/indian-express-tamil/media/media_files/2025/03/26/tH5WSfb0unHmVN59CbfB.jpg)
எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் அரசு மொழி அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்
சம்பிரதாயத்திற்காக இந்திய ஒன்றியத்தின் ஆஸ்தான மொழி என்று அழைக்கப்படும், இந்தி அரசு மொழி என்கின்ற கேலிக்கூத்தை முடிவுக்குக் கொண்டு வருவோம். இப்படிப்பட்ட ஒரு முடிவால் இந்திக்கு எந்தத் தீங்கும் நேர முடியாது; எப்போதும் இளவரசி என்ற நிலை இந்திக்கோ அல்லது நாட்டுக்கோ நல்லது செய்யவில்லை. இந்தப் பெயரளவிளான பட்டத்தைக் குறைப்பதன் மூலம் இந்தி, இதன் தலைவிதியைப் பகிர்ந்து கொள்ளும் மற்ற இந்திய மொழிகளுடன், ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. குறைந்த பட்சம், உண்மையான மொழி வெறியாக விளங்கும், ஆங்கிலம் என்ற ஏகாதிபத்தியம் பற்றிய எந்த தீவிரமான விவாதங்களைத் தடுக்கும் "இந்தி திணிப்பு" என்ற ஒரு திசைதிருப்பலையாவது இது அகற்றும். யாருக்குத் தெரியும், இது சுயராஜ்யத்தை நோக்கிய யோசனைகளின் ஒரு படியாகக் கூட இருக்கலாம்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வோம்: கடந்த 75 ஆண்டுகளில் பின்பற்றப்பட்ட இந்தி கொள்கை சில எதிர்விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தி அதிக அளவில் பேசப்படும் காரணத்தினாலேயே இந்தியாவின் மொழியியல் பன்முகத் தன்மையில் ஒரு சிறப்பு இடத்தை ஆக்கிரமித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பில், இந்தி என வகைப்படுத்தும் குடையின் கீழ் 60 கோடிக்கும் அதிகமானோர் (தற்போதைய மக்கள்தொகையில் 42 சதவீதம்) வருகின்றனர், இது மற்ற எந்த இந்திய மொழியையும் விட பெரியது, மேலும் இது உலகின் நான்காவது பெரிய மொழியாகும். இந்தி அதன் பன்மொழி வேர்களைத் தக்கவைத்து வளர்த்துக் கொண்டால், மற்றும் அதனுள் அடங்கியுள்ள மொழிகளையும் மற்றும் பிற இந்திய மொழிகளையும் இணைத்துச் சென்றால், நம் பன்மொழி நிலப்பரப்பில் ஒரு பாலமாகச் செயல்பட முடியும். மாறாக, அதன் வேர்கள் மற்றும் கிளைகளில் இருந்து துண்டிக்கப்பட்டால் அது இந்தியாவையே துண்டிக்க முடியும். "தூய்மையாக" இருக்க முற்படும் இந்தி, உயர்ந்த அந்தஸ்தைப் பெற முனைந்து, அனைவரிடமிருந்தும் மரியாதையைக் கோரும், பின்பு வகுப்புவாதத்தின் வாகனமாக மாறி, கலாசார பிளவைத் தூண்டி, தேசிய ஒற்றுமையை வலுவிழக்கச் செய்யும். இதுவரை, இந்திக்கான ஆஸ்தான மொழி என்ற அந்தஸ்து மூவுலகங்களிலும் மோசமான நிலையையே தந்துள்ளது. இதன் விளைவாக, இந்தி என்பது அதன் சொந்த மொழிகளுக்கு சௌதேலி மா (மாற்றாந்தாய்) என்ற பழமொழியைப் போலவும், மற்ற இந்திய மொழிகளுக்கு ஒரு தோல்வியுற்ற சாஸ் (மாமியார்) ஆகவும் விளங்குகிறது, மிகவும் மரியாதையுடன் மதிக்க பெரிதாக எதுவும் அதனிடம் இல்லை. பா.ஜ.க.,வின் சமீபத்திய இந்தித் திணிப்பு முயற்சி நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன.
புகழ்பெற்ற கவிஞர், எழுத்தாளர் மற்றும் ஆசிரியர் ரகுவீர் சஹாய், 'ஹமாரி ஹிந்தி' என்ற தனது கவிதையில் இந்தியை, "துஹாஜு கி நயி பீபி" - அதாவது "அதிகமாகப் பேசும், அதிகமாகத் தூங்கும் மற்றும் அதிகமாக சாப்பிடும்" ஒரு வயதான, பணக்கார கைம்மானின் (தாரமிழந்தவனின்) இளம், புதிய மனைவி என்று ஒப்பிட்டார். பொறாமை, குட்டி சண்டைகள் மற்றும் தற்பெருமை நிறைந்த அவளுடைய அன்பில்லாத உலகம், சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் இந்தி என்ற மனநிறைவில்லாத ஒரு இடத்தைக் கைப்பற்றியது. கறுப்பின ஒடுக்கப்பட்டவர்களின் நோயியல் பற்றிய ஃபானனின் விளக்கத்தை இது உங்களுக்கு நினைவூட்டுகிறது.
இந்தக் கவிதையை அவர் எழுதிய 60 வருடங்களுக்குப் பின்பும் கொஞ்சம் கூட நிலைமை மாறவில்லை. எதுவாக இருந்தாலும், ஆங்கிலத்தின் மேலாதிக்கம் இப்போது கற்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஏதாவதொரு வாய்ப்பு கிடைக்கப் பெற்ற இந்தி பேசுபவர்கள் ஆங்கில வழி பள்ளிகளை நோக்கி புலம் பெயர்ந்து கூட்டமாகச் செல்கின்றனர். இந்தி பெரும்பான்மையாக பேசப்படும் பகுதிகளில் உள்ள "நடுத்தர வர்க்க" மேல்தட்டு மக்கள் இந்தி செய்தித்தாளைத் தாங்கள் வாசிப்பதைப் பார்க்க விருப்பப்பட மாட்டார்கள். அவர்களின் வீட்டு மொழி இப்போது இந்தி மற்றும் ஆங்கில மொழியின் இரட்டை வழக்கு மொழியாக உள்ளது. இவ்வாறு இந்தி (ஆங்கிலத்திடம்) அடிபணிவது இப்போது நமது அன்றாட வாழ்வின் நடைமுறைகளாக உள்ளன. ஆங்கிலம் பேசும் படிப்புகளின் விளம்பரங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை "ஆங்கில மோகத்துடன்" விருந்தாளிகளுக்கு அறமுகப் படுத்துகிறார்கள். உடைந்த ஆங்கிலத்தில் தங்கள் ஆண்/பெண் நண்பர்களைக் கவர இளைஞர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆங்கிலம் மேலோங்கி நிற்கிறது என்று பார்த்தால் இந்தி அதில் ஈடு கொடுக்க முடியவில்லை.
மற்றவர்களைக் கட்டாயப்படுத்துவது ஒருபுறம் இருக்கட்டும், உலகின் நான்காவது பெரிய மொழியை அந்த மொழியின் மையப் பகுதியிலேயே கற்பிக்க முடியவில்லையே. 5 ஆம் வகுப்பு பயிலும் இந்தி பேசும் கிராமப்புற மாணவர்களில் பெரும்பாலோர் 2 ஆம் வகுப்புக்கான இந்தி பாடப் புத்தகத்திலிருந்து ஒரு பத்தியைப் படிக்க முடியாது என்பதை வருடாந்திர கல்வி ஆய்வறிக்கை (Annual Survey of Education Report) நமக்கு நினைவூட்டுகின்றன. இந்தி வழிக் கல்லூரிகளில் பயின்ற பெரும்பாலான பட்டதாரிகளால் இந்தி இலக்கணத்தையோ அல்லது எழுத்துக்களையோ கூட சரியாக வழங்க முடியவில்லை. இந்தி யாரும் தேடக் கூடிய ஒரு அறிவுசார் கலாச்சாரத்தை உருவாக்கவில்லை அல்லது நிலைநிறுத்தவில்லை. இந்தி எழுத்தாளர்கள் உலகத் தரம் வாய்ந்த புனைக்கதைகளையும் கவிதைகளையும் தொடர்ந்து உருவாக்குகிறார்கள், ஆனால் இந்தி மாநிலத்தைச் சேர்ந்த படித்த ஒருவர் வினோத் குமார் சுக்லா போன்ற வாழும் பிரபலத்தின் பெயரைக் கூட அறிந்திருக்க மாட்டார். சில விதிவிலக்கான பத்திரிகையாளர்கள் உள்ளனர், ஆனால் அவர்களுக்கு திறமையான செய்தித்தாள் வாய்க்கவில்லை. அதிநவீன அறிவியல், தொழில்நுட்பம் அல்லது சமூக அறிவியலை மறந்து விடுங்கள், இந்தி மீடியத்தில் உயர்கல்வி கற்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் அவசரத் தேவையைப் பூர்த்தி செய்ய எந்தக் கல்வித்துறையிலும் தரமான பாடப்புத்தகங்கள் கூட இல்லை. யோசனைகளின் ஊர்தியாக விளங்கிய கடைசி இந்தி இதழ் தின்மான் (ரகுவீர் சஹாய் ஆசிரியராக நடத்தப்பட்டது) அரை நூற்றாண்டுக்கு முன்பு மூடப்பட்டு விட்டது.
பள்ளிக்கூடங்களில் இந்தி பேசினால் மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் இந்த நாட்டில், இந்தி மேலாதிக்கத்தைப் பற்றிய எந்தப் பேச்சும் கொடூரமான நகைச்சுவையைத் தவிர வேறொன்றும் இருக்க முடியாது. மேலாதிக்கம் என்பது உறுதியான கட்டுப்பாட்டையும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கலாச்சாரத்தையும் முன்னிறுத்துகிறது. இந்திக்கு இதில் எதுவும் இல்லை. ஆங்கிலம் இந்திய ஆளும் வர்க்கத்தின் மொழியாகி விட்டது. இது கலாச்சார செல்வாக்கு, பணம் மற்றும் மிகவும் சக்திவாய்ந்த கல்வித் துறையின் ஆதரவை அனுபவிக்கிறது. அதன் மேலாதிக்கம் யாரை ஆளுகிறதோ அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்வாங்கப்படுகிறது. இதுதான் கலாச்சார மேலாதிக்கம்.
ஒரு சூழலைத் தவிர்த்து, இந்தி ஆதிக்கத்தைப் பற்றியும், சட்டப்பூர்வ மற்ற கட்டாயத் திணிப்பு என்று பேசுவதும் தவறாகும். இந்தி மேலாதிக்கவாதிகளின் கூக்குரல்கள் இருந்தபோதிலும், சோவியத் ஒன்றியத்தில் ரஷ்யர்கள் அல்லாதவர்கள் மீது ரஷ்ய மொழி கட்டாயப்படுத்தப்பட்டது போலவோ அல்லது மாண்டரின் திபெத்தியர்கள் மீது திணிக்கப்பட்டது போன்றோ இந்தி அல்லாத மொழி பேசுபவர்கள் மீது இந்தி கட்டாயப் படுத்தப்படவில்லை என்பதே உண்மை. அதே போன்று, மொழியியல் பன்முகத் தன்மைக்கான மரியாதை இந்தியக் குடியரசைக் காப்பாற்றியுள்ளது. உருதும் இன்னும் சுமார் மூன்று டஜன் மொழிகளைப் பொருத்தவரை மேலாதிக்கத்தைப் பற்றிய கருத்து உண்மையானது தான், ஏனெனில் இந்தி மொழிக்குள் அவை அடக்கப்பட்டு விட்டன, இல்லையெனில் அவற்றின் தனித்துவத்துடன் அந்த மொழிகளும் தனி மொழிகளாக மாறியிருக்கலாம். நியாயப்படி பார்த்தால், இந்த வகையில் இந்தி மட்டும் எட்டாவது அட்டவணையின் பெரும்பாலான மொழிகளிலிருந்து வேறுபட்டதல்ல, ஒவ்வொரு மொழியும் பல மொழிகளை உள்ளடக்கியதாகவே உள்ளது.
இந்தி திணிப்பு பற்றிய குற்றச்சாட்டில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. ஆஸ்தான மொழி ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இந்தியின் அதிகாரத்தை மேம்படுத்த சிறிதளவும் உதவவில்லை என்றாலும், ஆஸ்தான மொழி அமைப்பின் சம்பிரதாய வருகைகள் மற்றும் ஒப்புக்கு விளம்பரம் மற்றும் பெயர் பலகைகளை இந்தியில் எழுத வலியுறுத்தல் போன்ற செயல்கள் இந்தி அல்லாதவர்களுக்கு நெஞ்செரிச்சலை ஏற்படுத்துகின்றன. இப்போதெல்லாம், இந்திய அரசின் அனைத்து முயற்சிகளும் திட்டங்களும் இந்தி அல்லது சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்டுள்ளன, அவை எரிச்சலை ஏற்படுத்தக் காரணமாகின்றன. இந்தி பேசுபவர்கள் இந்தி ஒரு "தேசிய மொழி" என்று கூறுகின்றனர், ஆனால் அது சட்டத்திலோ அல்லது அரசியலமைப்புச் சட்டத்திலோ அப்படி எதுவும் குறிப்பிடவில்லை, இது தவிர பொது இடங்களில் இந்தி அல்லாதவர்களை மொழியை வைத்து எரிச்சலூட்டும் படி நடந்து கொள்வது மூலம் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார்கள். போதிய அதிகாரமின்றி இந்தப் பெயரளவிலான பட்டம், அலுவலகங்களில் பலவீனமான நிலையை உருவாக்கியுள்ளது, இது எதிர்விளைவுகளுக்கும் காரணமாகி விட்டது.
இங்கே, ஒரு முன்மொழிவு தரப்பட்டுள்ளது. அதாவது, எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளுக்கும் அலுவல் மொழி என்ற அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். நமக்கு ஒரு தேசிய, அதிகாரப்பூர்வ அல்லது ஒரே ஒரு இணைப்பு மொழி என்று எதுவும் தேவையில்லை. செப்டம்பர் 14 இந்தி தினம் என்றில்லாமல் மொழிகள் தினம் என்று மாற்றப்பட்டு அனைத்து இந்திய மொழிகளையும் கொண்டாடும் நாளாக்க வேண்டும். இந்திய அரசின் இந்தி மேம்பாட்டு முயற்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட வேண்டும். பம்பாய் சினிமா, கிரிக்கெட் வர்ணனை, தொலைக்காட்சி செய்திகள் மற்றும் தொடர் நாடகங்கள் ஆகியவை இந்தியை மேம்படுத்த எந்த அதிகாரப்பூர்வ முயற்சியையும் விடவும் அதிகம் பங்களித்துள்ளன. இந்தியை ஊக்குவிப்பது இந்தி பேசும் மாநில அரசுகளிடமும் தன்னார்வ அமைப்புகளிடமும் விடப்பட வேண்டும். இணைப்பு மொழி தேவைப்படுபவர்கள் தாங்களாகவே அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது ஒரு இணைப்பு மொழியாக இருக்க விரும்பினால், இந்தி மற்ற மொழிகளால் கலப்படமடைவதை அனுமதிக்க வேண்டும் மற்றும் "சரியான" இந்தியின் பல பதிவுகளை அனுமதிக்க வேண்டும்.
இந்தியை வளர்ப்பதிற்குப் பதிலாக, எல்லா மொழிகளையும் மேம்படுத்துவதற்கான ஒரு தேசியப் பணியை நாம் மேற்கொள்ள வேண்டும். "ஆங்கிலத்தை விரட்டு" என்ற பழைய லோஹியா கோஷம் இப்போது எடுபடாது. நமக்குத் தேவை "மொழிகள் வளர்ப்போம்" என்ற பிரச்சாரம். இந்த 22 மொழிகளிலும் குழந்தைகளுக்கான புத்தகங்கள், உயர்கல்வி பாடப்புத்தகங்கள் மற்றும் அறிவியல் ஆதாரங்களை உருவாக்க, மொழிபெயர்க்க அல்லது மறுபிரதி எடுக்க என்று பெரிய அளவிலான, நன்கு நிதியளிக்கப்பட்ட திட்டங்கள் தேவைப்படும். இந்திய மக்கள் மொழியியல் ஆய்வறிக்கையால் கவனமாக ஆவணப்படுத்தப்பட்ட குறைந்தபட்சம் 100 பட்டியலிடப்படாத மொழிகளைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் நிறுவனங்களை உருவாக்குவதற்கும் அரசின் தாராளமான ஆதரவுடன் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். தொடக்கமே ஒரு தேசியத் தீர்மானமாக, கல்வி பெறுவது அனைவருக்கும் உரிமை என்பது குறிப்பிடப்பட்டுள்ளது போன்று ஒவ்வொரு குழந்தைக்கும் தனது தாய்மொழியில், அங்கீகரிக்கப்பட்ட அல்லது அங்கீகரிக்கப்படாத மொழியில் ஆரம்பக் கல்வியை வழங்க வேண்டும்.
இந்தி ஒரு பெரும்பான்மை மக்கள் மொழி, அது அப்படியே இருப்பதே சிறந்தது. இவ்வாறு இதை நாம் வழியிலிருந்து விலக்கி விட்டு விட்டால், இனவெறி, சாதிவெறி மற்றும் பாலினப் பாகுபாடு பற்றி விவாதிப்பது போல, மொழிவெறி பற்றியும் விவாதிப்பதைத் தொடங்க வேண்டியிருக்குமோ?
யோகேந்திர யாதவ், ஸ்வராஜ் இந்தியா உறுப்பினராகவும், பாரத் ஜோடோ அபியானின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். கட்டுரை அவரின் தனிப்பட்ட கருத்துக்களாகும்.
மொழிபெயர்ப்பு: எம். கோபால்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.