T.R.Baalu warned O.P.Ravindranath Kumar: மக்களவையில் காஷ்மீர் தொடர்பான விவாதத்தில், திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் டி.ஆர்.பாலு பேசிக்கொண்டிருந்தபோது, குறுக்கிட்டு பேசிய அதிமுக எம்.பி.ரவீந்திரநாத் குமாரை பேசுவதற்கு உங்களுக்கு முதுகெலும்பு கிடையாது, உட்காருங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியலமைப்பு சட்டத்தின் 370வது பிரிவை மத்திய அரசு திருத்தம் செய்து அம்மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. மேலும், அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்க வழி செய்யும் மசோதாக்களை மத்திய அரசு மக்களவையில் நேற்று தாக்கல் செய்தது.
அந்த மசோதாக்கள் மக்களவையில் இன்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இந்த விவாதத்தில் திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு பேசினார். அப்போது அவர், “பாஜக ஏதோ செயற்கறிய செயலை செய்துவிட்டதைப் போல பெருமை பேசுகிறது. ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, கேரளாவில் பாஜகவால் ஏன் வெற்றி பெறமுடியவில்லை என்பதை சிந்திக்க வேண்டும் என்று கூறினார். அப்போது, அதிமுகவின் ஒற்றை மக்களவை உறுப்பினரும் தேனி தொகுதி எம்.பி-யுமான ஓ.பி.ரவிந்திரநாத்குமார் குறுக்கிட்டு பேசினார். ரவிந்திரநாத் குறுக்கிட்டு பேசுவதற்கு திமுக எம்.பி. கனிமொழி எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், அவர் தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். இதனால், கோபமடைந்த டி.ஆர். பாலு, “மக்களவை என்பது முதுகெலும்பு உள்ளவர்கள் பேசும் இடம். உங்களுக்கு முதுகெலும்பே கிடையாது. உட்காருங்கள்..” என்று ஆவேசமாக கூறினார். அப்போது, திமுக எம்.பி-க்கள் மேஜையை தட்டி ஆரவாரம் செய்தனர்.
இதையடுத்து, சபாநாயகர் டி.ஆர்.பாலுவிடம் உறுப்பினரை மிரட்டும் வகையில் பேச வேண்டாம் என்று அறிவுறுத்தினார். அதற்கு அவர், தான் யாரையும் மிரட்டவில்லை எனக்கு முதுகெலும்பு இருப்பதால் பேச அனுமதித்தீர்கள். சிலருக்கு முதுகெலும்பு இல்லை. அதனால், அவர்களை பேசக் கூடாது என்று கூறினேன் என்றார்.
டி.ஆர்.பாலுவின் இந்த பேச்சு இன்று இணையத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.