தமிழகத்தில் ஊடக விவாதங்களில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என தமிழக பா.ஜ. தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தினசரி நிகழும் ஏதேனும் ஒரு சம்பவங்கள், பிரச்னைகள் அல்லது அரசியல் நகர்வுகள் குறித்து ஊடகங்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், அந்தந்த துறைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர்களை அழைத்து விவாதம் நடத்தி வருகின்றன.இந்த விவாதங்களில் சில சமயங்களில் யாரோ ஒரு தரப்புக்கு சாதமான விவாதங்களாக முடிந்துவிடுவதும் உண்டு. சில கட்சிகள் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்து வைக்க போதிய நேரத்தை ஊடகங்கள் வழங்க மறுப்பபதாக அடிக்கடி குற்றம்சாட்டுவது உண்டு. ஏற்கனவே திமுக, அதிமுக, பாமக என எல்லா கட்சிகளுமே இப்படி அறிவித்து பின்னர் திரும்ப பெற்றுள்ளன.
இந்நிலையில் மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை செளந்தரராஜன் ஊடக விவாதங்களில் பாஜக சார்பில் யாரும் பங்கேற்கமாட்டார்கள் என அறிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2019/07/template-42-300x200.jpg)
இதுதொடர்பாக தமிழிசை செளந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் " தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும், கருத்துக்களையும் மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு மிகவும் பயளிப்பதாக உள்ளது. ஆனால் சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும், சம வாய்ப்பும் இல்லாததால் தற்பொழுது பாரதிய ஜனதா கட்சியின் பிரதிநிதிகள் யாரும் கலந்து கொள்ளமாட்டார்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
அதிமுகவில் இரட்டை தலைமை உள்ளதாகவும், இது கட்சியின் நன்மைக்கு நல்லதல்ல என்று மதுரை முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா தெரிவித்த கருத்து, அதிமுகவில் பெரும்பிரளயத்தையே உருவாக்கியது. ராஜன் செல்லப்பாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் தொடர்ந்து பலர் கருத்துகளை தெரிவித்து வந்ததால், கட்சியின் நடவடிக்கைகள் குறித்து பொதுஇடங்களில் கருத்து தெரிவிக்க தொண்டர்களுக்கு கட்சி தலைமை உத்தரவிட்டது. அதோடுநின்றுவிடாமல், தொலைக்காட்சி விவாதங்களில் அதிமுக சார்பில் யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த தடை, கடந்த ஜூலை 1ம் தேதியிலிருந்து தளர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.