தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதற்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரப் படுத்தியுள்ளன. திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக , மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியிலும், அதிமுக, பாமக, பாஜக, தாமக உள்ளிட்ட கட்சிகள் ஒரு கூட்டணியிலும் களம் காண்கின்றன.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் சேலத்தில் நேற்று நடைப்பெற்றது. இதில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸிட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட கூட்டணிக்கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.
இப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அரசு மாநிலங்களுக்கு இழைக்கும் கலாச்சார அநீதியை தடுக்க தமிழ்நாட்டில் தனது தலைமையில் உள்ள கூட்டணிப்போல, தேசிய அளவில் பாஜகவிற்கு எதிரான ஒரு கூட்டணியை அமைக்குமாறு ராகுல் காந்தியிடம் கேட்டுக்கொண்டார்.
இந்தியாவில் , வகுப்புவாத, பாசிச சக்திகளால் மூச்சு திணறல் ஏற்படுவதாகவும், அதற்கு எதிராக நாட்டை பாதுக்காக்க ராகுல் காந்திக்கு பெரிய பொறுப்பு இருப்பதாகவும் ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தின் உரிமைகளை மீட்க அனைவரும் ஓர் அணியில் திரள வேண்டும் என கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பும் விடுத்தார்
கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியின் பலத்தால் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்ல முடியவில்லை. வருகின்ற சட்டமன்ற தேர்தலிலும் மதவாத பாஜகவுக்கு இதே நிலைதான் ஏற்படும் என்று பேசினார்.
பாராளுமன்ற தேர்தலில் 37 சதவீத மக்களே பாஜகவை ஏற்றுக் கொண்டனர் என்றும் 63 சதவீத மக்கள் பாஜக எதிராக வாக்களித்தனர் என்றும் கூறினார். ஏனென்றால் தமிழ்நாட்டில் இருந்ததுபோல் பாஜகவிற்கு எதிராக தேசிய அளவில் பெரிய கூட்டணி இல்லை.
மேலும் கூடங்குளம் அணுசக்தி திட்டம், தேனியில் நியூட்ரினோ திட்டம், சென்னை- சேலம் இடையிலான எட்டு வழிச்சாலை போன்றவை தமிழகத்தின் மீதான ‘இராசயன தாக்குதல்’ என்று கூறினார்.
மத்திய பாஜக அரசு செய்யும் இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பு, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு, தமிழகத்தில் உள்ள மத்திய அரசுப்பணிகளில் வட மாநிலத்தவரை பணியமர்த்துவது போன்றவை தமிழகத்தின் மீதான ’கலாச்சார தாக்குதல்’ என்றும் கூறினார்.
திமுகவால் மட்டுமே இத்தகைய தாக்குதலுக்கு எதிராக நிற்க முடியும் என்றும், அதிமுக அரசு மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம் என்றாலும் இதனை தடுக்க முடியாமல் மாநில உரிமைகளை விட்டு கொடுத்துவிட்டது என்று குற்றம் சாட்டினார். தமிழகத்தில் பாஜகவால் நேரடியாக கால் ஊன்ற முடியாத்தால் அதிமுகவை மிரட்டுவதன் மூலம் சட்டமன்றத்தில் நுழையலாம் என்று முயற்சிக்கின்றனர். மறைந்த அதிமுக தலைவரான செல்வி ஜெயலலிதா 2016ல் இறந்ததை அடுத்து பாஜக தமிழகத்தின் அனைத்து விஷயங்களிலும் தலையிடுவதாக குற்றம் சாட்டினார்.
2018ல் திமுக தலைவர் கருணாநிதியின் மரணத்தின் போது அவரது உடலை அடக்கம் செய்ய சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே 6 அடி இடம் கொடுக்க அதிமுக விரும்பவில்லை. பிரதமர் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள் என்னைத் தொடர்புக்கொண்டு ஆறுதல் தெரிவித்தனர். ஏதாவது உதவி வேண்டுமா? என்று கேட்டார்கள். நான் அதிமுக அரசிற்கு கடிதம் எழுதியுள்ளேன் என்று கூறினேன். பின்பு நீதிமன்றம் சென்றே ஐந்து முறை முதல்வராக இருந்த எங்கள் தலைவரை மெரினாவில் அடக்கம் செய்தோம். ஆனால் இதற்காக மத்திய அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று முதன்முறையாக குற்றம் சாட்டினார்.
தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றத்திற்கானது மட்டுமல்ல சுயமரியாதையையும் இழந்த உரிமைகளை மீட்பதற்குமானது என்று கூறினார்.
முதல்வர் பழனிச்சாமியும் துணை முதல்வர் பன்னீர்செல்வமும் மக்களை பற்றி கவலைப்படாமல் ஊழல் செய்து பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டிருந்தார்கள். மேலும் பாஜகவிற்கு அடிபணிவதை மட்டுமே செய்தார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil