எழுத்தாளர் அழகிய பெரியவன்
முதன் முதலில் சித்தலிங்கையா என்ற மாபெரும் கன்னட இலக்கிய ஆளுமையின் பெயரை தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் வெளியான தலித் இலக்கியம் என்ற நூலின் வழியாகவே நான் அறிந்து கொண்டேன். அந்த நூல் 1992 ஆம் ஆண்டு நிழல் திருநாவுக்கரசு அவர்களின் தாமரைச்செல்வி பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஒன்று. அந்நூலின் பின்னட்டையில் சித்தலிங்கையாவின் புகழ்ப்பெற்ற கவிதைகளில் ஒன்றான ’எங்க சனங்க’ இருந்தது.
"பசியினால செத்தவங்க
பாறாங்கல்லைச் சொமந்தவங்க
வதைபட்டு சாய்ந்தவங்க எங்க சனங்க
காலுங்கையும் புடிப்பவங்க எங்க சனங்க
பக்தாதி பக்தருங்க எங்க சனங்க"
என்று தொடங்கிடும் மிக மிக எளிய வரிகளைக் கொண்ட பாடல் அது. இன்குலாப் அவர்களின் மனுசங்கடா பாடலைக் கேட்டிருந்த எனக்கு சித்தலிங்கையாவின் பாடலை எளிதாக உள்வாங்க முடிந்தது.
எனக்கு அது, தமிழின் தீவிரமான நவீன கவிதைகளைத் தேடி படித்துக் கொண்டிருந்த காலம். எழுத்து, ழ கவிதைகள், அன்னம் நவகவிதை வரிசை நூல்கள், பொன்னி மற்றும் க்ரியா பதிப்பகங்கள் வெளியிட்ட ஈழத்து கவிதை நூல்கள், பிரம்மராஜனின் மீட்சி இதழ் மற்றும் வெளியீடுகள், காலச்சுவடு கவிதை வெளியீடுகள் என்று ஆவலுடன் வாசித்து கொண்டிருந்தேன். இந்த வரிகள் அப்போது எனக்கு கவிதையாகப் பிடிபடவில்லை. ஆனால் உண்மையைச் சொல்வதெனில் அது என் ஆன்மாவைப் பிடித்துக் கொண்டது. காரணம் அப்பாடல் சொன்ன வலிமிகுந்த செய்தியும் அது வைத்திருந்த உண்மையும்.
மராத்தி மற்றும் கன்னட தலித் இலக்கிய மொழிபெயர்ப்புகளின் வரவு தமிழில் பலருக்கும் உத்வேகத்தைக் கொடுத்து எழுத வைத்தது. 1869 வாக்கிலேயே திருவேங்கடசாமி பண்டிதர் சூரியோதயம் என்ற இதழைத் தொடங்கி நடத்தியிருக்கிறார் என்ற வரலாறு தமிழக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உண்டு. ஆனால் தொண்ணூறுகள் வரைக்கும் கூட தமிழில் ஒடுக்கப்பட்ட மக்கள் பெருவாரியாக நவீன இலக்கியத்தில் இல்லை.
சுபமங்களா, மராத்தியில் உருவான தலித் இலக்கியப் பேரெழுச்சியைக் குறித்த விரிவான கட்டுரை ஒன்றை 1992 ஆம் ஆண்டு அக்டோபர் இதழில் வெளியிட்டது. தொடர்ந்து பல சிற்றிதழ்களும், புரட்சிகர அமைப்புகளின் இதழ்களும் அவ்வப்போது சில தலித் மொழிபெயர்ப்புக் கவிதைகளை வெளியிட்டு வந்தன. அவை பெரும்பாலும் மராத்தி கவிதைகள் தான். விஷரொட்டி என்ற பெயரில் அர்ஜுன் டாங்ளே தொகுத்து, ஓரியண்ட் லாங்மேன் பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட ஆங்கில நூலிலிருந்தே பெரும்பாலும் இக்கவிதைகள் எடுக்கப்பட்டன.
சுப. வீரபாண்டியன், தியாகு ஆகியோரால் நடத்தப்பட்ட இனி இதழில் 1994 ம் ஆண்டு ரவிக்குமாரின் மொழிபெயர்ப்பில் வெளிவந்த கேசவ் மேஷ்ராமின் ‘ஒருநாள் நான் அந்தத் தா….. கடவுளுக்கு சாபமிட்டேன்’ கவிதையைப் படித்து நான் அதிர்ந்து போனேன். இந்திரன் 1995ல் கொண்டுவந்த ‘பிணத்தை எரித்தே வெளிச்சம்’ என்கிற மராத்தி குஜராத்தி தமிழ் தலித் எழுத்துகளின் தொகுப்பு நூல் மிகச்சிறந்த அறிமுக நூலாக அன்று அமைந்தது.
இந்தச் சூழலில் ரவிக்குமார், பொ.வேல்சாமி, அ.மார்க்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய நிறப்பிரிகையின் தலித் இலக்கிய சிறப்பிதழில், 1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ’இலக்கியத்தில் சாதிக்க வேண்டுமானால் கீழ்வர்க்கத்தின் மொழியைக் கற்க வேண்டும்’ என்ற தலைப்பில் சித்தலிங்கையா அவர்களுடைய நேர்காணல் ஒன்று வெளியாகி அதிர்வுகளை உண்டாக்கியது. அந்த நேர்காணலை பாவண்ணன், ஜி.கே.ராமசாமி, தேவராஜன் ஆகியோர் எடுத்திருந்தனர். பெங்களூரில் பேராசிரியராக பணியாற்றி வந்த தமிழவன் அவர்கள் அந்தச் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து கொடுத்திருந்தார்.
அந்த நேர்காணலைப் படித்த பிறகு சித்தலிங்கையா அவர்களுக்கு என் மனதில் அசையாத ஓர் இடத்தை நான் வழங்கிவிட்டேன். அல்லது அவருடைய நேர்காணலே அப்படி ஓர் இடத்தை எடுத்துக் கொண்டது. நிறைய புரிதல்களை எனக்கு அது வழங்கியது. இதற்குப் பின்னர் பாவண்ணன் மொழிபெயர்ப்பில் விடியல் சிவா கொண்டுவந்த புதைந்த காற்று (கன்னட தலித் எழுத்துகள் 1996) மற்றும் ஊரும் சேரியும் சுயசரிதை (1998) ஆகிய நூல்கள் சித்தலிங்கையாவின் எழுத்துகளை விரிவாக எனக்கு அறிமுகம் செய்தன.
சித்தலிங்கையா பெங்களூர் பல்கலைக்கழகத்தில் கன்னட மொழித்துறை பேராசிரியராக இருந்து பின்னர் அத்துறையின் தலைவராகப் பணியாற்றியவர். அவர் வகித்த பதவிகள் ஏராளம். 1988 மற்றும் 2006 ஆட்சிக் காலங்களில் கர்நாடக சட்டமன்றத்தின் மேல்சபை உறுப்பினராகவும், கன்னட பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், கன்னட புத்தக ஆணையத்தின் தலைவராகவும், ஒரு காபினெட் அமச்சருக்குரிய அதிகாரங்களைக் கொண்ட கன்னட வளர்ச்சிக் கழகத்தின் தலைவராகவும் இருந்தவர். சமூக மற்றும் இலக்கிய துறையில் அவர் ஆற்றிய பணிகள் அதிகம். அவர் மறைவுக்கு கர்நாடக அரசு அளித்த அரசு மரியாதையே அவரின் சிறப்பை சொல்ல வல்லது.
சித்தலிங்கையாவுடன் சந்திப்பு
பெங்களூர் செல்லும் சமயங்களில் சித்தலிங்கையா அவர்களை சந்திக்கலாம் என்று நான் நினைப்பேன். சென்னையில் நடந்த சாகித்திய அகாதெமி கூட்டம் ஒன்றில் கன்னட எழுத்தாளரான திவாகரை சந்தித்திருக்கிறேன் (புகைப்படம் ஒன்றை வைத்து எழுதப்பட்ட இவருடைய ஒரு சிறுகதை மிகவும் புகழ்ப்பெற்றது. தி.சு.சதாசிவம் மொழிபெயர்ப்பில் அக்கதை தமிழில் வெளியானது). அப்படியான வாய்ப்பு ஒன்று கிடைக்காதா என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இடையில் பெங்களூரில் பணிபுரியும் நண்பர் ஒருவடன் பேசி, சித்தலிங்கையாவையும், வேறு சில கன்னட எழுத்தாளர்களையும் சந்திக்கும் ஒரு திட்டத்தையும் மனதுக்குள் வைத்திருந்தேன். ஆனால் எதுவும் நடக்காமலிருந்தது.
இந்தச் சூழலில் 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 30, 31 தேதிகளில் விசாகப்பட்டிணத்தில் சாகித்ய அகாதெமி நடத்திய இந்திய கவிஞர்கள் சந்திப்பில் சித்தலிங்கையா அவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நான் அறிமுகம் செய்துகொண்டு பேசியதும் மிகவும் மகிழ்ந்தார். பெங்களூரில் தமிழருக்கும் தனக்கும் இருக்கும் உறவைப்பற்றி சொன்னார். அவர் எனக்கு அந்நியமான ஒருவராகவே தோன்றவில்லை.
பெரும் ஆளுமையான அவர் மிக எளிமையானவராகவும், கனிவுடன் உரையாடுபவராகவும், இருந்தார். கூட்டத்தில் இருந்தாலும் தனைச்சுற்றி ஓர் அமைதியை உருவகித்துக் கொண்டு தனிமையில் அமர்ந்திருந்தார். தன்னிடம் பேச வருகின்றவர்களிடம் அன்பொழுகப் பேசினார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு கவியமர்வுக்குத் தலைமையேற்ற அவர் தன்னுடைய எளிமையான ஆங்கிலப் பேச்சால் அனைவரையும் கவர்ந்தார். வடகிழக்கு மாநில கவிகள் சிலர் அந்த அமர்வில் கவிதைகளைப் படித்தபோது, அந்த மாநிலங்களைப் பற்றி அவர்களுக்கே தெரியாத செய்திகளையெல்லாம் சொல்லி வியக்க வைத்தார். ஒரு கவிஞர் சிகரெட் பிடிப்பதைப் பற்றிய கவிதையொன்றை வாசித்த பின்னர், அவரிடம் சித்தலிங்கையா, நீங்கள் பீடி பிடிப்பதைப் பற்றிய கவிதையொன்றை யோசிக்கலாமே என்று கேட்டுக்கொண்டார். அந்த அளவுக்கு அவர் கருத்து சொல்லும் எல்லாவற்றிலும் எளிய மக்களின் பார்வையும், அரசியலும் இருந்ததை நான் கவனித்தேன். அன்று நான் வாசித்த ’விளக்கை ஏற்றுங்கள்’ என்ற கவிதையை அவர் வெகுவாகப் பாராட்டினார்.
இதற்கு பின்னர் 2019 ஆண்டு நவம்பர் மாதம், குல்பர்கா மத்திய பல்கலைக்கழகத்தில் சாகித்ய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த தென்னிந்திய தலித் சுயசரிதைகளைப் பற்றிய இரண்டு நாள் கருத்தரங்கில் சித்தலிங்கையா அவர்களை மீண்டும் நான் சந்திக்க நேர்ந்தது. பயணச்சிக்கல் நிமித்தமாக நிகழ்ச்சிக்கு ஒருநாள் முன்னதாகவே குல்பர்கா சென்று சேர்ந்த எனக்கு ஒருநாள் முழுக்கவும் அவருடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் அறைக்குச் சென்ற என்னை கட்டித்தழுவி வரவேற்றவர் ஒன்றாய் சிற்றுண்டி அருந்தும் படியும் கேட்டுக் கொண்டார். அவரை சந்திக்க வந்த சாகித்ய அகாதெமி தலைவர் கம்பார் அவர்களிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.
அன்று குல்பர்கா நகரில் சித்தலிங்கையா அவர்களின் தலைமையில் ஒரு நூல் வெளியிடும் கூட்டம் இருந்தது. அக்கூட்டத்துக்கு என்னையும் அவர் உடன் அழைத்துச் சென்றார். அவருக்கு கன்னட மக்கள் அளிக்கும் அளவற்ற மரியாதையை அந்த நிழ்ச்சியின் வாயிலாக நான் கண்கூடாக அறிந்து கொண்டேன். சாகித்ய அகாதெமி நிகழ்ச்சி நடந்த குல்பர்கா பல்கலைக் கழகத்தில், அதன் துணைவேந்தர் வாயிலில் வந்து நின்று சித்தலிங்கையா அவர்களை வரவேற்று அழைத்துப் போனார். அவரை வழியனுப்பும் போதும் அவ்வாறே நடந்தது. சித்தலிங்கையா அவர்கள் பேசியபோது அந்த கருத்தரங்க அறை முழுவதுமாக நிரம்பியிருந்தது.
போராட்ட வாழ்வு
ஊரும் சேரியும், ஸ்டீல் நிப்ஸ் ஆர் ஸ்புரூட்டிங் - கன்னட மற்றும் தெலுங்கு தலித் இலக்கிய ஆங்கிலத் தொகுப்பு, ஆகிய நூல்கள் சித்தலிங்கையாவின் இளமைக்கால போராட்ட வாழ்வு குறித்த வாழ்க்கைச் சித்திரங்களை அளிக்கின்றன. குறிப்பாக பின்னதான ஆங்கில தொகை நூல் கன்னட தலித் இலக்கிய பின்னணியில் அவரை வைத்துப் புரிந்து கொள்வதற்கு பெருமளவு உதவுகிறது.
சித்தலிங்கைய்யா, 1954 ஆம் ஆண்டு பெங்களூருக்கு அருகிலிருக்கும் மாகடி என்ற ஊரில் பிறந்தவர். அவருடன் பிறந்தவர்கள் ஐந்து பேர். அவரின் பெற்றோர் நிலச்சுவாந்தார்களின் வயல்களில் வேலைச் செய்துவந்த ஏழை விவசாய கூலிகள். தங்களுக்கு இருந்த சொற்ப அளவிலான மேட்டு நிலத்தில் மானாவரி பயிர் செய்வதற்காக வாங்கும் கடனை திருப்ப முடியாமல் அல்லாடியவர்கள்.
கடனைத் தீர்க்க இயலாத சூழ்நிலையில் இருக்கும் சித்தலிங்கையாவின் தந்தை ஒரு நிலையில் தன் குடும்பத்தை விட்டு பெங்களூருக்கு ஓடிப்போகிறார். குடும்பம் பசியால் வாடுகிறது. பின்னர் அவர்களின் குடும்பம், மஞ்சணபெள என்ற கிராமத்துக்கு இடம் பெயர்கிறது. அது சித்தலிங்கையாவின் அம்மா ஊர். ஒடுக்கப்பட்ட மக்களும் முஸ்லீம்களும் மட்டுமே சேர்ந்து வாழும் கிராமம். அங்கு அவருக்கு புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கின்றன. மலைகளுக்கு நடுவிலிருக்கும் அக்கிராமத்தின் இடையே ஓடும் ஆறு சிறுவன் சித்தலிங்கையாவை வெகுவாகக் கவர்கிறது.
நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பிவரும் சித்தலிங்கையாவின் தந்தை குடும்பத்தை பெங்களூருக்கு அழைத்துச் சென்று ஸ்ரீராமபுரம் நகர்சேரியில் குடியமர்த்துகிறார். குழுச்சண்டையும், இட நெருக்கடியும், திருட்டும் நிறைந்த அந்த நகர்ச்சேரி அவருக்கு வேறுவகையான சமூக யதார்த்தத்தை அறிமுகம் செய்து வைக்கிறது. அவருடைய அம்மா ஒரு சமூகநல மாணவர் விடுதியில் குப்பைப் பெருக்குபவராக வேலையில் சேர்கிறார். அவருடைய அப்பா நகரத்தில் கிடைக்கின்ற வேலைகளை எல்லாம் செய்கிறார்.
கிராம அனுபவங்களுடன், நகர்புற சேரியின் வாழ்வனுபவத்தையும் ஒருசேர பெற்று வளரும் சித்தலிங்கையா வறுமையிலும் பசியிலும் உழன்றபடியே மாணவர் விடுதிகளில் தங்கி படிக்கிறார். பலவகையான மக்களுடன் பழகும் அவருக்கு நூல்களையும், நாளேடுகளையும் படிக்கின்ற பழக்கமும் உருவாகிறது. பள்ளிக்கூடக் காலங்களிலேயே சிறந்த பேச்சாளனாக மாறும் சித்தலிங்கையா, மாணவர் அமைப்புகளிலும், அம்பேத்கர் இயக்கங்களிலும், மார்க்சிய இயக்கங்களிலும் சேர்ந்து களப்போராளியாகச் செயல்படுகிறார். பிற்காலத்தில் பெரும் கவிஞராக உருவெடுக்கிறார்.
அவருடைய இளமைக்கால வாழ்க்கை பொதுத்தளத்தில் அவரை இருத்தி, பலவகையான பட்டறிவை வழங்கியிருக்கிறது. இளம் வயதிலேயே பேச்சாளனாக அறியப் பட்டுவிடும் சித்தலிங்கையா மிக இயல்பாகவே அரசியல் அமைப்புகளின் அறிமுகத்தையும் பெற்றுவிடுகிறார். இதனால் பெற்ற தெளிவுடன் தலித் சங்கர்ஷ் சமிதி என்ற அமைப்பு ஒன்றை நிறுவி, ஏழை தலித் மாணவர்களின் விடுதி சீரமைப்புக்காக சுமார் மூவாயிரம் மாணவர்களைத் திரட்டி போராடுகிறார். அன்றைய கர்நாடக முதல்வரான தேவராஜ் அர்ஸ்சை சந்தித்து கோரிக்கைகளை வைக்கிறார். பெங்களூரில் இயங்கிய திராவிடர் கழகத்தில் இணைந்து பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புகிறார். பெரியாரை பெங்களூருக்கு அழைத்து கூட்டம் நடத்துகிறார்.
பகுத்தறிவு விவாதங்களில் மூர்க்கமாக பங்கேற்கிறார். ஒரு மடத்தின் தலைவராக ஏன் தலித்மக்கள் வரமுடிவதில்லை என்று மேடையில் மடாதிபதிகளின் முன்பாகவே கேள்விகளை எழுப்புகிறார். சமாஜ்வாதி மாணவர் சங்கத்தில் சேர்ந்து சட்டசபை பார்வையாளர் மாடத்திலிருந்தபடி விவசாயிகளுக்கு ஆதரவாக துண்டறிக்கைகளை வீசி கைதாகிறார். கர்நாடகாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்ட முயற்சிக்கிறார். மக்கள் கலை இலக்கிய அமைப்புகளுடன் இணைந்துகொண்டு கர்நாடகா முழுவதும் பயணம் செய்து பேசுகிறார்.
கல்லூரி மாணவர் தலைவர் தேர்தலில் நின்று கடும் எதிர்ப்புக்கு இடையே வெற்றி பெற்றதாலும், தேவராஜ் அர்ஸ் அமைச்சரவையில் இருந்த பி.பசவலிங்கப்பா கன்னட இலக்கியம் ஒரு பிண்ணாக்கு இலக்கியம் என்று சொன்னதனால் ஏற்பட்ட மாணவர் போராட்டத்தில் பசவலிங்கப்பாவுக்கு ஆதரவான நிலையை எடுத்ததாலும் ஆதிக்கச்சாதி மாணவர்களால் சித்தலிங்கையா தொடர்ந்து தாக்கப்படுகிறார். அவரைக் கொல்வதற்கான முயற்சிகள் நடக்கின்றன. ஒருமுறை அவர் மைசூரிலிருக்கும் மாணவர் விடுதியொன்றில் பேசிவிட்டு திரும்பியதும் அவ்விடுதி எதிரிகளால் கொளுத்தப்படுகிறது.
சித்தலிங்கையாவின் கவிதைகள்
இளம் வயதிலேயே கவிதைகளை எழுதத் தொடங்கிய சித்தலிங்கையாவின் கவிதைகள் பாடல் தன்மைக் கொண்டவை. நேரடியான சொல் முறையைக் கொண்டு அவை எழுதப் பட்டன. மரபார்ந்த கன்னட இலக்கிய கூறுகளை புறக்கணித்து, மக்களின் சிக்கல்களைச் சொல்வதாகவும், உரத்து பேசுவதாகவும் இருந்தன. ஏழ்மையை விவரிக்கிற, நாட்டு விடுதலையின் யதார்த்த நிலையை கேள்வி கேட்கிற, சாதிய கொடுமைகளைச் சாடுகிற கோபக்குரலுடனும், கலக அழகியலுடனும், நாட்டுப்புற கவித்துவத்துடனும் அக்கவிதைகள் மிளிர்ந்தன.
ஆண்டையின் அழகான தோட்டத்துக்குள்ளே / மலர்ந்து விரிந்த செடிகளிலே / தந்தையின் வியர்வை என்கிற ரத்தம் / பாய்ந்து சிவந்தது பூ
ஆண்டையின் பண்டிகை விருந்துக்காக / தன்னையே அறுத்துக் கொடுத்தவர்கள் / நிலவென்னும் ஆதாரத்தையும் இழந்தவர்கள் / முகிலென்னும் ஆதரவும் கிட்டாதவர்கள் (சோமனின் பிள்ளைகளுடைய பாட்டு)
*
காலம் காலமாக வராதபடி மழையைத் தடுத்துக் / கொண்டிருப்பவர்கள் யார்? / காமனின் வில்லாலே நட்சத்திரங்களைக் குறிபார்த்து / வீழ்த்துபவர்கள் யார்? / சூரியனை முந்தாணையால் மறைத்துக் கொண்டு / பெருகும் இருளை இன்னும் பெருகச் செய்பவர்கள் யார்? / மா பலாவின் விளைச்சலைப் பிடுங்கிக் கொண்டு / பெண்ணுமில்லாத ஆணுமில்லாத / ஆன்மாக்களைத் தோற்றுவிப்பவர்கள் யார்? (பேச வேண்டும்)
*
நாட்டிடையே வெடித்தெழுந்த / வேதனையின் அழைப்பே / வானத்தை அடைத்தபடி / நிற்கும் ஆலமரமே / கோடி கோடி கருப்பு மக்கள் / முதலில் தொடங்கும் மொழியே / கடலுக்கப்பால் வானுக்கப்பால் / பரவி முழங்கும் முழக்கமே (அம்பேத்கர்)
*
தலித்துகள் வருவார்கள் வழிவிடுங்கள் / தலித்துகளிடம் அரசாட்சியைக் கொடுங்கள் / கோடி கோடி கனவுகளோடு / பற்றி எரியும் நெஞ்சங்களோடு / மின்னல் இடி போன்ற முழக்கங்களோடு / பூகம்பம் போன்ற மொழியோடு / வந்ததே தலித்துகளின் அணிவகுப்பு / மண்முழக்கம் அவர்கால்களின் கையெழுத்து (தலித்துகளின் வருகை)
இப்படியான பல பாடல்கள் உயிரோட்டமும் போராட்ட உணர்வும் கொண்டவை. இந்தக் கவிதைகள் அடங்கிய சித்தலிங்கையாவின் கவிதை நூல், ஹொளமாதிகார ஹாடு (ஹொளயா மற்றும் மாதிகாவினரின் பாட்டு) என்ற பெயரில் 1975 ஆம் ஆண்டு வெளியானது. கன்னட இலக்கிய உலகத்தையும், கன்னட வெகுமக்களையும் ஒரு சேர திரும்பிப் பார்க்க வைத்தத் தொகுப்பாக இது கருதப்படுகிறது. இந்தக் கவிதை நூல் வெளியான முதல் வாரத்திலேயே 1000 பிரதிகள் விற்று தீர்ந்துள்ளது. இன்று வரை பல பதிப்பகங்களாலும், மக்கள் இயக்கங்களாலும் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கில் விற்றிருக்கிறது.
உரிமைகளுக்காக போராடும் மக்களின் பாடல்களாகவும், சமுக அரசியல் அமைப்புகளால் கர்நாடகா முழுவதும் பாடப்படும் பாடல்களாகவும் இத்தொகுப்பில் உள்ளவை இன்று நிலைபெற்று இருப்பதை அறிய முடிகிறது. சாவிராரு நதிகளு (1979), காப்பு காதினா ஹாடு (1982), ஆய்த கவிதகளு (1997), மெரவானிகே (2000), நன்ன ஜனங்களு மத்து இதர கவிதகளு (2005) ஆகியன சித்தலிங்கையாவின் மற்ற கவிதை நூல்கள்.
ஊரும் சேரியும்
தலித் இலக்கியத்தின் அடையாளப் பூர்வமான வகை மாதிரியாக விளங்கும் சுயசரிதையை மிகுந்த அழகியலுடனும், ஆற்றலுடனும் பயன்படுத்திய இந்திய மொழிகள் மராத்தியும், கன்னடமும் தான். ஊரு, கேரி: ஆத்மகதானு 1997, ஊரு, கேரி: ஆத்மகாதனா 2006 என்ற இரண்டு பாகங்களைக் கொண்ட சித்தலிங்கையாவினுடைய சுயசரிதைகள் ஒரு மைல்கல். 1997 ஆம் ஆண்டு வெளிவந்த ஊரும் சேரியும் நூலின் முதல் பாகத்துக்கு அறிமுகக் குறிப்பு ஒன்றை எழுதி வெளியிட்ட தலித் அறிவுஜீவியும், சித்தலிங்கையாவின் அணுக்கமான நண்பருமான டி.ஆர்.நாகராஜ் இந்தச் சுயசரிதையை ’ஏழைச் சிரிப்பின் ஆற்றல்’ என்கிறார்.
பொதுவாக தலித் சுயசரிதைகள் துக்கம் கப்புவதாகவும், கோபம் தெறிப்பதாகவும், பச்சாதாபத்தை உருவாக்கும் தொணியைக் கொண்டதாகவும் இருக்கும். சித்தலிங்கையாவின் இந்த நூல் அவற்றையெல்லாம் உடைத்தெறிகிறதாக இருக்கிறது. இச்சுய சரிதையின் முதல் தொகுதியில் தன்னுடைய பிள்ளைப்பருவம் தொடங்கி கல்லூரி ஆசிரியராக சேரும் வரையிலான வாழ்வனுபவங்களை சின்னச்சின்ன அத்தியாயங்களில் சொல்லிச் செல்கிறார். இரண்டாவது தொகுதியில் கல்லூரி ஆசிரியரான பின்னர் கிட்டிய அனுபவங்களைப் பேசுகிறார்.
சமூகத்தில் நிலவும் சாதிய வழக்கங்கள், ஆண்டை அடிமை முறை, பொருளாதாரத்தாலும், சாதியாலும் ஒடுக்கப்பட்ட மக்களின் அவலமான வாழ்நிலை, பக்தி, மூடநம்பிக்கை, பசி, வறுமை, காமம், கொண்டாட்டங்கள், கொலை, கொள்ளை, கருணை, மனித நேயம், வன்முறை, அதிகாரம், அரசியல், நாட்டு நடப்பு என எல்லாமே நிறைந்திருக்கிறதாக இச்சுயசரிதை இருக்கிறது. ஆனால் இவையெல்லாமே ஒரு மெல்லிய நகைச்சுவையுடன், எள்ளல் தொணியில் வேறு யாருக்கோ நிகழ்வதைப்போல தள்ளி நின்று சொல்லப்படுகிறது. வாசிப்பவருக்கு ஒரு மாய யதார்த்தவாத பிரதியின் அனுபவத்தை வழங்கிடும் ஆற்றலுடையதாக இச்சுயசரிதை இருப்பதை மீண்டும் மீண்டும் வாசிக்கையில் நான் உணர்கிறேன். மிகக்குறிப்பாக எளிமையான எடுத்துரைப்பு முறையும், நகைச்சுவை தன்மையும் இச்சுயசரிதைக்கு ஒரு பேரிலக்கியத் தன்மையை வழங்கிவிடுகிறது.
இதில் வரும் பாத்திரங்கள் கூடுதல் குறைவின்றி வருகிறார்கள். இழிவு என்றோ, அவமானம் என்றோ நினைத்து எந்தச் சம்பவத்தையும் அவர் சொல்லாமல் விடவில்லை. பள்ளிக்கு பையில் களியை எடுத்துச் சென்றது. கடன் காரர்களிடம் அவருடைய அப்பா உதைபட்டது, கன்னடர் நலனுக்காக நடந்த ரயில் மறியல் போராட்டத்தில் பெங்களூர் வாழ் தமிழரான கோவிந்தராஜ் வீரமரணம் அடைந்தது என எதையுமே அவர் பதிவு செய்ய தயங்கவில்லை.
இந்தச் சுயசரிதையில் சித்தலிங்கையா விவரித்திருக்கும் பல சம்பவங்களை விரித்து எழுதியிருந்தால் சாகாவரம் பெற்ற பெரும் நாவல்களாகி இருக்கக்கூடும். இந்தியச் சமூகம் மிகக் கராறான படிநிலைகளுக்குள் தான் இயங்குகிறது என்றாலும் இப் படிநிலைகளுக் குள்ளிருக்கும் மக்களிடம் வெளிப்படுகின்ற அன்பும், கருணையும், மனித நேயமும், போராடும் குணமும் தான் இங்கு மனிதர்கள் வாழ்வதற்குரிய சூழ்நிலையை உருவாக்கித் தருகிறது என்பதை இச்சுயசரிதை அழுத்தமாகச் சொல்லிக் கொண்டேயிருக்கிறது. இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவிலும் கூட மிகச்சிறந்த நூல்களில் ஒன்று என நான் இச்சுயசரிதையைச் சொல்வேன்.
அரசியல் பார்வை
ஏழை எளிய மக்களுக்கு அணுக்கமான அரசியல் பார்வையே சித்தலிங்கையாவினுடைய பார்வையும் கூட. அம்பேத்கரிய மார்க்சிய பெரியாரிய பார்வையை அவருடைய கவிதைகளிலும், எழுத்திலும் பார்க்க முடிகிறது. சித்தலிங்கையா தலித் மக்களின் வேதனையை மொத்த உலகத்தின் வேதனையாக பார்க்கிறார். தலித் மக்களின் சிக்கலை உலகளாவிய சிக்கலாக பார்க்கவேண்டும் என்கிற பரந்துபட்ட நோக்கம் அவரிடம் இருக்கிறது. மார்க்சியத்துகு எதிரானது தலித்துகளுக்கும் எதிரானது என்றும் நிஜமான தேசிய இனம் தலித்துகள் மட்டும் தான் என்றும் தன்னுடைய ஒரு நேர்க்காணலில் அவர் சொல்கிறார்.
எளிய மக்களின் சிறுதெய்வ வழிபாட்டில் மனித நேயமும், இயற்கையின் மீதான பரிவும் நிறைந்திருப்பதையும், அம்மக்கள் தாம் வணங்கும் கடவுளரைக்கூட தமக்கு இணையானவராக பாவித்து கேள்வி கேட்பதையும் தமது புகழ்ப்பெற்ற சிறுதெய்வ ஆய்வின் வழியே வெளிகொணர்ந்திருக்கிறார் சித்தலிங்கையா.
மிகச்சிறந்த தலித் அறிவுஜீவியாக விளங்கிய அவர், தலித் மக்கள் தவிர்த்த பிற மக்கள் பிரிவுகளில் இருக்கும் தோழமை சக்திகளோடு கரம் கோர்த்து செயல்படவேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறார். தன்னுடைய சுயசரிதையிலும் கூட இத்தன்மைக்கு வலுசேர்க்கும் வகையில் பல சம்பவங்களை குறிப்பிடுகிறார். தோழமை சக்திகளை அரவணைத்து அங்கீகரிக்கும்போது, அச்சக்திகளின் எண்ணிக்கை தலித் மக்களுக்கு ஆதரவாகப் பெருகிடும் என்பது அவரது நிலைப்பாடு.
நிறப்பிரிகை நேர்க்காணலில், ‘இந்தச்சமூகத்தில் ஒரு சமரசமற்ற தன்மை உள்ளது. மேல் கீழ் என்ற உணர்வு உள்ளது. தலித் மக்கள் மேல் அடக்குமுறை உள்ளது. தலித் மக்ககளுக்கு கொடுமை இழைக்கப்படுகிறது. இவற்றைப் பேசுகிற தலித் இலக்கியம், இவற்றிலிருந்து மாறி வேறொரு சிறந்த சமநிலை வாய்ந்த சமூகத்தைக் கட்ட விழைகிறது. அதுவே தலித் இலக்கியத்தின் கனவாகவும் இருக்கிறது. இந்தச் சமநிலையும், உன்னதமும் ஒரு காலத்தில் இருந்தது தான். அதுவே மீண்டும் திரும்ப வேண்டும் என்று இப்போது விரும்புகிறோம். புராதன கம்யூனிசக் கால மனநிலை தான் தலித் இலக்கியம்’ என்று சொல்கிறார். மாபெரும் இந்திய இலக்கிய ஆளுமையான சித்தலிங்கையா அவர்கள் வைத்திருந்த இலக்கிய பார்வையும் அரசியல் பார்வையும் இதுதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.