வாரிசு அரசியல் காலத்தின் கட்டாயமா?

காங்கிரஸ் கட்சியில் சுதந்திரத்துக்கு முன்பும் பின்பும் வாரிசுகள் எப்படி அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டார்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறது.

rahul gandhi, congress party, america, demonetisation

ஸ்ரீவித்யா

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் சமீபத்தில் நடந்த அரசியல் மாற்றம் உலக நாடுகளுக்கு ஒரு படிப்பினையாகவும் அமைந்திருக்க வேண்டும். ஜிம்பாப்வேயில் புரட்சி செய்து, 1990ல் ஆட்சியைப் பிடித்தார் ராபர்ட் முகாபே. முதலில் பிரதமராக பின்னர் அதிபராக பதவியேற்றார். சர்வாதிகாரியாக அவர் செயல்பட்டதாகக் கூறப்பட்டாலும், 37 ஆண்டுகளாக அவர் அசைக்க முடியாத தலைவராக இருந்துள்ளார்.
93 வயதாகும் முகாபே சமீபத்தில் எடுத்த சில முடிவுகளே அவருக்கு எதிராக அமைந்தது. கட்சி, ஆட்சி, நாடு தன் கையை விட்டு போய் விடக் கூடாது என்பதற்காக, துணை அதிபர் பதவியில் இருந்த எம்மர்சன் மன்காக்வாவை பதவியில் இருந்து நீக்கினார். நாட்டின் துணை அதிபராக தன்னுடைய மனைவி கிரேஸ் முகாபேயை நியமித்தார். அதுவரை முகாபேவின் பேச்சுக்கு எதிர் பேச்சு பேசாமால் இருந்தவர்கள் பொங்கி எழுத் தொடங்கினார்.
கட்சி, அரசு என்ன குடும்ப சொத்தா, வாரிசு அரசியலை நடத்துவதற்கு என்று துவங்கிய சிறிய பொறி, அவரை சுட்டு சாம்பலாக்கியது. ராணுவமும், மக்களும் சேர்ந்து கொள்ள, அதிபர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்யும் நிலைக்கு முகாபே தள்ளப்பட்டார்.

இது போன்று வாரிசு அரசியலை எதிர்க்கும் சூழ்நிலை, மனநிலை நமது நாட்டில் இல்லை என்றாலும், வாரிசு அரசியலை ஊக்குவிக்கலாமா என்று, வாரிசு அரசியலை நடத்தும் கட்சிகளே கேள்வி எழுப்புவதுதான் ஹைலைட்..

நாட்டின் சுதந்திரத்துக்கு முன், தேசியம் என்ற கொள்கையுடன், மக்களை ஒருங்கிணைக்கும் வகையில் காங்கிரஸ் கட்சி இருந்தது. நாடு சுதந்திரம் அடைந்தபோது அக்கட்சியில் இருந்த தலைவர்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தலைவர்கள் என்பதால், பிரச்னை எதுவும் இல்லை.

காங்கிரஸ் தலைவராக மோதிலால் நேரு, 1928ல் இருந்தார். அதற்கடுத்த ஆண்டும் அவரே தலைவராக இருக்க வேண்டும் என்று மகாத்மா காந்தி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கூறினர். ஆனால், இளைய தலைமுறைக்கு வழிவிடுவதாக மோதிலால் கூறினார். அப்போது சர்தார் வல்லபபாய் படேலுக்கு தான் அந்த வாய்ப்பு இருந்தது.
ஆனால், தன்னுடைய மகன் ஜவஹர்லால் நேருவின் பெயரை மோதிலால் பரிந்துரைத்தார். அதை ஏற்றனர். ஆனால் அப்போதும் அதை வாரிசு அரசியலாக யாரும் பார்க்கவில்லை.

சுதந்திரத்துக்குப் பிறகு காங்கிரஸ் அரசியல் கட்சியானது. அப்போது, கட்சியின் மூத்த தலைவர்கள் பலருடைய வாரிசுகளும் கட்சியில் சேர்ந்தனர். வாரிசு என்ற அந்தஸ்து இருந்தாலும், அரசியல் பின்புலம் இல்லாதவர்களுடன் போட்டியிடும் நிலை அவர்களுக்கு இருந்தது.

1959ல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, அவருடைய மகள் இந்திரா காந்தி, கட்சித் தலைவராக பொறுப்பேற்றார். 1929 வரலாறு மீண்டும் திரும்பியது. ஆனாலும், காங்கிரஸ் கட்சியில் அப்போது பல மூத்த தலைவர்கள் இருந்தனர். அதனால், நேருவின் மறைவுக்குப் பிறகு, அவருடைய மகள் இந்திராவுக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. கட்சியில் அப்போது ஜனநாயகம் இருந்தது.

பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி மேலும் சில காலம் உயிருடன் இருந்திருந்தால், கட்சியிலும் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், 1966ல் சாஸ்திரி இறந்தபோது, மொரார்ஜி தேசாய் பிரதமராவதை விரும்பாத சிலர், இந்திரா காந்தியை தேர்வு செய்தனர்.

இந்திராவின் பெயரைச் சொல்லி கட்சியை தங்களுடைய கட்டுப்பாட்டுக்கு கொண்டு வரலாம் என சில மூத்த தலைவர்கள் நினைத்திருந்தனர். ஆனால், நடந்தது வேறு. காங்கிரஸ் கட்சி உடைந்து, இந்திரா காங்கிரஸ் ஆனது.

இந்திராவுக்குப் பிறகு ராஜிவ் பிரதமரானார். சில காரணங்களால் அவருக்குப் பிறகு நேரு-காந்தி குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பிரதமராகாவிட்டாலும், கட்சி அவர்களுடைய கட்டுப்பாட்டிலேயே உள்ளது.

சுதந்திரத்துக்குப் பிறகு அரசியல் கட்சி என்பது தேர்தலுக்கான இயக்கமாக மாறியதால், நேருவும், அவருக்குப் பிறகு இந்திராவும் கட்சியை வாரிசு கட்சிகளாக மாற்றினர்.

இதே காலத்தில்தான், பஞ்சாபில் பாதல்கள், உத்தர பிரதேசத்தில் முலாயம் சிங் யாதவ், பீஹாரில் லாலு பிரசாத். கர்நாடகாவில் தேவே கவுடா, தமிழகத்தில் திமுக, ஜம்மு – காஷ்மீரில் பரூக் அப்துல்லா, முப்தி முகமது சயீது, ஒடிசாவில் பட்னாயிக், ஹரியானாவில் தேவிலால் என பல தலைவர்கள், தங்களுடைய அரசியல் கட்சியை, வாரிசு கட்சிகளாக மாற்றினர்.

இதற்கெல்லாம் முன்னுதாரணமாக காங்கிரஸ் அமைந்தது. ஏன் மற்ற துறைகளில் எல்லாம் வாரிசுகள் இல்லையா என்று கேட்கப்படுகிறது. வர்த்தகத் துறையில் வாரிசு என்பது, குடும்பத்தின் முதலீட்டில் இருந்து உருவாக்கப்படுகிறது.

ஆனால், அரசியல் அப்படிப்பட்டதல்ல, அரசியல் என்பது தேர்தலுக்கு அப்பாற்பட்டது என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது, அரசியல் கட்சி என்பது ஒரு தேர்தல் சார்ந்த தொழி நிறுவனமாக மாறிவிட்டது.
சிறிய முதலீட்டில் மிகப் பெரிய லாபம் என்ற அளவுக்கு அரசியல் ஒரு தொழிலாகவே மாறியுள்ளது. தற்போது வாரிசு அரசியல் என்பதையும் தாண்டி, குடும்ப அரசியலமாக மாறியுள்ளது.

மற்ற துறைகளில் திறமை இருந்தால்தான், வளர்ச்சி, முன்னேற்றம், லாபம் காண முடியும். அது அரசியலில் தேவையில்லை. வாரிசு என்ற ஒரு தகுதி மட்டும் இருந்தாலும் போதும் என்ற நிலைக்கு மாறியுள்ளது.
தங்களுடைய வாரிசுக்கு எதிராக கட்சியில் யாரும் இருக்கக் கூடாது என்பதை பார்த்துக் கொள்ளும் அளவுக்கு தலைவர்கள் மாறியுள்ளனர். இது புது தலைமுறை அரசியல் தலைவர்களை உருவாக்காது. மேலும் பணம் ஒரு குடும்பத்துக்கே போய் சேருவதால், ஊழல், மோசடியை உருவாக்கியுள்ளதை நாம் கடந்த, 50 ஆண்டு கால வரலாற்றை பார்க்கும்போதே தெளிவாகிறது.

தேர்தல் சீர்திருத்தங்களோடு, அரசியல் கட்சிகளில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட வேண்டியது மிகவும் அவசியமாகும்.

Get the latest Tamil news and Opinion news here. You can also read all the Opinion news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Will the heir of the political period be compulsory

Next Story
ப.சிதம்பரம் பார்வை : நான் குஜராத் வாக்காளனாக இருந்தால்?modi-amit-shah-gujarat-1
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com