ஓர் ஆண்டில் வரும் வளர்பிறைச்சதுர்த்தியில் தலையாயது ஆவணி மாதம் வரும் சதுர்த்தி. காரணம் ஆவணி சதுர்த்தி அன்றுதான் விநாயகப்பெருமான் தோன்றினார் என்கிறது புராணம்.
பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பது ஆன்றோர் வாக்கு. சந்தனமோ சாணமோ மஞ்சளோ தூய மனதுடன் எடுத்துப் பிடித்து வைத்து மஞ்சள் குங்குமம் சாத்தி வணங்கினால் அதில் பிள்ளையார் ஆவாகனமாகி அருள்பாலிப்பார் என்பது நம்பிக்கை. எந்த பூஜை தொடங்கும் முன்னரும் மஞ்சளில் விநாயகர் பிடித்து வழிபட்டு அதன் பிறகே பிரதான பூஜையைத் தொடர வேண்டும் என்பது ஐதிகம்.
இந்த வருடம் வருகின்றன (செப். 7) சனிக் கிழமையன்று விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட உள்ளது. விநாயகர் சதுர்த்தி பூஜை நேரம், வழிபடும் முறை குறித்து பிரபல பாடகி அனிதா குப்புசாமி தன் யூடியூப் வீடியோவில் பகிர்ந்து கொண்டார்.
விநாயகர் சதுர்த்தி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்துவிட்டு, வீட்டை சுத்தம் செய்து, வாசலில் மாவிலை தோரணம் கட்டலாம். பூஜையறையில் சுத்தம் செய்து ஒரு மணையை வைத்து, அதன்மேல் கோலம் போட்டு, ஒரு தலை வாழை இலை வைக்க வேண்டும். இலையின் நுனி வடக்கு பார்த்தாற்போல இருக்க வேண்டும். இந்த இலையில் பச்சரிசியைப் பரப்பி வைத்து, நடுவில் களிமண்ணாலான பிள்ளையாரை வைக்க வேண்டும்.
அன்றைய தினம் விநாயகருக்கு மிகவும் பிடித்த கொழுக்கட்டை செய்வது சிறப்பு. அதனுடன் எள்ளுருண்டை, பாயசம், வடை உடன் நைவேத்யம் படைக்கலாம். மேலும் பால், தேன், வெல்லம், முந்திரி, அவல் ஒவ்வொன்றிலும் சிறிதளவு எடுத்து ஒன்றாகக் கலந்து அதையும் நைவேத்யம் செய்யலாம்.
இந்த விரதத்தை கடைபிடிப்பதால் தொழில், வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண்பார்கள். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்தும் மீண்டு வர முடியும் என்பது நம்பிக்கை.பிறகு இந்த விநாயகர் சிலைகளை நீரில் கரைக்கின்றனர். பாரம்பரியமாக இது, விநாயகர்’ நம் கவலைகள் அனைத்தையும் அகற்றி, அவருடைய ஆசீர்வாதங்களை விட்டுச் செல்வதாகக் கருதப்படுகிறது.
பஞ்சாங்கத்தின் படி, ஆவணி மாதம் சுக்ல பக்ஷத்தின் சதுர்த்தி திதி செப்டம்பர் 6 அன்று பிற்பகல் 03:01 மணிக்கு தொடங்கி மறுநாள் செப்டம்பர் 7 அன்று மாலை 05:37 மணிக்கு முடிவடைகிறது. எனவே, உதயதிதியை மனதில் வைத்து, விநாயகர் சதுர்த்தியானது செப்டம்பர் 7 முதல் தொடங்கும்.
பூஜை முகூர்த்தம்
இந்த நாளில் காலை 11:03 முதல் மதியம் 01:34 வரை விநாயக பூஜை செய்ய உகந்த நேரமாகும். விநாயக சதுர்த்தி அன்று சந்திரனைப் பார்ப்பதைத் தவிர்க்க பரிந்துரைக்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.