/tamil-ie/media/media_files/uploads/2022/08/dhankhar-alva.jpg)
குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் வரும் 10ஆம் தேதியுடன் நிறைவடையும் நிலையில், புதிய குடியரசு துணை தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6) நடைபெறுகிறது. நாடாளுமன்ற வளாகத்தில் காலை 10 மணிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், இன்றே வாக்கு எண்ணிக்கை நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், மேற்கு வங்க ஆளுநராக இருந்த ஜெகதீப் தன்கர், குடியரசு துணை தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். அதேபோல, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மார்கரெட் ஆல்வா நிறுத்தப்பட்டுள்ளார்.
குடியரசு துணை தலைவர் தேர்தலில் மக்களவை, மாநிலங்களை ஆகிய இரு அவைகளின் உறுப்பினர்களும் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள். நியமன உறுப்பினர்களும் இந்த தேர்தலில் வாக்களிக்கலாம். இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 788 உறுப்பினர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர். அனைத்து எம்பிக்களின் வாக்குகளும் ஒரே மதிப்புடையதாக எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளர் ஆகஸ்ட் 11ஆம் தேதி பதவியேற்பார் என ஆணையம் தெரிவித்துள்ளது.
கட்சிகளின் ஆதரவு யாருக்கு?
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கு கூட்டணி கட்சிகளின் ஆதரவு உள்ளது. அது மட்டுமில்லாது இதர மாநில கட்சிகளின் ஆதரவு ஜெகன்மோகன் ரெட்டியின் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளன.
அதேவேளையில், எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மி, தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்), ஜார்கண்ட் முக்தி மோர்சா ஆகிய கட்சிகள் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளன.
இருப்பினும் பாஜக கூட்டணி வேட்பாளர் தன்கர் வெற்றிக்கு தேவையான வாக்குகளை எளிதில் பெறுவார் என கூறப்படுகிறது. காரணம், பாஜக மட்டும், இரு அவைகளையும் சேர்த்து 394 வாக்குகளை கொண்டுள்ளது. கூட்டணி, ஆதரவு கட்சிகளை சேர்த்தால் 500க்கும் அதிகமான வாக்குகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளை பெறும் வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
தேர்தல் குறித்து தன்கர் கூறுகையில், "நாட்டின் ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்த எப்போதும் பாடுபடுவேன்" என்று கூறியுள்ளார்.
மார்கரெட் ஆல்வா தெரிவிக்கையில், "மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது. குடியரசு துணை தலைவர் தேர்தலில் எம்பிக்கள் அனைவரும் அச்சமின்றியும், அரசியல் அழுத்தத்துக்கு உட்படாமலும் வாக்களிக்க வேண்டும். தேர்தல் ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெறுவதாலும், கொறடா உத்தரவு கட்டுப்படுத்தாது என்பதாலும், எம்பிக்கள் அனைவரும் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும். இப்பதவிக்குப் பொருத்தமான வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும்" எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், "நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு, கிட்டத்தட்ட ஸ்தம்பித்த நிலையில் உள்ளது. தேசிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க முடியவில்லை" என ஆல்வா தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.