கர்நாடகா மாநிலம் தாவணகெரேவில் நேற்று (ஆகஸ்ட் 3) காங்கிரஸ் முன்னாள் முதல்வர், மூத்த தலைவர் சித்தராமையாவின் 75ம் ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.
இதில் ராகுல்காந்தி, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் சித்தராமையா, சிவகுமார் இருவரும் கட்டியணைத்து கருத்து வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.
2023ஆம் ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வரவுள்ள நிலையில், இந்த மாநாடு, தலைவர்கள் இணைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர வலுசேர்த்து வருகிறது. இந்த கூட்டத்தில் 5 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "சித்தராமையாவும், சிவகுமாரும் கருத்து பேதமின்றி பணியாற்ற உள்ளனர். சிவகுமார் கட்சி தலைவரான பின், காங்கிரஸை முன்னேற்ற கடுமையாக உழைத்துள்ளார்.
பாஜக, ஆர்எஸ்எஸ்ஸை வீழ்த்த காங்கிரஸ் ஒன்று சேர்ந்துள்ளது. பாஜக மக்களிடம் இருந்து செல்வத்தைப் பறித்து தங்களுக்கு வேண்டிய சிலருக்கு கொடுக்கிறார்கள். காங்கிரஸ் மக்களுக்கு கொடுக்க நினைக்கிறது" என்றார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் ராகுல் கர்நாடகாவுக்கு சென்றபோது, கட்சி தலைவர் சிவகுமாருக்கும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கட்சியில் அனைவரும் ஒற்றிணைந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் கேட்டுக் கொண்டார்.
சித்தராமையாவின் பிறந்தநாளை அவரது ஆதரவாளர்கள் பிரமாண்டமாக கொண்டாட திட்டமிட்டதை தொடர்ந்து இரு தலைவர்களுக்கும் இடையேயான உறவு மேலும் மோசமடைந்தது. தனி நபருக்கு கட்சியில் பிறந்தநாள் விழாவா என கூறியிருந்தார். பின் ராகுல், பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் போன்ற மூத்த தலைவர்கள் சித்தராமையாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததையடுத்து தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதாக சிவகுமார் கூறியிருந்தார்.
நேற்று விழாவில் பேசிய சிவகுமார், "சித்தராமையா பிற்படுத்தப்பட்டோருக்கான தலைவர் மட்டுமல்ல, அனைத்து சமூகத்தினருக்குமான தலைவர். அவர் நீண்ட ஆண்டுகள் சமூகத்திற்கு சேவை செய்ய வேண்டும். 2013இல் காங்கிரஸ் ஆட்சியில், சோனியா காந்தி, ராகுல் காந்தி சித்தராமையாவை முதல்வராக நியமித்தனர். பசவ ஜெயந்தி அன்று அவர் பதவியேற்றார். பசவண்ணாவின் கொள்கையே காங்கிரஸ் கட்சியின் கொள்கை" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வர அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இந்த ஊழல் (பாஜக) அரசை அகற்றி காங்கிரஸ் ஆட்சி அமைக்க அனைத்து மக்களின் ஆதரவும் எங்களுக்கு தேவை" என்றார்.
சித்தராமையா பேசுகையில், "தனக்கும் சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக வெளியான செய்திகளை அவர் மறுத்தார். எங்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக கருத்து வேறுபாடு இருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின. இது தவறான தகவல். நாங்கள் ஒன்றாக இருக்கிறோம். எந்த கருத்து வேறுபாடும் இல்லை" என்றார். ராகுல் மற்றும் சோனியா காந்தியின் ஆதரவிற்கு நன்றி எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து ராகுல் மற்றும் வேணுகோபால் சித்ரதுர்காவில் உள்ள லிங்காயத் மடத்திற்கு சென்று மடாதிபதியை சந்தித்தனர்.
பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு பதிலளித்து பேசிய முதல்வரும், பாஜக தலைவருமான பசவராஜ் பொம்மை, “சித்தராம உற்சவத்தைப் பற்றி நாங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை.நாங்கள் சித்தராமர், லிங்காயத்து கடவுளின் பக்தர்கள்" என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.