யஷ்வந்த் சின்ஹா
இந்தியாவின் பொருளாதாரத்தை மிகப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது குறித்தும், நிதியமைச்சர் குறித்தும் நான் இப்போதாவது பேசாவிட்டால் நான் என் கடமையிலிருந்து தவறியவனாவேன். நான் கூறப்போகும் கருத்துக்களை பிஜேபியில் உள்ள பெரும்பாலானவர்கள் ஆதரிக்கின்றனர். ஆனால் அச்சம் காரணமாக வெளிப்படையாக பேசத் தயங்குகின்றனர்.
இந்த அரசாங்கத்தின் மிகச் சிறந்த அமைச்சராக அருண் ஜெய்ட்லி கருதப்படுகிறார். 2014 தேர்தலுக்கு முன்பாகவே புதிய அரசின் நிதியமைச்சர் அவர்தான் என்ற விஷயம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. அவர் அம்ரிஸ்தர் தொகுதியில் தோல்வியடைந்தது, அவர் அமைச்சராவதை எந்த விதத்திலும் தடுக்கவில்லை. ஆனால் இதே போல, தேர்தலில் தோல்வியடைந்த ஜஸ்வந்த் சிங் மற்றும் ப்ரமோத் மகாஜனை 1998ம் ஆண்டு அமைச்சரவையில் சேர வாஜ்பாய் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும், வாஜ்பாய்க்கு நெருக்கமானவர்களாக இருந்தும் அவர்களுக்கு அமைச்சரவையில் இடமளிக்கப்படவில்லை. அருண் ஜெய்ட்லி எந்த அளவுக்கு தவிர்க்க முடியாதவர் என்பது, பிரதமர் மோடி அவருக்கு கூடுதலாக ஒதுக்கிய துறைகளில் இருந்தே புரிந்து கொள்ள முடியும்.
நிதியமைச்சகம் இல்லாமல் அவருக்கு பாதுகாப்புத் துறை, கார்ப்பரேட் விவகாரங்கள் துறை மற்றும், தனியார்மயமாக்கும் துறை ஆகியவற்றை ஒதுக்கியதில் இருந்தே புரிந்து கொள்ள முடியும். ஒரேயடியாக நான்கு துறைகள் ஒதுக்கப்பட்டன. அவற்றில் மூன்று துறைகள் இன்னும் அவரிடம்தான் உள்ளன. நான் நிதியமைச்சராக இருந்துள்ளேன். அந்தத் துறையில் எவ்வளவு பணிகள் இருக்கும் என்பது எனக்கு தெரியும். நிதியமைச்சகம், அத்துறையின் அமைச்சரின் மொத்த கவனத்தையும் செலுத்த வேண்டிய ஒரு துறை. அத்துறை சரியாக செயல்பட வேண்டுமென்றால், 24 மணி நேரமும் அத்துறையில் கவனம் செலுத்தக் கூடிய ஒரு அமைச்சர் வேண்டும். சிக்கலான நேரங்களில் ஓய்வில்லாமல் பணியாற்ற வேண்டிய நிலை வரும். அருண் ஜெய்ட்லி போன்ற சூப்பர்மேனால் கூட இப்படியொரு பணியை செய்ய முடியாது.
தாராளமயமாக்கல் அமல்படுத்ப்பட்ட பிறகு, அருண் ஜெய்ட்லி போன்ற ஒரு அதிர்ஷ்டமான நிதியமைச்சரை பார்க்கவே முடியாது. உலக சந்தையில் குறைந்துள்ள கச்சா எண்ணையின் விலை, நிதியமைச்சரிடம் பல லட்சக்கணக்கான கோடிகளை குவித்துள்ளது. இந்த கோடிகளை மிகவும் புதுமையான வகையில் பயன்படுத்தியிருக்க வேண்டும். வங்கிகளின் வாராக்கடன் போன்ற சிக்கல்கள் இருந்தாலும், அவற்றையும் புதுமையாகவும் நிதானமாகவும் கையாண்டிருக்க வேண்டும். ஆனால் கச்சா எண்ணையின் விலை குறைவை, நிதியமைச்சர் சரியாக பயன்படுத்தவில்லை என்பது மட்டுமல்ல, வாராக்கடன்கள் போன்ற விவகாரங்களை சரியாக கையாள தவறியதோடு, அவற்றை மோசமான சூழலுக்கு தள்ளியுள்ளார் நிதியமைச்சர்.
இந்திய பொருளாதாரத்தின் இன்றைய நிலை என்ன? தனியார் முதலீடு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது. தொழில் உற்பத்தி சீரழிவை சந்தித்துள்ளது. விவசாயம் மிக நெருக்கடியான நிலையில் இருக்கிறது. ஏராளமான வேலை வாய்ப்பை வழங்கக் கூடிய கட்டுமானத் துறை பரிதாபமான நிலையில் இருக்கிறது. சேவைத் துறை சீரழிந்துள்ளது. ஏற்றுமதி படு பாதாளத்தில் இருக்கிறது. ஒவ்வொரு துறையும் கடுமையான நெருக்கடியில் உள்ளது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஒரு பொருளாதார பேரழிவை உருவாக்கியுள்ளது. தவறாக அமல்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி இந்த துயரங்களை அதிகப்படுத்தியுள்ளது. பல தொழில்கள் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் வேலையிழப்பை சந்தித்துள்ளனர். தொழிலாளர்களுக்கு புதிய வேலையும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு காலாண்டிலும் பொருளாதார வளர்ச்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வளர்ச்சி விகிதம் கடந்த மூன்றாண்டுகளில் இல்லாத வகையில் 5.7 சதவிகிதத்தை சந்தித்துள்ளது. அரசின் அதிகாரபூர்வ செய்தித் தொடர்பாளர் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் பொருளாதார சரிவுக்கும் தொடர்பில்லை என்கிறார். அதுவும் ஒரு வகையில் சரிதான். பொருளாதார சரிவு சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கி விட்டது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை எரியும் தீயில் எண்ணை ஊற்றியுள்ளது.
மற்றொரு முக்கியமான விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். ஜிடிபி வளர்ச்சியை நிர்ணயிக்கும் முறையை 2015ம் ஆண்டில் அரசு மாற்றியுள்ளது. ஏற்கனவே கடைபிடிக்கப்பட்டு வந்த முறையை கைவிட்டு புதிய முறையை கையாண்டதால் வளர்ச்சி விகிதத்தை அது 200 அடிப்படை புள்ளிகள் அதிகமாக காட்டுகிறது. பழைய முறையில் அளவிட்டால், பொருளாதார வளர்ச்சி விகிதம் உண்மையாக 3.7 சதவிகிதம் மட்டுமே. இது மேலும் குறைவாகக் கூட இருக்கலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா கூட, இந்த வீழ்ச்சி வெறும் தொழில்நுட்ப காரணங்களால் உருவானதல்ல, இந்த சரிவு தொடரும் என்றும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் தெரிவித்துள்ளது. பிஜேபி தலைவர் சில நாட்களுக்கு முன்னால், பொருளாதார சரிவு என்பது சில தொழில்நுட்ப காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் சில நாட்களில் நிலைமை சீரடையும் என்பதையும் வெளிப்படையாக மறுத்துள்ளது. ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைவரின் கூற்றுப்படி, மோசமான சிக்கலை சந்தித்து வரும் துறைகளில் தற்போது தொலைத் தொடர்புத் துறையும் இணைந்துள்ளது என்று கூறியுள்ளார்.
இந்த பொருளாதார சரிவு திடீரென்று ஏற்பட்டதல்ல. ஒரே நாளில் உருவானதும் அல்ல. பல ஆண்டுகளாக இதற்கான காரணங்கள் சேர்ந்து கொண்டே இருந்தன. இதை சரியாக கண்டறிந்து தேவையான மாற்று நடவடிக்கைகளை எடுத்திருந்தால் இதை தவிர்த்திருக்கலாம். இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு சரியான புரிதல், முழுநேர கவனம், சரி செய்வதற்கான உறுதியான நடவடிக்கைகள் ஆகியவை தேவைப்படுகிறது. ஆனால் பல்வேறு பொறுப்புகளை ஒரே நேரத்தில் சமாளித்துக் கொண்டிருக்கும் ஒரு நபரிடம் இதை எதிர்ப்பார்ப்பது அதிகப்படியானதுதான். இதன் விளைவை நம்மால் வெளிப்படையாக காண முடிகிறது.
பிரதமர் மிகவும் கவலையாக இருக்கிறார். நிதியமைச்சரோடும், அதிகாரிகளோடும் அவர் நடத்த வேண்டிய ஆலோசனை கூட்டங்கள் காலவரையின்றி தள்ளிப் போடப்பட்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்க புதிய திட்டம் உள்ளதாக நிதியமைச்சர் கூறுகிறார். நாமும் காத்திருக்கிறோம். ஆனால் எந்த உருப்படியான திட்டமும் வந்தபாடில்லை. புதிதாக எடுக்கப்பட்டுள்ள ஒரே நடவடிக்கை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார ஆலோசனைக் குழுதான். பஞ்ச பாண்டவர்களை போல, அவர்கள் மகாபாரதத்தின் இறுதிப் போரை நமக்காக வென்றெடுப்பார்கள் என்று நாம் நம்ப வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள்.
பருவ மழையும் எதிர்ப்பார்த்தது போல வரவில்லை. இது ஊரக பொருளாதாரத்தை மேலும் சரிய வைக்கும். இவர்கள் அறிவித்துக் கொள்ளும்படி, விவசாயிகளுக்கு ஏராளமாக கடன் தள்ளுபடி செய்திருக்கிறார்கள். இந்த தள்ளுபடி ஒரு பைசா முதல் சில ரூபாய்கள் வரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களில் நாற்பதுக்கும் மேற்பட்டவை திவாலானதான நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த பட்டியல் நாற்பதோடு நிற்கப்போவதிலை. சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை தன் இருப்பை தக்கவைத்துக் கொள்ள முடியாமல் மோசமான நெருக்கடியில் உள்ளது. ஜிஎஸ்டியின் கீழ் வரவேண்டிய வருவாய் 65,000 கோடி. வசூலானதோ 95,000 கோடி. அதிகமாக பணம் செலுத்தியவர்கள் மீது வருமான வரித் துறை ஏவி விடப்பட்டுள்ளது. சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையில் ரொக்க பண நெருக்கடி அதிகரித்துள்ளது. ஆனால் இது போன்ற முறையைத்தான் நிதியமைச்சகம் தொடர்ந்து கையாண்டு வருகிறது. நாங்கள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது, அரசு இயந்திரத்தை பயன்படுத்தி திடீர் சோதனைகள் செய்வதை பழிவாங்கும் நடவடிக்கை என்றோம். ஆனால் இன்று இது தினந்தோறும் நடக்கும் ஒரு விவகாரமாகி விட்டது. பல கோடிக்கணக்கான மக்கள் சம்பந்தப்பட்ட லட்சக்கணக்கான கணக்குகளை ஆராய்ந்து சோதனை நடத்தும் பணி வருமான வரித் துறைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ துறையை சேர்ந்த அதிகாரிகள், பணியாற்ற முடியாத அளவுக்கு அவர்கள் பொறுப்பு அதிகமாகியுள்ளது. மக்கள் மத்தியில் பயத்தை விதைப்பதே இந்த துறைகளின் பிரதான இலக்காகியுள்ளது.
பொருளாதாரத்தை கட்டி உருவாக்குவதை விட, அழிப்பது எளிதானது. 1998ம் ஆண்டில் இருந்த பொருளாதாரத்தை சீர்படுத்த தொண்ணூறுகளின் இறுதி மற்றும் 2000த்தின் தொடக்கம் வரை பணியாற்ற வேண்டியிருந்தது. பொருளாதாரத்தை ஒரே நாளில் சீர்படுத்த யாரிடமும் மந்திரக் கோல் இல்லை. தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் பலனை தர சில ஆண்டுகள் ஆகும். இதன் காரணமாகவே 2019ம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை சீர்படுத்துவது இயலாத காரியமாகிறது. மோசமான ஒரு சூழலை சந்தித்தே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது. ஒரு தேர்தல் கூட்டத்துக்காக வாய்க்கு வந்ததை பேசலாம். ஆனால் அது யதார்த்தத்துக்கு புறம்பானது.
வறுமையை மிக அருகில் இருந்து சந்தித்திருக்கிறேன் என்று பிரதமர் கூறியுள்ளார். அவரைப் போலவே அனைத்து இந்தியர்களும் வறுமையை அருகாமையில் இருந்து பார்க்க வேண்டும் என்பதற்காகவே நிதியமைச்சர் கடும் பணியாற்றுகிறார் என்றே தோன்றுகிறது.
(பிஜேபியை சேர்ந்த முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா, இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 27.09.17 அன்று எழுதிய கட்டுரையின் தமிழாக்கம்.)
தமிழில் : ஏ.சங்கர்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.