கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் தங்கமணி. இவர் அமைச்சராக இருந்த போது மின்சாரத்துறையில் முறைகேடு நடைபெற்றதாகவும், நிலக்கரி வாங்கியதில் ஊழல் நடைபெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.
இதையடுத்து வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் தங்கமணிக்கு தொடர்புடைய 69 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. அப்போது ரொக்கப் பணம், நகைகள், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது.
இந்தநிலையில் இன்று (ஜூலை 20) இரண்டாவது முறையாக தங்கமணி வீட்டில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. நாமக்கல் குமாரபாளையத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர். வீடு மற்றும் அலுவலகத்தில் நிளஅளவைவிடும் பணியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இரண்டாவது முறையாக தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறுவது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.