ஆரோக்கியமான, சத்தான உணவுகளை சாப்பிடுவது முக்கியம், ஆனால் உணவை எப்படி, எந்த பாத்திரங்களில் சமைக்கிறீர்கள் என்பது அதைவிட முக்கியமானது. எனவே, உணவை சமைக்க சரியான பாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பது அவசியமான ஒன்று.
ஆயுர்வேத நிபுணர் டிம்பிள் ஜங்தா, உணவை சமைக்க சிறந்த பாத்திரங்கள் என்ன என்பது குறித்து இங்கு பகிர்ந்துள்ளார்.
வார்ப்பிரும்பு
இது நீடித்த, உறுதியான உலோகம், மேலும் பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. வார்ப்பிரும்பு பாத்திரங்களில் உணவு சமைக்கும் போது, சமையல் பாத்திரங்களில் இருந்து சிறிய அளவிலான இரும்புச்சத்து உணவுக்குள் நுழைகிறது. இது நம் உடலுக்கு மிக அவசியம். இருப்பினும், உடலில் அதிக இரும்புச் சத்து இருப்பவர்கள் (Thalassemia major) இந்த பாத்திரங்களில் சமைப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் நவீனகால வார்ப்பிரும்பு பாத்திரங்கள் அதிகப்படியான இரும்புக் கசிவைக் குறைக்க பாதுகாப்பான பூச்சுடன் வருகின்றன.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல்
இந்த பாத்திரங்கள் பரவலாக கிடைக்கின்றன, பராமரிக்க எளிதானது. மேலும் நீங்கள் அதில் பல வகையான உணவுகளை சமைக்கலாம். ஆனால், அது உணவில் உள்ள ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் 60-70 சதவிகிதத்தை மட்டுமே தக்க வைத்துக் கொள்ளும். குரோமியம் அல்லது நிக்கல் மூலம் மெருகூட்டப்பட்ட ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் வாங்குவதைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை உடல்நலத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும், என்று நிபுணர் எச்சரித்தார்.
மண்பானை
மண்பானை மெதுவாக வெப்பமடைகிறது. இதனால், உணவின் ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்களை தக்கவைக்க உதவுகிறது. இருப்பினும், அதில் உணவு சமைக்க சிறிது நேரம் ஆகலாம்.
செராமிக்
இது பெரும்பாலும் மிக மெல்லிய செராமிக் பூச்சுடன் உள்ளது. மேலும் அதன் அடியில் அலுமினிய பூச்சு இருக்கலாம், இது கடுமையான உடல்நலக் கேடுகளை உண்டாக்கும். நீங்கள் செராமிக் சமையல் பாத்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருந்தால், கனமான செராமிக் பூச்சு கொண்ட ஒன்றை வாங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
பித்தளை
பித்தளை பாத்திரங்கள், உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் 90 சதவீதத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது. ஆனால், அத்தகைய பாத்திரங்களைக் கழுவுவதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அவற்றில் அமிலம் அல்லது சிட்ரிக் உணவுகளை சமைக்க வேண்டாம்.
வெண்கலம்
வெண்கல சமையல் பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்து உள்ளடக்கத்தில் 97 சதவீதத்தை தக்கவைத்துக்கொள்கின்றன. இருப்பினும், ஈயம் அல்லது நிக்கல் பூச்சுடன் வரும் வெண்கலப் பாத்திரங்களைத் தவிர்க்கவும், அது உடல்நலக் கேடுகளுக்கு வழிவகுக்கும்.
அலுமினியம், நான்-ஸ்டிக் குக்வேர் கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தூண்டும். இறுதியாக, ஆயுர்வேத நிபுணர் பளபளக்காத சமையல் பாத்திரங்களை " வாங்குமாறு பரிந்துரைத்தார், ஏனெனில் பளபளக்கும் பாத்திரங்கள் மெருகூட்டப்பட்டவை. அவை, சமைக்கும் போது தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களை வெளியிடலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.