எனது மறைவிற்கு பிறகு என்னுடைய அஸ்தியை புதுச்சேரி கடலில் கரைக்க வேண்டும் என முன்னாள் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உருக்கமாக பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஆங்கிலத்தில் எழுதிய நூலினை பேராசிரியர் பன்னீர்செல்வம் பிரெஞ்சு மொழியாக்கம் செய்த நூல் வெளியீட்டு விழா புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் உள்ள நேரு கலை அரங்கத்தில் நடைபெற்றது.
புதுவை மத்திய பல்கலைக்கழக மேலாண்மைத் துறை, பிரெஞ்சு துறை மற்றும் இன்டர்நேஷனல் கவுன்சில் ஃபார் கல்ச்சுரல் ரிலேஷன்ஸ் ரிசர்ச் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி முன்னிலை வகித்தாா். பல்கலைக்கழக துணைவேந்தா் (பொ) தரணிக்கரசு தலைமை வகித்தாா்.
அவரது ‘அச்சமற்ற ஆட்சி’ என்னும் ஆங்கில நூலின் பிரெஞ்சு மொழியாக்கத்தின் முதல் பிரதியை துணைவேந்தா் (பொ) தரணிக்கரசு வெளியிட , புதுவை, சென்னை பிரான்ஸ் தூதா் எட்டியென் ரோலண்ட் பீக் பெற்றுக் கொண்டாா்.
தொடர்ந்து விழாவில் பேசிய புதுவை முன்னாள் துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, எனது மறைவிற்கு பிறகு எனது அஸ்தியை புதுச்சேரி கடலில் கரைக்க வேண்டுமென உருக்கமாக பேசினார். புதுச்சேரியில் பணியாற்றியதே எனது வாழ்நாளில் சிறந்த தருணம் எனவும் குறிப்பிட்டு பேசினார்.
நிகழ்ச்சியில் பேராசிரியா் கிளமென்ட் லூா்து, பல்கலைக்கழக பதிவாளா் பேராசிரியா் ரஜ்னீஷ் புட்டானி, தேவ நீதிதாஸ், சந்தியா செரியன்,மூத்த பத்திரிகையாளர் சுவாமி உட்பட மாணவ மாணவிகள் பலர் கலந்து கொண்டனா்.
செய்தி: பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“