அரசுப்பணிகளுக்கான பதவி உயர்வில் எஸ். சி, எஸ்.டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடு
கடந்த 2006-ம் ஆண்டு அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க தேவையில்லை’ என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், எஸ்சி, எஸ்டி பிரிவு ஊழியரின் பின்தங்கிய நிலை குறித்த ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது உட்பட 3 நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கலாம் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி மத்திய அரசு தரப்பில் முறையிடப்பட்டது. மேலும் பல மனுக்களும் தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்களை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது.
இந்த வழக்கில், 2006 ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட தீர்ப்பையே மீண்டும் உறுதி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடுகள் வழங்கத் தேவையில்லை எனவும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இந்த வழக்கை 7 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையினையும் நிராகரித்த உச்சநீதிமன்றம், நிபந்தனைகளின் அடிப்படையில் பதவி உயர்வில் இடஒதுக்கீடுகள் வழங்கத் தேவையில்லை என்றும் தீர்ப்பளித்துள்ளது.