டெங்கு என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சல். நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் ஏஜிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இது டெங்கு பாதிப்புள்ளவர்களைக் கடித்துவிட்டு மற்றவர்களைக் கடிக்கும்போது ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.
கடுமையான காய்ச்சல், மூட்டுவலி, தசைவலி, சருமத்தில் தடிப்புகள், கண்வலி, கடுமையான தலைவலி மற்றும் ஈறுகளில் ரத்தம் கசிதல் ஆகியவை டெங்கு காய்ச்சலின் முக்கியமான அறிகுறிகளாகும்.
டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட ஒருவருக்கு முதல் மூன்று நாள்களுக்குக் கடுமையான காய்ச்சல் இருக்கும். உடலின் வெப்பநிலை 101 டிகிரிக்கு மேல் இருக்கும். பாராசிட்டமால் மாத்திரை எடுத்துக்கொண்டாலும் இந்தக் காய்ச்சல் குறையாது. காய்ச்சல் அறிகுறி தெரிந்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.
பொதுவாக ஒருவருக்கு ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் 3 லட்சம் வரை இருக்கும். டெங்கு காய்ச்சல் வந்தவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழே குறைந்துவிடலாம். எனவே, ப்ளேட்லெட் (Platelet) என்னும் ரத்தத் தட்டணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு (Heamatocrit) உள்ளிட்ட பரிசோதனைகளையும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 2 அல்லது 3 நாள்கள் தொடர்ந்து செய்து கொள்ள வேண்டும்.
டெங்குக் காய்ச்சலுக்கு எனத் தனியாக சிகிச்சை எதுவும் இல்லை. காய்ச்சலைக் கட்டுப்படுத்த பாராசிட்டாமால் ( Paracetomol) மாத்திரையும், உடன் உடல்வலியைப் போக்க உதவும் மருந்துகளும் தரப்படும். சிலருக்கு மட்டுமே அதிர்ச்சிநிலை (Dengue Shock Syndrome) ஏற்படும். அதற்கு குளுக்கோஸ் மற்றும் சலைன் (Dextrose Saline) தேவையான அளவுக்கு ஏற்றப்பட வேண்டும். தட்டணுக்கள் குறைந்தவர்களுக்கு அதை ஈடுகட்ட நரம்பு மூலமாக தட்டணுக்கள் மிகுந்த ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.
டெங்குக் காய்ச்சல் வந்து குணமடைந்தவர்கள் 3 முதல் 5 நாள்கள் ஓய்வில் இருக்க வேண்டும். நீர்ச்சத்து நிறைந்த கஞ்சி, இளநீர், பழச்சாறு, பால் போன்றவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்யலாம். சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வது முக்கியம்.
மீண்டும் டெங்குத் தொற்று உள்ள கொசு கடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம்மைச் சுற்றியுள்ள இடத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டின் ஜன்னல் கதவுகளின் வழியாகக் கொசு உள்ளே புகாதவண்ணம் கொசுவலை அடித்துவைக்கலாம்.
டெங்கு மட்டுமல்லாது எல்லாக் காய்ச்சல்களுக்கும் நிலவேம்புக் குடிநீர் குடிப்பது பலன் தரும். சித்த மற்றும் ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் மருத்துகளில், நிலவேம்பு கஷாயம், ஆடாதோடா இலை குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை டெங்குவின் பாதிப்பில் இருந்து காக்கும். இவற்றை நாட்டு மருந்துக் கடைகளில் அல்லது அரசு மருத்துவமனைகளில் உள்ள சித்த மருத்துவமனைப் பிரிவில் வாங்கிப் பயன்படுத்தலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்து, டெங்கு வைரஸை அழிக்கும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.