ரூ4,833 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: இ.பி.எஸ் மீதான புகார் என்ன? | Indian Express Tamil

ரூ4,833 கோடி டெண்டர் முறைகேடு வழக்கு: இ.பி.எஸ் மீதான புகார் என்ன?

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

Tamil news
Tamil news updates

2018ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களில் முறைகேடு நடந்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், இபிஎஸ் அவரது உறவினர்கள், நெருங்கியவர்களுக்கு சட்டவிரோதமாக ஒப்பந்தத்தை வழங்கியதில் சுமார் ரூ. 4,833 கோடி முறைகேடு நடந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஒட்டன்சத்திரம்-தாராபுரம்- அவினாசிபாளையம் நான்கு வழி சாலைக்கான திட்ட மதிப்பு ரூ.713.34 கோடியிலிருந்து ரூ.1,515 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நெல்லை-செங்கோட்டை-கொல்லம் நான்கு வழி சாலை பலப்படுத்தி, விரிவுபடுத்த ரூ.720 கோடி ஒப்பந்தம் வெங்கடாஜலபதி அண்ட் கோவுக்கு வழங்கப்பட்டது.

ஒப்பந்தங்கள் பழனிசாமியின் உறவினர்கள் பி.சுப்பிரமணியம், நாகராஜன் செய்யாத்துரை, சேகர் ரெட்டி ஆகியோர் பங்குதாரர்களாக இருக்கும் நிறுவனங்களுக்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டு பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இபிஎஸ் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என திமுக மனுவில் கோரி இருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சிபிஐ விசாரிக்க கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் 2 உத்தரவிட்டது. ஆரம்பகட்ட விசாரணையை 3 மாத காலத்துக்குள் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை, இபிஎஸ் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் தனித்தனியாக மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு புகாரை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்தநிலையில், தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில்,” சிபிஐ விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையால் விசாரணை பாதிக்கப்பட்டுள்ளது. இதை அவரச வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது. இதனை பரிசீலித்த நீதிமன்றம் இன்று (ஜூலை 26) வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest Politics news download Indian Express Tamil App.

Web Title: Tender case against edapaddi palanisamy484519