ஸ்பீக்கர் முதல், தகவல்தொடர்பு, கிரெடிட் கார்டு வரை... காந்தங்களின் 10 சுவாரசியமான அறிவியல் உண்மைகள்!

காந்தங்கள் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவை. மருத்துவ சாதனங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் டேட்டா சேமிப்பு போன்ற பல தொழில்நுட்பங்களின் மையமாக உள்ளன. நவீன உலகில் வேகமாகப் பயணிப்பது முதல் பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை வரை எல்லாவற்றிற்கும் முக்கிய அச்சாணியாக உள்ளன.

காந்தங்கள் நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாதவை. மருத்துவ சாதனங்கள், மின்சார மோட்டார்கள் மற்றும் டேட்டா சேமிப்பு போன்ற பல தொழில்நுட்பங்களின் மையமாக உள்ளன. நவீன உலகில் வேகமாகப் பயணிப்பது முதல் பாதுகாப்பான மருத்துவ சிகிச்சை வரை எல்லாவற்றிற்கும் முக்கிய அச்சாணியாக உள்ளன.

author-image
Meenakshi Sundaram S
New Update
Magnet Facts

ஸ்பீக்கர் முதல், தகவல் தொடர்பு, கிரெடிட் கார்டு வரை... காந்தங்களின் 10 சுவாரசியமான அறிவியல் உண்மைகள்!

ஃப்ரிட்ஜில் ஒட்டப்படும் அலங்காரப் பொருட்கள், அறிவியல் பெட்டியில் உள்ள சின்னஞ்சிறிய உபகரணங்கள்... காந்தங்களை நாம் இப்படித்தான் பார்க்கிறோம். ஆனால், இந்தக் காந்த சக்தி நம் அன்றாட வாழ்க்கையையே வடிவமைக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? மருத்துவ சாதனங்கள், மின்சார மோட்டார்கள், டேட்டா சேமிப்பு முதல், நம்மைப் பாதுகாக்கும் பூமி வரை, இந்தக் கண்ணுக்குத் தெரியாத காந்தங்களின் பங்கு நம்பமுடியாதது. காந்தங்கள் ஏன் இவ்வளவு முக்கியம்? அவை எப்படி வேலை செய்கின்றன என்று பார்ப்போமா? காந்தங்களைப் பற்றி நீங்க கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 10 சுவாரசியமான அறிவியல் உண்மைகள் இதோ!

Advertisment

1. காந்தத்தை உடைத்தாலும் மாறாது அதன் துருவம்!

ஒரு காந்தத்தை நீங்க எவ்வளவு சிறிய துண்டுகளாக வெட்டினாலும், அதற்கு ஒரு வடக்கு மற்றும் தெற்கு துருவம் கட்டாயம் இருக்கும். காந்தத் துருவங்கள் எப்போதும் ஜோடியாகவே (Pairs) இருக்கும். ஒரு காந்தத்தை உடைத்தால், நீங்க 2 சிறு காந்தங்களைப் பெறுவீர்களே தவிர, தனித்த துருவங்களைப் பெற முடியாது. ஏனென்றால், காந்தப் புலங்கள் எலக்ட்ரான்களின் அசைவால் ஏற்படுகின்றன; அதை உடைப்பதால் இந்த எலக்ட்ரான்களின் செயல்பாடு நின்றுவிடாது.

2. பூமிதான் உலகிலேயே மிகப்பெரிய காந்தம்!

மனிதர்கள் அறிந்த மிகச் சக்திவாய்ந்த காந்தங்களில் முதன்மையானது, நம்முடைய பூமிதான்! பூமியின் வெளிப்புற மையத்தில் உள்ள உருகிய இரும்பு மற்றும் நிக்கல் நகர்வதன் மூலமே இந்த ராட்சதக் காந்தப்புலம் உருவாகிறது. இந்தக் கண்ணுக்குத் தெரியாத காந்தக்கவசம், சூரியனிடம் இருந்து வரும் தீங்கு விளைவிக்கும் கதிர்களைத் திருப்பி அனுப்பி, நம்மைப் பாதுகாக்கிறது. இதனால்தான் திசைகாட்டியின் ஊசியும் வடக்குப் பக்கம் சுட்டிக் காட்டுகிறது.

3. காந்தப்புலம் கண்ணுக்குத் தெரியாது, ஆனால் உணரும்!

உங்களால் ஒரு காந்தப்புலத்தை நேரடியாக பார்க்க முடியாது. ஆனால், அதன் செயல்பாட்டை நன்கு உணரலாம். ஒரு காந்தத்தை சுற்றி இரும்புத் துகள்களைத் தூவினால் அவை அந்தக் கண்ணுக்குத் தெரியாத விசைக் கோடுகளின் பாதையில் தானாகவே வரிசைப்படுத்தப்படும். காந்தமானி (Magnetometer) போன்ற கருவிகளைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் இதன் வலிமையை அளவிடுகிறார்கள்.

Advertisment
Advertisements

4. அன்றாட வாழ்வில் காந்தங்களின் அணிவகுப்பு!

காந்தங்களை நாம் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்துகிறோம் என்பது பலருக்குத் தெரியாது. உங்கள் மொபைல் போன், சத்தத்தைக் கேட்கும் ஸ்பீக்கர்கள், வேகமாக ஓடும் மின்விசிறி, ஏன் நீங்க மருத்துவமனையில் எடுக்கும் MRI ஸ்கேனர், கிரெடிட் கார்டுகள் வரை எல்லா இடங்களிலும் காந்தங்கள் உள்ளன.

5. மின்காந்தங்கள் - தேவைக்கேற்ப ஆஃப், தேவைக்கேற்ப ஆன்!

நிரந்தர காந்தங்கள் போலன்றி, மின்காந்தங்களுக்கு மின்சாரம் தேவை. மின்சாரம் பாயும்போது காந்த சக்தி உருவாகும்; மின்சாரம் நிறுத்தப்பட்டால், காந்த சக்தி மறைந்துவிடும். இந்த எளிமையான கட்டுப்பாடுதான், குப்பைகளைத் தூக்கும் கிரேன்கள், மேக்லெவ் ரயில்கள் மற்றும் மின்சார மணிகளில் இவை பயன்படுத்தப்படக் காரணம்.

6. விலங்குகளுக்குப் பாதை காட்டும் காந்த சக்தி!

சில விலங்குகளுக்கு, குறிப்பாக புறாக்கள் மற்றும் கடல் ஆமைகளுக்கு, பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன் உள்ளது. அவை புலம்பெயரும் போது வழியைக் கண்டறிய இந்தத் 'காந்தப் புல உணர்வை' (Magnetoreception) பயன்படுத்துகின்றன. விலங்குகளின் உடலில் உள்ள சில சிறப்புப் புரதங்கள் அல்லது மேக்னடைட் துகள்கள் இதற்குக் காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

7. நியோடைமியம்: சின்ன சைஸ், பெரிய பவர்!

பழங்காலத்தில் இயற்கையாகக் கிடைத்த லோட்ஸ்டோன் போன்ற காந்தங்களைப் பயன்படுத்தினர். ஆனால் இன்று, இரும்பு, கோபால்ட் மற்றும் அரிய பூமி தனிமங்களான நியோடைமியம் போன்றவற்றைக் கொண்டு சக்திவாய்ந்த காந்தங்களை உருவாக்குகிறோம். நியோடைமியம் காந்தங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, இவை ஹார்ட் டிரைவ்கள் மற்றும் காற்றாலைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

8. தரையில் மிதக்கும் ரயில்! 

சயின்ஸ் ஃபிக்‌ஷன் படங்களில் வருவதுபோல், மாக்லெவ் (Maglev) ரயில்கள் காந்த சக்தியைப் பயன்படுத்தித் தண்டவாளங்களுக்கு மேலே மிதந்து செல்லும். உராய்வு இல்லாததால், இந்த ரயில்கள் மணிக்கு 500 கி.மீ.க்கும் அதிகமான வேகத்தில் செல்ல முடியும். இது அற்புதமான, திறமையான பயண அனுபவம்!

9. வானிலையையும், தகவல்தொடர்பையும் பாதிக்கும் காந்தப்புலம்!

சூரியனில் இருந்து புவிக்காந்தப் புயல்கள் (Geomagnetic Storms) உருவாகும்போது, அது பூமியின் காந்தப் புலத்தை பாதிக்கலாம். இந்த மாற்றங்கள் ஜி.பி.எஸ். சிக்னல்கள், ரேடியோ தகவல்தொடர்புகள் மற்றும் மின் கட்டங்களில் (Power Grids) கூடத் தடைகளை ஏற்படுத்தலாம். விஞ்ஞானிகள் இதனைத் தொடர்ந்து கண்காணித்து, தொழில்நுட்பத்தைப் பாதுகாக்கின்றனர்.

10. மின்சாரம் மற்றும் காந்தம்: பிரிக்க முடியாத இரட்டைகள்!

காந்தவியலும் மின்சாரமும் மின்காந்தவியல் (Electromagnetism) என்ற அடிப்படைக் கொள்கையின் கீழ் பிணைக்கப்பட்டுள்ளன. ஒரு கம்பி வழியே மின்சாரம் பாயும்போது காந்தப்புலம் உருவாகிறது. அதேபோல், ஒரு கடத்திக்கு அருகில் காந்தத்தை நகர்த்தும்போது மின்சாரம் உருவாகிறது. இந்த இரட்டைத் தத்துவம்தான், நாம் பயன்படுத்தும் மின்சார ஜெனரேட்டர்கள் மற்றும் மின்மாற்றிகளின் அடிப்படையாகச் செயல்படுகிறது. காந்தங்கள் நமது நவீன வாழ்க்கை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் மிக முக்கியமான அச்சாணியாக உள்ளன என்பதில் சந்தேகமில்லை.

Science

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: