பெரிய மாடி வீடாக இருந்தாலும் சரி, மிகச் சிறிய ஓட்டு வீடாக இருந்தாலும் சரி, தங்கள் வீட்டில் முடிந்த அளவிற்கு செடிகள் வளர்க்க வேண்டுமென பெரும்பாலான மக்கள் விருப்பப்படுவார்கள். குறிப்பாக, ரோஜாச் செடி வளர்ப்பில் எல்லோருக்கும் ஆர்வம் அதிகமாக இருக்கும். பல வண்ணங்களில் பூத்துக் குலுங்கும் ரோஜாச் செடியை பார்ப்பது மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
ஆனால், செடியில் போதுமான அளவில் பூக்கள் பூப்பதில்லை என்னும் கவலை பலரிடம் உள்ளது. எவ்வளவு உரங்கள் போட்டாலும் செடி பூக்காமல் இருப்பதாக பலர் கூறி நாம் கேட்டிருப்போம். ரோஜாச் செடி மட்டுமல்ல, அனைத்து வகையான செடிகளும் நன்றாக பூப்பதற்கான மிக முக்கிய காரணம் அதன் மண்ணின் சத்து மற்றும் வளத்தைக் கொண்டு தான்.
எனவே, மண் வளத்தை அதிகரிக்காமல் மற்ற முயற்சிகளில் ஈடுபடுவது பலனளிக்காது. அதற்காக விலை உயர்ந்த செயற்கை உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டுமென்ற அவசியம் இல்லை. சாதாரணமாக நம் வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே தரமான உரத்தை நம்மால் உருவாக்க முடியும். குறிப்பாக, ஒரு கைப்பிடி வெந்தயத்தைக் கொண்டு மிகச் சிறந்த உரம் தயாரிப்பது எப்படி எனப் பார்க்கலாம்.
நம் வீட்டில் உள்ள வெந்தயத்தை சுமார் ஒரு கைப்பிடி அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அதனை அம்மியில் அல்லது மிக்ஸியில் போட்டு பொடியாக அரைத்துக் கொள்ள வேண்டும். இதையடுத்து, செடியை நட்டு வைத்திருக்கும் மணலை நன்றாக கிளறிவிட்டு, பொடியாக அரைத்த வெந்தயத்தை அதில் தூவி விட வேண்டும்.
அதற்கடுத்து, ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி, அதற்குள் 2 ரூபாய் காபி பௌடர் பாக்கெட் வாங்கி அதனை நன்றாக தண்ணீரில் போட்டு கலக்க வேண்டும். காபி பௌடர் தண்ணீருடன் கலந்து நிறம் மாறியதும், அதனை உரம் போட்ட செடியில் தேவையான அளவு ஊற்ற வேண்டும்.
வெந்தயத்தில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருப்பதால் மண்ணின் வளம் அதிகரித்து அதிகளவு ரோஜாக்கள் பூக்க வழிவகை செய்யும். மேலும், இவ்வாறு உரம் போட்ட ரோஜாச் செடிக்கு அடுத்த ஏழு நாள்களுக்கு வேறு உரம் போட வேண்டிய அவசியம் இல்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.