Winter Session of Parliament 2021 : நாடாளுமன்றத்தின் இந்த வருட குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் 29 அன்று தொடங்கியது. மசோதாக்கள், பிரேரணைகள் என்று சபை நடவடிக்கைகள் தொடர்ந்த போது பல்வேறு குழப்பங்கள் நிலவின. அப்போது அமர்வின் முதல் நாளே கேள்வி கேட்ட எதிர்க்கட்சி எம்பிக்களில் 12 பேரை வரும் 24ம் தேதி வரை விவாதங்களில் பங்கேற்க விடாமல் அரசு இடைநீக்கம் செய்தது. இது ராஜ்யசபா ஒரு இருண்ட காலத்தை நோக்கி செல்வதையே காட்டுகிறது. இதனால் ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினருமே கிளர்ந்தெழுந்தனர். அனைவரும் ஒருங்கிணைந்து ஆர்ப்பாட்டம், அணிவகுப்பு என திரண்டனர். செய்தியாளர்களையும் சந்தித்தனர்.
அதே நேரத்தில் சிலர் மௌனமாகவும் இருந்தனர். சிலர் கேள்விகளும் கேட்டனர். ராஜ்ய சபாவின் உள்ளேயும் வெளியேயும் முரண்பட்ட கருத்துக்கள் நிலவின. இந்த நேரத்தில் இடைநீக்கம் செய்யப் பட்ட 12 எம்பிக்களும் சபைக்கு வெளியே மகாத்மா காந்தியின் காலடியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு முன்னர் இப்படி ஒருநிலை ஏற்பட வில்லை.
எதனால் இந்த நிலை ஏற்பட்டது? இது துரதிஷ்டவசமானது என்றாலும் முன்னெப்போதும் நிகழாத நிகழ்வு என்றும் சொல்ல முடிய வில்லை. முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் அருணஜெட்லியின் கூற்றுப்படி சபையின் பணிகளை தடுப்பது என்பது சட்டபூர்வமான தந்திரமாக இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த சம்பவம் முந்தைய அமர்வின் கடைசி நாளான ஆகஸ்ட் 11ம் நாள் நடந்தது தான். அன்று இரவு 7.46 மணிக்கு நாள் குறிப்பிடப் படாமல் சபை ஒத்தி வைக்கப் பட்டது.
அன்றைய நாடாளுமன்ற செய்திக் குறிப்பின் படி, குறிப்பிட்ட உறுப்பினர்கள் சபையில் பதாகைகளை காட்டி, கோஷங்கள் எழுப்பினர். மேலும் விடாப்பிடியாக, வேண்டுமென்றே சபை நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்தனர். இவ்வாறு ஒழுங்கீனத்தில் ஈடுபட்டதாக ஒரு செய்திக் குறிப்பு 33 உறுப்பினர்களின் பெயர்களை பட்டியலிட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப் பட்டதாக சொல்லவில்லை.
கடந்த நவம்பர் 29 அன்று அடுத்த புதிய அமர்வு காலை 11 மணிக்கு தொடங்கியது. சில இரங்கல் நிகழ்ச்சிகளுக்கு பிறகு மரியாதை நிமித்தமாக சபை ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு மீண்டும் கூடியது. மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, வேளாண்மை சட்டங்கள் ரத்து மசோதாக்களை ரத்து செய்யும் மசோதா 2.06 மணிக்கு விவாதம் இன்றி நிறைவேற்றப்பட்டது . சபை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 3.08 மணிக்கு மீண்டும் கூடியது. இந்த அமர்வின் எஞ்சிய நேரத்தில் தான் எதிர்பாராத விதமாக 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்வதற்கான பிரேரணையை அமைச்சர் ஒருவர் முன்வைத்தார், அந்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதற்கு இதர உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் அவை 3.21 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது (நவம்பர் 29 தேதியிட்ட பாராளுமன்ற செய்திக்க குறிப்பு பகுதி I-ன் படி. )
சர்ச்சைக்குரிய விதி
மறுநாள் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். மூன்று வாரங்களாக இது தொடர்ந்தது. ஆனால் அரசு பிடிவாதப் போக்கை கையாண்டது. சபையின் தலைவர் அரசாங்கத்தை அடிபணிய வைக்க விரும்பவில்லை.
ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்ய வேண்டுமென்றால் அதன் விதிமுறைகளை விதி எண் 256 தெளிவாக கூறுகிறது. ராஜ்யசபாவின் வார்த்தைப் பதிவில், ஆகஸ்ட் 11ம் தேதி எந்த உறுப்பினரின் பெயரும் இல்லை. நவம்பர் 29ம் தேதி மாலை 3.08 மணிக்கு ராஜ்யசபா மீண்டும் கூடியபோதுதான், 12 உறுப்பினர்களை இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் முன்வைத்தார். பிரேரணையை சபையில் முன்வைக்கவோ அல்லது வாக்கெடுப்பு நடத்தவோ எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒருமனதாக தெரிவித்தனர். இதை கருவூல அலுவலகமும் மறுக்கவில்லை.
முந்தைய அமர்வில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் உறுப்பினர்களை புதிய அமர்வில் இடைநீக்கம் செய்யலாமா என்பது குறித்து சபையில் பல கேள்விகள் எழுப்பப் பட்டன. ஆகஸ்ட் 11 அன்று உறுப்பினர்கள் யாரையும் குறிப்பிட்டுச் சொல்லாமல் இடைநீக்கம் செய்ய முடியுமா? சபையில் வாக்கெடுப்புக்கு வராத பிரேரணையின் அடிப்படையில் உறுப்பினர்களை இடைநீக்கம் செய்ய முடியுமா? 33 உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், 12 பேர் மட்டும் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டனர்? 33 பேர் பட்டியலில் இடம் பெறாத திரு இளமாறன் கரீம் ஏன் இடைநீக்கம் செய்யப்பட்டார்? இந்த கேள்விகள் எதையுமே அவையில் எழுப்ப அனுமதிக்கப்படவில்லை. எனவே அவற்றை ஒரு பொதுவான களத்தில் எழுப்புவதைத் தவிர வேறு வழி தெரிய வில்லை.
குலையும் ஜனநாயகம்
டிசம்பர் 16 அன்று, எதிர்க்கட்சிகள் விதி 256(2) இன் கீழ் ஒரு பிரேரணையை முன்வைத்தன. இது உறுப்பினர்களின் இடைநீக்கத்தை நிறுத்துவதற்கு "எந்த நேரத்திலும்" ஒரு பிரேரணையை முன்வைக்க அனுமதித்தது. ஆனால் இதை பல்வேறு காரணங்களை சுட்டிக் காட்டி சபையின் தலைவர் நிராகரித்து விட்டார். பேசும் உரிமை உள்ள எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச விடாமல், கேட்கும் கடமை உள்ள அரசு தனது காதுகளை செவிடாக்கிக் கொண்டால் ஜனநாயகம் குலைந்து விடும்.
விதி 256ன் படி ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்தல்
விதி 256ன் படி ஒரு உறுப்பினரை இடைநீக்கம் செய்வது தேவை என சபையின் தலைவர் என்று கருதினாலோ , உறுப்பினர் தலைவரின் அதிகாரத்தை புறக்கணித்தாலோ, சபையின் விதிகளை தொடர்ந்து மீறினாலோ அவரை தலைவர் இடைநீக்கம் செய்யலாம்.
ஒரு உறுப்பினர் தலைவரால் இடைநீக்கம் செய்யப் படுவதாக பெயரிடப் பட்டு விட்டால் அவர் உடனடியாக ஒரு பிரேரணையின் மீது கேள்வியை முன்வைக்க வேண்டும். இதில் எந்தத் திருத்தமும், ஒத்திவைப்பு செய்யப் படாது. விவாதமும் அனுமதிக்கப்படாது, அந்த உறுப்பினர் சபை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்கப் படாமல் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவார். ஆனால் இந்த காலஅளவு அமர்வின் எஞ்சிய கால அளவை விட குறைவாக இருக்க வேண்டும். ஆனால், சபை எந்த நேரத்திலும், ஒரு பிரேரணையின் மீது, அத்தகைய இடைநீக்கத்தை நிறுத்தவும் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர் உடனடியாக சபையிலிருந்து வெளியேறுவது அவசியம்.
மொழிபெயர்ப்பு த. வளவன்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.