தமிழக அரசு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்.டி.ஏ.டி) மூலம் சென்னை பார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயத்தை நடத்த உள்ளது.
ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயத்தை நடத்த உள்ளது. இதன் மூலம் தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரம் என்கிற பெருமையை சென்னை பெறும்.
பந்தயம் 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் நடத்தப்படுகிறது. 19 திருப்பங்கள் உள்ளன. தீவுத்திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது.
கார் பந்தயங்களைப் பொறுத்தவரையில், ஃபார்முலா ஒன், ஃபார்முலா 2, ஃபார்முலா 3, ஃபார்முலா 4 என பல வகைகள் உள்ளது. இதில், ஃபார்முலா ஒன் சர்வதேச அளவில் நடைபெறும்.
ஃபார்முலா 4 காரின் வேகம் மணிக்கு 210 முதல் 240 கிலோமீட்டர் வேகம் வரை செல்லும். ஒரு காரின் விலை நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். ஆரம்ப விலையே சுமார் 60 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்த காரின் விலை இருக்கும்.
ஃபார்முலா ஒன் கார் மணிக்கு 372 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். ஆனால் ஃபார்முலா ஃபோர் 240 கிலோமீட்டர் வேகம் செல்லும் திறன் கொண்டது. ஃபார்முலா 4 கார் குறைந்த பட்சம் 1600 சிசி திறன் கொண்ட இன்ஜின் பயன்படுத்தப்படும்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் பெரும்பாலும் ஜூனியர் வீரர்கள் தான் பங்கு பெற உள்ளார்கள். சென்னை டர்போ ரைடர்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஐசக் டெமில்வி மற்றும் 17 வயதான ஜெய்டன் ஹேமில்டன் என்ற வீரர்கள் பங்கு பெற உள்ளனர்.
ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முன்னதாக, இதில் கலந்து கொள்ளும் வீரர் - வீராங்கனைகள் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.