சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க வந்தபோது, ஓ. பன்னீர் செல்வம் ஆங்கில நாளேடு ஒன்றில் இரு பக்க முழு விளம்பரம் கொடுத்திருந்தார்.
அந்த விளம்பரத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா படமும், மற்றொருபுரம் பிரதமர் நரேந்திர மோடி படமும் இடம்பெற்றிருந்தது. அத்துடன் ராமாயன நாயகன் ராமனும் அவரது பாதத்தின் அடியில், ஜெயலலிதாவின் உண்மை விசுவாசி ஓ.பன்னீர் செல்வம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பொதுவாக ஆங்கில தினசரிகளில் விளம்பரம் அளிக்க தமிழக அரசியல்வாதிகள் விரும்புவார்கள். அந்த வகையில் இந்த விளம்பரம் தற்செயலாக நடந்தது அல்ல. இந்த விளம்பரம் மூலம் தீர்க்கமான ஒரு செய்தியை அளிக்க ஓ.பி.எஸ்., விரும்புகிறார்.
எனினும் இந்தச் செய்தியை அளிக்க இது உகந்த நேரம் அல்ல. ஏனெனில் அதிமுக தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. மறுபுறம் ஒ.பி.எஸ்., வகித்த பதவிகள் ஒவ்வொன்றாக பறிக்கப்படுகின்றன.
அதிமுகவின் கதவுகள் அவருக்காக திறக்க தயாராக இல்லை. இதற்கிடையே வியாழக்கிழமை (ஜூலை 28) இரவு பிரதமர் மோடியை சந்திக்க ஒ.பி.எஸ்., கேட்ட அனுமதி கிடைக்கவில்லையாம். மாறாக விமான நிலையம் சென்று சந்தித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது என உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் மாநில ஆர்எஸ்எஸ் தலைவர்களும் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இல்லை எனக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு அதிமுகவில் உள்கட்சி பிரச்னை கிளம்பியபோது ஓபிஎஸ் நடவடிக்கையை உன்னிப்பாக குருமூர்த்தி கவனித்தார் என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது அப்படி எதுவும் நடைபெறவில்லை. பாஜகவின் இளந்தலைவர் அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியோடு நல்லூறவு கொண்டுள்ளார். இது குறித்து மூத்த பாஜக தலைவர் ஒருவர் கூறுகையில், ‘கூட்டணி விஷயத்தில் அண்ணாமலை மிகத் தெளிவாக உள்ளார்.
அதிமுக கட்சியும் எடப்பாடி பழனிசாமி வசம் உள்ளதை பாஜக அறியும். நாங்கள் ஏன் ஓ.பி.எஸ்., ஐ மீட்க வேண்டும்” என்றார். கடந்த காலங்களில் வி.கே. சசிகலாவை அதிமுக கட்சிக்குள் கொண்டுவருவதில் ஓ.பி.எஸ்., இணக்கம் காட்டினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமி முட்டுக்கட்டையாக இருந்தார். இந்த விவகாரத்தில் சசிகலா எந்தப் பக்கமும் சாயாமல் பொறுமை காத்துவந்தார். அவருக்கு இது தவிர நீதிமன்ற வழக்குகள் என மேலும் சில தடைகள் இருந்தன.
மேலும் ஓபிஎஸ்.,ஸிற்கு அவரது சொந்த சமூகமான தேவர் சாதியிலும், அதிமுக தொண்டர்கள் மத்தியிலும் பெரிதளவு ஆதரவு இல்லை. இதில் முரண்பாடாக ஓ.பன்னீர் செல்வத்துக்கு குறைந்த காலம் ஆதரவு கொடுத்த கட்சியென்றால் அது திமுகதான்.
அதிமுக தலைமை அலுவலகத்தை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்க முயன்றபோதும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.