scorecardresearch

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை!

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அம்மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

pm modi

பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், துணை முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூலை 24) ஆலோசனை மேற்கொண்டார். இந்தக் கூட்டத்தில் 12 மாநில முதலமைச்சர்கள், 8 துணை முதலமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி, அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ், பாஜக நல்லாட்சிப் பிரிவு தலைவர் வினய் சஹஸ்ரபுத்தே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாஜக ஆளும் மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார். கதி சக்தி, ஹர் கர் ஜல், ஸ்வாமித்வா திட்டங்கள் மூலம் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

கிராமப்புறங்களைப் பற்றி பேசுகையில், கோபர்தன் திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் அதை மக்களிடையே கொண்டு சேர்க்கும் வழிகள் குறித்துப் பேசினார். விவசாயம் மற்றும் அதில் செயல்படுத்தப்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்தார். நானோ உரங்கள் பயன்பாட்டை அதிகரிப்பது குறித்தும் பேசினார்.

மேலும், மாநிலங்களில் எளிதாக வணிகம் செய்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். இதற்கு மத்திய அரசு எடுத்துவரும் பல முயற்சிகள் பிரதமர் தெரிவித்தார். நாட்டில் வணிகச் சூழலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை அறிவுறுத்தினார். வணிகச் சூழலை அதிகரிக்க வேண்டும் என்றும் விளையாட்டு துறையை மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தங்கள் மாநிலங்களில் விளையாட்டு துறைக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் போட்டிகளில் பங்கேற்பதற்கும், ஈடுபாடு காட்டுவதற்கும் சிறந்த வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர்களை அவர் கேட்டுக் கொண்டார். பாஜக ஆளும் மாநிலங்கள் விளையாட்டு துறையில் சிறந்து விளங்குவதை இலக்காக கொண்டு செயல்பட வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Pm asks bjp states to boost business environment push sports culture