Advertisment

ஒன்றுபட்ட அ.தி.மு.க… ஜெயலலிதா செய்து காட்டிய பாடம்!

ஜெயலலிதா அளவிற்கு இந்திய அரசியலில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் யாருமில்லை என்று சொல்லலாம், அதற்கு காரணம் அவர் தொண்டர்களை நேசித்தார், தொண்டர்களிலிருந்து தலைவர்களை உருவாக்கினார்.

author-image
WebDesk
New Update
ஜெயலலிதாவின் விலை உயர்ந்த புடவைகள், பொருட்களை ஏலம் விட நீதிமன்றம் உத்தரவு

அரியகுளம் பெருமாள் மணி, எழுத்தாளர், ஊடகவியலாளர்.

Advertisment

ஜெயலலிதா அதிமுகவில் அடியெடுத்து வைத்த போதே அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் அணிகள் உருவாகின. மூத்த அமைச்சர்கள் சிலர் அவரை கடுமையாக எதிர்த்தனர், அதே நேரத்தில் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் அவரை வெளிப்படையாக ஆதரித்தனர். எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரட்டை இலை முடக்கப்பட்டு சேவல், இரட்டை புறா ஆகிய சின்னங்களில் முறையே ஜெயலலிதாவும் ஜானகிராமச்சந்திரனும் போட்டியிட்டனர்.

1989 தேர்தலுக்குப் பிறகு இரண்டு அணிகளும் இணைந்து மீண்டும் அஇஅதிமுக ஒன்றுபட்டது, இரட்டை இலை களத்திற்கு வந்தது. அதிமுகவை வலுப்படுத்த வேண்டிய சவாலை ஜெயலலிதா மிகத் திறமையாக கையாண்டார். தன்னளவில் மிகப்பெரிய ஜனநாயக இயக்கமாக அதிமுக பிற்காலத்தில் உருப்பெற ஜெயலலிதாவின் ஆரம்ப கால நடவடிக்கைகளே வித்திட்டன.

1991 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியல் ஜெயலலிதாவின் அரசியல் மதியூகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்த ஒன்றாகும். எம்ஜிஆர் விசுவாசிகள், ஜெயலலிதா விசுவாசிகள், இளைஞர்கள் என மூன்று தரப்பிற்கும் இடமளித்து 1991 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலை கவனமாக தயாரித்தார் ஜெயலலிதா. கடையநல்லூர் நாகூர் மீரான், புவனகிரி மல்லிகா, காரைக்குடி கற்பகம், திருச்சி சிவபதி, சேலம் செல்வகணபதி என பல்வேறு மாவட்டங்களில் இளைஞர்களுக்கு வாய்ப்பளித்தார். அன்றைக்கு இருந்த சூழலில் ஜெயலலிதா தொலைநோக்குப் பார்வையோடு எடுத்த முடிவுகள் இவை.

பெரு வெற்றி பெற்ற அதிமுகவின் அமைச்சரவைப் பட்டியலை தயாரிப்பது மிகவும் சவாலான பணி, அதையும் திறம்பட கையாண்டார் ஜெயலலிதா. திராவிட இயக்கத்தின் மூத்த ஆளுமைகளில் ஒருவரான நெடுஞ்செழியனை நிதியமைச்சராக்கினார். வீரப்பன், எஸ். டி. சோமசுந்தரம், முத்துசாமி என்ற மூத்த இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அமைச்சரவை பட்டியலில் முன்னுரிமை அளித்தார். எம்ஜிஆர் காலத்தில் களத்தில் சிறப்பாக பணியாற்றிய செங்கோட்டையன், மதுசூதனன் போன்றவர்களுக்கு எம்ஜிஆர் அளிக்காத அமைச்சரவை வாய்ப்பை ஜெயலலிதா வழங்கினார். 1977 முதல் எம்.எல்.ஏவாக இருந்த மாணவர் தலைவர்களில் ஒருவரான சேடப்பட்டி முத்தையாவை சபாநாயகர் ஆக்கினார்.

முதல் முறை எம்.எல்.ஏ-வாக பதவியேற்ற கண்ணப்பன், ரகுபதி, போன்றவர்களுக்கு பொதுப்பணி, வீட்டு வசதி போன்ற முக்கியமான துறைகளை வழங்கினார். நாகூர் மீரான் போன்ற இளம் சட்டமன்ற உறுப்பினருக்கும் அமைச்சர் பதவியை வழங்கி ஆட்சி அதிகாரத்தில் பங்களித்தார்.

மீன்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட ஜெயக்குமார் அடுத்தடுத்து வந்த ஜெயலலிதாவின் எல்லா அமைச்சரவையிலும் இடம்பெற்றார். மேலூர் அ.மா. பரமசிவம், ஈஸ்வரமூர்த்தி என புதிய முகங்களை தமிழகத்தின் வெவ்வேறு பிராந்தியங்களில் இருந்து அமைச்சரவையில் இணைத்தார். கட்சி தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் வலுப்பெற வேண்டும் என்பதே அப்போது அவருடைய நோக்கமாக இருந்தது. அதற்கேற்ப பதவிகளை வழங்கினார்.

1992 ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது என ஜெயலலிதா முடிவு எடுத்தார். கட்சியில் மூத்தவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் ராஜ்யசபா பதவி வழங்குவது தமிழகத்தில் வழக்கமாக இருந்தது. கட்சி நடவடிக்கைகளில் ஆர்வமுடன் பணியாற்றுகிற இளைஞர்களிலிருந்து சிலரை ராஜ்ய சபாவிற்கு அனுப்ப வேண்டும் என ஜெயலலிதா எடுத்த முடிவு தமிழக அரசியலுக்கு புதியது. ராஜன் செல்லப்பா, தங்கராஜ் பாண்டியன் போன்று நமது கழகத்தில் எஸ்.டி. சோமசுந்தரத்துடன் முன்னர் பணியாற்றியவர்களுக்கும் பதவி வழங்கி கழகத்தை வலுப்படுத்தினார். ஆஸ்டின், முத்துமணி போன்றவர்களையும் ராஜ்ய சபாவிற்கு அனுப்பி புதிய பாதை வகுத்தார் ஜெயலலிதா. இதே போல அடுத்தடுத்து வந்த மாநிலங்களவை தேர்தல்களிலும் அதிகம் அறியப்படாத ஒன்றிய பதவிகளில் இருந்த சௌந்தராஜன், நிறைகுளத்தான், ராஜேந்திரன் போன்றவர்களை ராஜயசபாவிற்கு அனுப்பியது கட்சியின் மூத்தவர்களே எதிர்பாராத முடிவு.

இத்தகைய தகுதிகள் இருந்தால் இப்படியான பதவிகள் கிடைக்கும் என தமிழக அரசியலில் அதற்கு முன் இருந்த எல்லா வரையறைகளையும் ஜெயலலிதா மாற்றினார். கட்சிக்கு விசுவாசமாக உழைக்கிறவர்களுக்கு எதிர்பாராத பதவிகளை வழங்கி தொண்டர்களை ஆச்சரியப்படுத்தினார். தலைமைக் கழகத்திலிருந்து ஏதாவது ஒரு அறிவிப்பு வந்தால் அதில் ஆச்சரியப்படத்தக்க வகையில் அதிகம் அறியப்படாத நிர்வாகி ஒருவருக்கு பதவி இருக்கும் என்ற நம்பிக்கையை தொண்டர்களுக்கு ஏற்படுத்தினார். திறமையானவர்களை கண்டறிந்து திடீரென ஜெயலலிதா பதவி வழங்கிய பாங்கு தொண்டர்களின் விசுவாசத்தை அவருக்கு பெற்றுத் தந்தது. தொண்டர்கள் கட்சியின் பால் கொண்ட நேசமே அஇஅதிமுக மிகப்பெரிய பிராந்திய கட்சியாக எழுச்சி பெற உதவியது. அடுத்தடுத்து வந்த அரசியல் சவால்களை அவர் தொண்டர்கள் துணை கொண்டே வென்றெடுத்தார்.

ஜெயலலிதா அளவிற்கு இந்திய அரசியலில் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தியவர் யாருமில்லை என்று சொல்லலாம், அதற்கு காரணம் அவர் தொண்டர்களை நேசித்தார், தொண்டர்களிலிருந்து தலைவர்களை உருவாக்கினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Aiadmk Jayalalithaa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment