தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியிலிருந்து இசக்கி சுப்பையாவும் விலகியுள்ளதால், அக்கட்சியின் அலுவலகம் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
அமமுகவில் இருந்து ஒவ்வொரு நிர்வாகிகளாக வெளியேறிவரும் சூழலில் இப்போது முன்னாள் அமைச்சரும் அமமுகவின் தென் சென்னை வேட்பாளராக களம் இறங்கிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து வெளியேறியுள்ளார்.. இதனால் அவருக்கு சொந்தமான இடத்தில் இருக்கும் அமமுகவின் கட்சி அலுவலகம் பறிபோகும் நிலை அமமுகவுக்கு ஏற்பட்டுள்ளது.
அமமுகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அனைவரும் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்கள். தேர்தல் தோல்வி, மற்றும் தினகரனின் கர்வம் போன்றவற்றை காரணங்களாக கூறுகின்றனர் மாற்றுக் கட்சிக்கு செல்வோர். இந்த நிலையில் முன்னாள் அமைச்சரான இசக்கி சுப்பையாவும் அமமுகவில் இருந்து வெளியேறி அதிமுகவில் இணைந்துள்ளார்.
தற்போது அமமுக அலுவலகம் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரியில் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் இசக்கி சுப்பையாவுக்கு சொந்தமானது. சமீபத்தில் அக்கட்சியின் பதிவு பற்றி நாளிதழ்களில் வந்த விளம்பரத்தில் கூட தலைமை அலுவலகம் என்ற பெயரில் 10, டாக்டர் நடேசன் தெரு, அசோக் நகர், சென்னை-83 என்ற முகவரி தான் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இசக்கி சுப்பையா கட்சியில் இருந்து வெளியேறி உள்ளதால், அமமுகவின் கட்சி அலுவலகம் வேறு இடத்திற்கு மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தினகரனின் அதிகாரப் போக்கினால் அவர் முக்கிய நிர்வாகிகள் ஒவ்வொருவரையாக இழந்து வருவதோடு இப்போது கட்சி அலுவலகத்தையும் இழக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு தலைமை என்றால் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும் ஆனால் தினகரன் தன்னை ஜெயலலிதாவை விட மேலானவர் என்று எண்ணிக்கொண்டு இருப்பதாக இசக்கி சுப்பையாவின் ஆதரவாளர் கருத்து தெரிவித்துள்ளார்.
இனி என்ன செய்யப்போகிறாரோ தினகரன்?