திருப்பதியில் நவம்பர் மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். அதேநேரம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 3 மாதங்களுக்கு முன்பே சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவைகளுக்கான டிக்கெட்டுகள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும். மெய்நிகர் சேவை டிக்கெட்டுகள் அதே நாளில் மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்கள் வரும் 23 ஆம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கான வி.ஐ.பி. தரிசன டிக்கெட் மற்றும் அறைகள் முன்பதிவு டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.
மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கான டிக்கெட்டுகள் 23 ஆம் தேதி மாலை 3 மணிக்கும், 300 ரூபாய் சிறப்பு கட்டண தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் 24 ஆம் தேதி காலை 10 மணிக்கும் வெளியிடப்படும்.
திருமலை மற்றும் திருப்பதியில் அறைகள் முன்பதிவுக்கான டிக்கெட் 24 ஆம் தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படும்.
பக்தர்கள் தங்களுக்கு தேவையான தரிசன டிக்கெட்டுகள், அறைகளை தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் மட்டுமே (ttdevasthanams.ap.gov.in) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.