யோகேந்திர யாதவ் - Yogendra Yadav
இயற்கையையும், வாழ்வையும், வாழ்வாதரங்களையும் நம்மால் அழித்துக் கொண்டே இருக்க முடியுமா, இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்க கட்ச் உங்களை அழைக்கின்றது. இங்கே வானங்கள் சங்கமிக்கின்றன. இங்கே, கடல் பாலைவனத்தை தெளிவான வானத்தின் கீழ் தொடுகிறது.
மாறும் நிலப்பரப்பு, தொடரும் பூகம்பங்கள், குஜராத், சிந்து மற்றும் ராஜஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்கா வரை மண்ணில் கோடிடப்பட்ட நாடுகளின் எல்லைகளும் ஒன்றுக்கு ஒன்று கலந்துள்ள இனங்களும் நாகரிகங்களும் எல்லாமே நிலையற்றது என்பதை உங்களுக்கு உணர்த்துகிறது. கட்ச் உங்களை நிகழ்கால சிறையிலிருந்து, தலைப்புச் செய்திகளிலிருந்து, தேர்தல் முடிவுகள், ஊழல் மற்றும் போர் விடுவித்து நிதானமாக உட்கார்ந்து சிந்திக்க வைக்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: Yogendra Yadav writes: What kind of India do we seek?
ஆக, நாங்கள் பெரிய பெரிய கேள்விகளைக் கேட்டோம். நமது எதிர்காலம் எப்படித் தோன்றுகிறது? நாம் அதை மாற்றி அமைத்தால் அது எப்படி இருக்க வேண்டும்? நாம் எந்த மாதிரியான இந்தியாவைத் தேடுகிறோம்? ஒரு கானல்நீரை நோக்கி ஓடுவதுபோல் மூச்சுத் திணற, சிந்தனை யின்றி நாம் தேடும் நகரீகம், வளர்ச்சி, சக்தி வாய்ந்த புதுமையான தொழில்நுட்பங்களுன் கூடிய பல கோடி பொருளாதாரம் இவற்றிற்கு மாற்றாக நம்மால் கற்பனை செய்ய இயலுமா? இதிலிருந்து மாறுபட்ட உலகத்தை நாம் உருவாக்க முடியுமா?.
இங்கே “நாம்” என்பது விகல்ப் சங்கம் அமைப்புடன் தொடர்புடைய 90 இயக்கங்கள் ஒன்றுகூடி ஒரு மாறுபட்ட வாழ்வியலை உருவாக்க முயலும் ஒரு கூட்டமாகும். வெறும் புகார்களையும் போராட்டங்களையும் மட்டுமே செய்யாமல், களத்தில் இறங்கி மனிதனின் அபரிமிதமான தேவைகளைப் பூர்த்தி செய்ய, மாற்று வழிகளைத் தேடிக் கொண்டிருக்கும் ஆர்வலர்களும் அறிஞர்களும் ஆவர். அவர்கள் வெறும் காகிதத்தில் மட்டும் எழுதாமல் களத்தில் இறங்கி வேலை செய்கின்றனர். இது விகல்ப் சங்கத்தின் பத்தாமாண்டு விழாவாகும். இதுவரை வந்த பயணத்தையும் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க கிடைத்த தருணம்.
கட்ச் எதிர் காலத்தைப் பற்றி சிந்திக்க தனித்துவமான பல வாய்ப்புகளை வழங்குகிறது. வெளி உலகத்தின் பார்வையில் இந்தியாவின் மிகப் பெரிய இந்த மாவட்டம் வளர்ச்சி இல்லாத ஒரு தரிசு நிலப் பரப்பாகும். எந்த உற்பத்தித் திறனும் இல்லாத விவசாயத்திற்கு உதவாத வறண்ட நிலமாகும், “வளர்ச்சிக்கு” எடுத்துக் கொள்வதற்காக காத்திருக்கும் நிலப் பரப்பாகும். 2001-ல் ஏற்பட்ட பூகம்பத்திற்குப் பின்னர் எல்லா வகையான அடுக்கு மாடிக் கட்டிடங்களும் தொழிற்சாலைகளும் (வேறு யாருமில்லை, அதானியின் தலைமையில் தான்) இங்கே உருவாகி விட்டன.
இருப்பினும், கட்ச் ஒரு மாறுபட்ட பார்வையில் பலவித உயிரோட்டமான அதன் இயற்கையான சுற்றுச் சூழலுக்குத் தகுந்த பழக்க வழக்கங்களுடன் கைவண்ணமும் கலாச்சாரமும் நிறைந்த பகுதி. நாம் இவற்றிலிருந்து கற்க நிறைய இருக்கிறது. யாரோ கட்ச் ஒரு வாழ்க்கையின் உதாரணம் என்று சொல்லும் போது எனக்கு நினைவுக்கு வருவது பூஜ் நகரிலுள்ள LLDC வளாகத்தில் காட்சிப் படுத்தப்பட்ட திகைப்பூட்டும் வண்ண வேலைப்பாடுகளுடன் கூடிய ஆடை வகைகளே. இது பெரு நகரகங்களில் உள்ள காட்சியங்களை மிஞ்சக் கூடியது. கடினமான சூழ்நிலையை வெல்லும் திறன் மற்றும் அவன் படைப்பாற்றலுக்கு கட்ச் ஒரு களஞ்சியாகும்.
தொழிற்சாலைகளையும் அடுக்கு மாடிக் கட்டடங்களையும் விட இங்கு காணப்படும் முள் மரங்கள் ஒரு நாகரீகத்தின் சின்னமாகவே எனக்குத் தோன்றுகிறது. அறிவியலறிஞர்கள் இந்த மரத்தை புரோசோபிஸ் ஜூலிஃப்ளோரா என்றழைக்கின்றனர். உள்ளூர் வாசிகள் கன்டோ பவல் (அல்லது காரோ பபுல்) பைத்தியக் கார மரம் என்கின்றனர். மெக்சிகோவை சொந்தமாகக் கொண்ட இந்த மரம் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு நிலங்கள் பாலைவனமாவதைத் தடுக்கும் பொருட்டு அரசு ஹெலிகாப்டர் மூலம் விதைக்கப் பட்டன. இன்று, தீவிரமாக ஆக்கிரமிக்கும், அழிக்கவே இயலாத இந்த மரம் இந்தியாவின் மிகப் பெரிய புல்வெளி நிலங்களில் பரவியுள்ளது. பூர்வீக மரங்கள், புல் வகைகளின் வளர்ச்சியைத் தடுத்து, சொற்பமாகக் கிடைக்கும் நிலத்தடி நீரையும் உறிஞ்சி எடுக்கின்றன. இதன் இலைகளை உண்ணும் விலங்குகளுக்கும் இது உகந்ததல்ல. இதைத்தான் இப்போது வளர்ச்சி என்கிறோம்.
ஏதாவது மாற்று உள்ளதா? மால்தாரிகள் போன்ற கால்நடை வளர்க்கும் சமூகத்தையும் பூர்வீக விவசாய முறைகளையும் பாதுகாக்க அவர்களுக்கு உதவ ஏதாவது வழிகள் உண்டா? பலப்பல மாற்றுவழிச் சோதனைகளுக்கும் கட்ச் இன்று ஒரு இடமாக உள்ளது. இந்தப் பத்தாவது விகல்ப் சங்கத்தை ஒரு 13 அமைப்புகள் கூட்டி யிருக்கின்றன. மால்தாரிகளை ஒருங்கிணைத்து காடுகளில் அவர்களின் உரிமைகளை மீட்டுத் தர சஹ்ஜீவன் என்ற அமைப்பு ஈடுபட்டுள்ளது.
ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றி பூர்வீக (மீத்தா) பபுல் எனும் மரங்களை நட ஒரு திட்டத்தை கையெடுத்திருக் கின்றது. கமிர் என்ற அமைப்பினர், இவர்களின் வளாகத்தில் தான் இந்தச் சங்கமம் நிகழ்கிறது, இங்குள்ள சுற்றுச் சூழலை, அவர்கள் பழக்க வழக்கங்களை பாதுகாக்கவும், அவர்களின் கைவினைப் பொருட்களுக்கு தேவையான சந்தையை உருவாக்கவும் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தொழில் மயமாக்கத்தால் அழிந்துவிட்ட காலா காட்டன் எனப்படும் கருப்பு பருத்தி உற்பத்தி யையும் அதன் நெசவையும் மீட்டெடுத்திருக் கின்றனர். தன்னார்வக் குழுக்களை உருவாக்கவும் பெண்கள் தங்கள் தொழிலில் தானே முடிவெடுக்கவும் மற்ற அமைப்புகள் ஈடுபட்டிருக் கின்றனர்.
இந்தக் கருத்து பரிமாற்றங்கள் கட்ச் நிலப் பகுதிகளுக்கு மட்டுமல்ல. மகாராஷ்டிராவிலுள்ள கட்சிரொலியிலிருந்து ஒரு குழுவும், கர்நாடகாவிலிருந்து மற்றொரு குழுவும் தங்கள் பகுதிகளிலுள்ள ஆதிவாசி மக்களுக்கு எப்படி காடுகள் சார்ந்த அவர்களுடைய உரிமைகள் மீட்டெடுத்துக் கொடுக்கப் பட்டது என்பதை பகிர்ந்து கொண்டனர். ஆதிவாசி மக்கள் தங்கள் பகுதியில் உள்ள இயற்கை வளங்களை எப்படி எல்லோருடைய நன்மைக்கும் பயன்படுமாறு செய்கிறார்கள் என்பதையும் தெரியப் படுத்தினர். இந்தியா முழுவதிலுமிருந்து வந்த பல ஆர்வலர்கள் மாற்று வாழ்வியல், வெற்றி பெற்ற திட்டங்கள், சூழலுக்குத் தகுந்த விவசாயம் செய்வதிலுள்ள பிரச்சினைகள், நீர், சுற்றுச்சூழல், எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் மக்களாட்சி ஆகியன பற்றி கலந்துரையாடினர்.
கடந்த பத்தாண்டுகளில் விகல்ப் சங்கம் கிட்டத்தட்ட 2,000-க்கும் மேற்பட்ட இதுபோன்ற கட்டுரைகளை தனது இணைய தளத்தில் https://vikalpsangam.org வெளியிட்டுள்ளது. கோவாவைச் சேர்ந்த ஒரு கணவன்-மனைவி (ஜலந்தரைச் சேர்ந்த ஒரு சீக்கிய குடும்பம்) இரசாயனம், மண் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் காய்கறி, மீன் வகைகளை உற்பத்தி செய்வதைப் பற்றியும்; கொல்கத்தாவின் சுற்றுப் பகுதிகளில் மின்நிலையங்களின் தொடர்பின்றி வீட்டு மாடிகளில் மின் உற்பத்தியை வெற்றி கரமாகச் செய்து வருபவர்களைப் பற்றியும்; இமாச்சல பிரதேசத்தில் உள்ள ஸ்பிட்டி மற்றும் லடாக் பகுதிகளின் பூர்வீக கட்டிடக் கலையை மீட்டெடுப்பவர்களைப் பற்றியும்; ராஜஸ்தானில் ஒரு அழிந்த நதியை உயிரோட்டம் பெறச் செய்த விதம்; தமிழகத்தில் ஆதிவாசிகளுக்காக ஆதிவாசிகளால் நடத்தப் படும் ஒரு மருத்துவ மனை; நகர வளர்ச்சித் திட்டங்களில் தெரு வியாபாரிகளை உள்ளடக்கிச் செல்வது; கல்விப் பாடத் திட்டத்தில் பூர்வீக கலைகளைப் பயிற்றுவிக்க, ஹுன்னர்ஷாலா எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சிகள் போன்றவற்றை இணையதளத்தில் “பூமியைக் கடைதல்” என்னும் வீடியோவில் பதிவு செய்துள்ளோம். இதைப் போலவே, ஆஷா (ASHA - Alliance for Sustainable and Holistic Agriculture) என்ற அமைப்பு மாற்று விவசாய முறைகளை ஒன்றிணைக்க ஐந்து முறை சுய விவசாயக் கூட்டங்களை நடத்தி உள்ளது. சில நாட்களுக்கு முன்பு, கிராமப்புற கைவினைப் பொருட்கள் டெல்லியில் “மக்களின் புதுமை விழா” என்ற நிகழ்ச்சியில் காட்சிப் படுத்தப்பட்டன. நம்மிடம் மாற்றுக் களுக்கு பஞ்சமில்லை.
இவைகளெல்லாம், உண்மையிலேயே இந்நாளைய நாகரீக வளர்ச்சிக்கு மாற்றா? உலகளாவிய இந்தப் பொருளாதாரத்தில், பெரிய பெரிய நிறுவனங்களின் பிரமாண்டக்களுக்கு முன்பு இவைகள் தாக்குப் பிடிக்க முடியுமா? இயற்கையைப் பற்றியும் நம் சந்ததிகளைப் பற்றியும் கவலைப் பட இந்த பெரும்பான்மை மக்களாட்சி முறையில் சிறிதளவாவது இடம் உண்டா? என நீங்கள் கேட்கலாம். நியாயமான கேள்விகள் தான். அதே நேரம், நீங்கள் வேறு சில நியாயமான கேள்விகளையும் கேட்க வேண்டும்: வடக்கு உலகத்தில் கிடைக்கும் அதே வாழ்க்கைத் தரத்தை ஒவ்வொரு இந்தியனுக்கும் கொடுக்க முடியும் என்று யாராவது ஆழமாக சிந்தித்த துண்டா? இதே வாழ்க்கைத் தரத்தை திரும்பத் திரும்ப உருவாக்க முடியுமா? வளர்ச்சி என்ற பெயரில் இயற்கையையும், வாழ்வையும், வாழ்வாதரங்களையும் நம்மால் அழித்துக் கொண்டே இருக்க முடியுமா?
இந்தக் கேள்விகளின் உண்மைத் தன்மையை நாம் புரிந்து கொண்டு விட்டால், இந்த மாற்றுத் தேடல் என்பது ஒரு பைத்தியக்கார சிறுபான்மையினரின் தாகமாக மட்டும் இருக்காது. மாற்று என்பது ஏதோ பழைய உலகத்திற்குத் செல்வதில்லை, அது எதிர்காலத்தை உருவாக்குவது பற்றி சிந்திப் பதாகும் என்று தெரிந்து விட்டால், பின்பு இது எல்லோரும் தேடும் முயற்சியாக அமையும். இந்தத் தீவிரமான மாற்று வாழ்வு முறைகளை பயன்பாட்டுக்கு எப்படிக் கொண்டு வருவது? நாம் உயரத்திற்குச் செல்வதை விடுத்து பரவலாகப் பயணிக்க முடியுமா? இப்போதைய சூழ்நிலையில் இருந்து மாற்று வாழ்வியல் முறைக்கு மாறுவது எப்படி? யாராவது இதைப்பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். நாம் எதுவுமே இனி செய்ய முடியாது என்ற நிலை வருமுன் யாராவது, பைத்தியக்காரன் என்ற பட்டம் கிடைப்பதைப் பற்றி கவலைப் படாமல் மாற்று வாழ்வியல் வழிகளை வகுக்க முற்பட வேண்டும். இந்த கடினமான வினாக்களைக் கேட்பதற்கு கட்ச் உங்களை அழைக்கிறது.
பின்குறிப்பு: நான் இந்தக் கட்டுரையை எழுதும்போது, டாக்டர் ராகேஷ் சின்ஹா இயற்கை எய்திவிட்டார் என்ற செய்தி வந்தது. அவர் ஒரு பொறியியல் வல்லுநர்; முற்போக்கு சிந்தனையாளர். தற்போதைய பெரிய தொழிற்சாலைகளின் வளர்ச்சியில் வேலைவாய்ப்பின்மை என்பது ஒரு தொடர்கதையாகவே இருக்கும் என வாதிட்டவர். மாற்றுத் தொழில் சார்ந்த பொருளாதாரத்தில் நம்பிக்கை கொண்டவர்.
(இந்த கட்டுரையை எழுதியவர் யோகேந்திர யாதவ். இவர் சுவராஜ் இந்தியாவின் உறுப்பினர் ஆவார். மேலும், பாரத் ஜோடோ அபியான் அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராகவும் அவர் இருக்கிறார். இந்தக் கட்டுரை அவரது சொந்த கருத்து என்பது குறிப்பிடத்தக்கது.)
மொழிபெயர்ப்பு: எம்.கோபால்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.