குஜராத்தைச் சேர்ந்த அம்பேத்கரிஸ்ட் குழு, அம்மாநில பள்ளி பாடப்புத்தக மாநில வாரியத்தால் தயாரிக்கப்பட்ட 5-ம் வகுப்பு புத்தகத்தில் அம்பேத்கரின் சில முழக்கத்தை "திருத்திக் கூறப்பட்டதை " எதிர்ப்பு தெரிவிக்கும் வகையியிலும், அம்பேத்கரின் அசல் முழக்கத்தை திருத்தப்படாமல் வைக்க வேண்டுமென்று குஜராத் முதலமைச்சர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு கடிதத்தை சமர்ப்பித்துள்ளனர்.
இதை தொடர்ந்து அம்மாநிலத்தின் கல்வி அமைச்சர், ஏதேனும் தவறு நடந்துள்ளதா? என்பதைக் கண்டறிய, கல்வி நிர்வாகம் மற்றும் பாடப் புத்தக வாரியங்களுடன் ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்தார் .
குஜராத்திலிலுள்ள தலித் அமைப்புகளுக்கு ஒரு அடிப்படைக் கூறாக இருப்பது அம்பேத்கரின்- "கற்பி,ஒன்று சேர்,புரட்சி செய்" என்ற இந்த வாசங்கள் தான். குஜராத்தி மொழியில் "சிக்ஷித் பானோ, சங்கதித் பானோ அனே சங்கர்ஷ் கரோ" என்ற இந்த வாசகம் மிகவும் பிரபலமானது.
இந்த வாசகங்களைத் தான் அம்மாநில பாடப் புத்தக வாரியம் "கற்பி, ஒன்றுசேர், தற்சார்புநிலையில் இரு " என்ற வாசகங்களாய் மாற்றியுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2019/08/IE-ambedkar-school-text-300x200.jpg)
“பாபாசாகேப் (அம்பேத்கர்) எழுதிய அந்த அசல் முழக்கம் 1924 இல் அவர் நிறுவிய பஹிஷ்கிருத் ஹிடகரினி சபாவின் குறிக்கோள் ஆகும். மேலும், 1945 இல் அகில இந்திய பட்டியல் சாதி கூட்டமைப்பின் கூட்டத்தில் உரையாற்றிய பாபாசாகேப் தனது எழுச்சியூட்டும் உரையில் இந்த முழக்கத்தை பயன்படுத்தினார்” என்று எதிர்ப்பு கடிதம் கூறுகிறது.
இந்த அசல் முழக்கம் தான் உலகம் முழுவதும் தெரிந்த ஒன்றாகவும், அனைத்து தலித்துகளையும் ஒன்றிணைக்கும் ஒரு கருவியாக இருந்து வந்திருக்கின்றன. இந்த மாதிரியான முக்கிய விஷயங்களில் அம்மாநில அரசு தன்னிச்சையாக முடிவெடுத்து மாற்றியிருப்பதால் தான் அங்கு எதிர்ப்பு அலைகள் கிளம்பியிருக்கின்றன.
புகழ்பெற்ற நபர்களின் வரலாற்று முழக்கங்கள் எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் தருகின்றன. இதை திருத்துவதோ, மாற்றுவதோ இந்த சமூகத்திற்கு உகந்ததல்ல, மேலும் புத்தகத்தை ஆய்வு செய்த கல்வி நிபுணர்கள் குழு தங்களுது கடமைகளை உணர்ந்து கொள்ளவில்லை, என்பது அவர்களது வாதம்.
அதைத்தான் எதிர்ப்பு கடிதத்தில் காட்டமாய் சொல்லியுள்ளனர்.
அம்பேத்கரிஸ்ட்கள், தங்களது எதிர்ப்பு கடித நகலை அம்மாநிலத்தின் துணை முதல்வர் நிதின் படேல், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் ஈஸ்வர் பர்மர் மற்றும் கல்வி அமைச்சர் பூபேந்திரசிங் சூடாசாமா ஆகியோரின் அலுவலகங்களுக்கும் வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.