நாங்குநேரி தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அத்தொகுதியை திமுகவிற்கு தந்தால், எளிதில் வெற்றி பெற்றுக்காட்டுவோம் என்று உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ள சம்பவம் திமுக கூட்டணி கட்சிகளிடையே விவாத பொருளாக மாறியுள்ளது.
திருச்சியில் கலைஞர் சிலை திறப்பு மற்றும் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டங்களில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, நடந்துமுடிந்த லோக்சபா தேர்தலில், இந்தியா முழுவதும் திரும்பி பார்க்கவைத்த ஒரு வெற்றியை பெற்றிருக்கிறோம். கொஞ்ச நஞ்ச வெற்றி அல்ல. இதுமாதிரி வாக்கு வித்தியாசத்தை பார்த்ததில்லை என்று கூறுகிறார்கள்.
சென்றமுறை நாம் அதிமுகவிடம் தோற்றபோது கூட அதிகபட்சம் ஒன்றரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறோம். ஆனால், இந்த தேர்தலில்,திராவிட முன்னேற்ற கழகமும், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த கட்சிகளும் கிட்டத்தட்ட நான்கரை லட்சம், ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று சொன்னால் அடித்தது மோடி எதிர்ப்பு அலை மட்டுமல்ல, நம்முடைய தலைவர் ஸ்டாலினின் ஆதரவு அலையும் தான். அதைத்தான் இங்கே தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டியது. விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருக்கிறது. அதிலும் நான் பிரசாரம் செய்ய போகிறேன்.
நாங்குநேரியில் விரைவில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசரிடம் ஒரு வேண்டுகோள். அந்த தொகுதியை, திமுகவிற்கு கொடுத்தால், எளிதில் வென்று விடுவோம். அதேமாதிரி வரும் சட்டசபை தேர்தலில் திமுக எப்போதும் இல்லாத அளவிற்கு நிறைய தொகுதிகளில் நிற்கவேண்டும். கூட்டணி முக்கியம் தான். இருந்தாலும், உங்களின் சார்பாக இந்த கோரிக்கையை வைப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.