பிகாரில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கூட்டணியில் குழப்பம் நீடித்து வந்த நிலையில் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். ஐக்கிய ஜனதா தளம்-பாஜக கூட்டணி முறிந்தது. இதையடுத்து ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், கம்யூனிஸ்ட உள்பட 7 கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி அமைக்கப்பட்டது.
நிதிஷ் குமார் 8 ஆவது முறையாக முதல்வராக நேற்று (ஆகஸ்ட் 10) பதவியேற்றார். தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் பிகாரின் மகாகத்பந்தன் கூட்டணி குறித்து தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோர் நிதிஷ் கட்சியில் உறுப்பினராக இருந்து பின்னாளில் விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிகாரின் அரசியல் மாற்றம் ஆச்சரியப்படுத்தவில்லை. இது நிதிஷின் 6ஆவது முறை சோதனை. 10 ஆண்டுகள் நிதிஷ் அரசில் அவரது முதல்வர் பதவி மட்டுமே நிலையானது. 2012 முதல் நிதிஷ் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த காலகட்டத்தில் பிகார் பெருமளவில் வளர்ச்சி பெறவில்லை என்றார்.
“2012 முதல் நிதிஷ் முதல்வராக இருந்து வருகிறார். அது முதல் அவரது முதல்வர் பதவியும், மாநிலத்தில் சுகாதாரம் மற்றும் கல்வியின் நிலையும் மோசமாக இருந்து வருவதும் நிலையாக உள்ளது. புதிய அரசு எப்படி செயல்பட உள்ளது, கூட்டணி எப்படி இருக்கும் என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.
ஜேடியூ மூத்த தலைவர் கூறுகையில், “இது மாநில குறிப்பிட்ட வளர்ச்சியே தவிர எதிர்காலத்திற்கான அரசியல் வளர்ச்சி அல்ல. 2024ஆம் ஆண்டுக்கான எதிர்க்கட்சியின் சூத்திரம் என இதை பார்க்க கூடாது:” என்றார்.
கிஷோர் கூறுகையில், பிகாரில் நிலவிய அரசியல் நிலையற்ற சூழல் மகா கூட்டணி ஆட்சிக்கு வந்தபின் முடிவுற்றதாக நம்பவில்லை என்றார்.
தொடர்ந்து, “2015க்கு முன் இருந்தது போல் தற்போது பாஜக-ஜேடியூ கூட்டணி இல்லை. நிதிஷுக்கு இந்த கூட்டணியில் உடன்பாடில்லை. சிக்கல் இருந்து வந்தது. புதிய கூட்டணிக்கு கூடுதல் சவால்கள் உள்ளன. அதை சந்திக்க உள்ளன.Prashant Kishor
2024 மக்களவை தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முகமாக நிதிஷ் முன்னிறுத்தப்படுவாரா? என்ற கேள்விக்கு பதில் அளித்த கிஷோர், 2014ஆம் ஆண்டில் அந்த முயற்சியை அவர் மேற்கொண்டார். சில ஆதரவும் கிடைத்தது. ஆனால் உள்நோக்கம் இருப்பது ஒன்று, அதை யதார்த்தமாக மாற்றுவது வேறு.
நிதிஷ் மற்றும் லாலு ஒரு வலிமையான சமூகக் கூட்டணி என்ற அடிப்படையில் எதிர்க்கட்சிகளின் பலம் குறித்த கேள்விக்கு, எப்போது கூட்டணி உருவாகிறதோ, அந்த நேரத்தில் அது வலிமையானதாகத் தெரிகிறது. 2017இல் பாஜகவும் ஜேடியூவும் கைகோர்த்தபோது, பிகாரில் இது இயற்கையான கூட்டணி என்று கூறப்பட்டது. தற்போது அது எப்படி முடிந்துள்ளது. ஒரு கூட்டணி அமைக்கப்பட்டு, அரசாங்கம் செயல்படத் தொடங்கினால், சவால்கள், சிக்கல்கள் மற்றும் அதன் பலம் வெளிப்படுகிறது.
பிகாரில் இந்த மாற்றங்கள் பாஜகவை வலுவிழக்கச் செய்வதாக கருதக்கூடாது. தொடர்ந்து வலிமைமிக்க சக்தியாக உள்ளது என்றார்.
கடந்த சில ஆண்டுகளில் ஜேடியூவின் தொகுதி இடங்கள் சரிந்துள்ளது. 2015இல் 117 சட்டமன்ற இடங்களிலிருந்து தற்போது 43ஆக குறைந்துள்ளது. மகா கூட்டணி அரசு நல்லாட்சியை வழங்கத் தவறினால், இந்த இடங்கள் மேலும் குறையும் என்று கூறினார்.
சொந்த கட்சி தொடங்கப்படுமா என பிரசாந்த கிஷோரிடம் கேட்டபோது, தற்போது மாநிலம் முழுவதும் பாதயாத்திரை செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அதன் பிறகு முடிவெடுக்கப்படும் என்றார். 2025இல் பிகாரில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அப்போது களம் காண்பீர்களா என்ற என்ற கேள்விக்கு, இருக்கலாம். ஆனால் 2025 வெகு தொலைவில் உள்ளது. சாத்தியம் இருந்தால் விரைவில் நடக்கும் என்றார்.