட்டப் பிறகு தி.மு.க. புதிதாகக் கண்டுபிடித்த கோஷம் ‘மாநில சுயாட்சி! இராணுவம், வெளியுறவுத் துறைப் போன்ற சில விவகாரங்கள் தவிர, இதர அனைத்துத் துறைகளையும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் ஒப்படைக்க வேண்டும்’ என்று மாநில சுயாட்சிக்கு தி.மு.க. பொழிப்புரை தந்தது. இவர்களின் இந்த மாநில சுயாட்சியை அடைய, மத்தியில் பல ஆண்டுகள் கூட்டணி ஆட்சியில் அமைச்சரவையில் தி.மு.க. அங்கம் வகித்தபோது எந்த ஒரு சிறு முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. மாறாக, வளம் கொழிக்கும் இலாகாளைப் பெறுவதில் அது காட்டிய அக்கறையும், குறிப்பிட்ட இலாகாவைத் தராவிட்டால் அமைச்சரவையிலேயே சேர மாட்டோம் என்று அக்கட்சிப் பிடிவாதம் பிடித்ததும் ஊரறிந்த செய்தி.

தி.மு.க.வின் அந்த ‘மாநில சுயாட்சிக்’ கொள்கை இப்போது கட்சி மாநாடுகளில் போடப்படும் தீர்மானங்களில் பத்தோடு பதினான்காக மட்டுமே ஜீவித்துக் கொண்டிருக்கிறது. தி.மு.க.வில் இருந்து பிரிந்து அ.தி.மு.கவைத் தொடங்கிய எம்.ஜி.ஆர்., மாநில சுயாட்சிக்குப் பதிலாக, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரங்கள் என்று அந்தக் கொள்கையை இன்னும் சுருக்கிவிட்டது தனிக்கதை.
இப்படி தி.மு.க.வின் இன்னும் சில கொள்கைகளுக்கு நேர்ந்த பரிதாப முடிவையும் பட்டியலிட முடியும். திராவிட இயக்கக் கொள்கைகள் ஆழமாக வேரூன்றி, பெரியாரால் பதப்படுத்தப்பட்ட மண் என்று ஸ்டாலின் பெருமைபடக் கூறிக் கொள்ளும் தமிழ்நாட்டில்தான், ஆன்மீகத்தில் திளைத்து தழைப்போரின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து வருவதை, சபரி மலைக்கும், பழனிக்கும் விரதமிருந்து யாத்திரை செல்வோரின் எண்ணிக்கை உணர்த்திக் கொண்டிருக்கிறது.

அவ்வளவு ஏன் – தி.மு.க.வின் பகுத்தறிவுப் பிரச்சாரம் – தலைவர்களின் குடும்பத்திலேயே கூட தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் தெரியவில்லை. தி.மு.க. தலைவர் கருணாநிதியின் துணைவியார், மு.க.ஸ்டாலின் மனைவி, முன்னணித் தலைவர்களின் குடும்பத்தார், இவர்கள் தவிர ஆட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பக்திப் பரவசத்துக்கு குறைவில்லாமல், கோயிலாகச் சுற்றி வரும்போது திராவிட இயக்கக் கொள்கைகள் வெற்றி பெற்றிருப்பதாக ஸ்டாலின் கூறுவது நகை முரணன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

எஞ்சியிருக்கும் ‘கொள்கை’ என்னவென்று தேட வேண்டும். பேச்சுக் கலையில் தேர்ந்தவர்களாக இருந்தவர்கள், பேச்சால் மட்டுமே வளர்த்த கட்சி’ என்று ஒரு விமர்சனம் தி.மு.க.வைப் பற்றி உண்டு. அந்த ‘பேச்சுக் கலையில் தேர்ச்சி’ வேண்டுமானால் அப்படியே இன்னும் எஞ்சியிருப்பதாகக் கொள்ளலாம்.

பேச்சுக் கலையை மூல பலமாகக் கொண்டு, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை வாரியிறைத்து வென்றுவந்த கட்சியை, சினிமா கவர்ச்சி + நல்லவர் என்ற இமேஜை மட்டுமே கொண்டு எம்.ஜி.ஆர். வீழ்த்தியதோடு, அவர் உயிரோடிருந்தவரை தலையெடுக்க முடியாதபடி செய்தபோதே திராவிட இயக்கம் கட்டமைத்திருந்த பிம்பம் நொறுங்கியது.

இப்போது மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரின் கவலையும், பதட்டமும் – ரஜினி, இன்னொரு எம்.ஜி.ஆா. ஆகி விடுவாரோ? என்பதுதான். அவர் அப்படி ஆவாரா என்பதை காலம்தான் தீர்மானிக்கும். ஆனால், ‘திராவிட அரசியல் பூச்சாண்டி’ அதைத் தடுக்கப் போதுமானதாக இருக்காது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Opinion News by following us on Twitter and Facebook

×Close
×Close