/indian-express-tamil/media/media_files/2025/10/28/exoplanets-2025-10-28-15-03-34.jpg)
2 சூரியன்கள், 3 பூமி சைஸ் கோள்கள்... விண்வெளி ஆராய்ச்சியில் நாசாவின் மெகா ட்விஸ்ட்!
விஞ்ஞானிகள் இதுவரையில் நம்பியிருந்த அத்தனை விதிகளையும் தலைகீழாக மாற்றும் ஒரு அதிர்ச்சித் தகவலை, அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா வெளியிட்டுள்ளது. ஒரே இரட்டை நட்சத்திரங்களை சுற்றிவரும் 3 பூமி அளவுள்ள புதிய கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன.
பொதுவாக, 2 சூரியன்கள் மிக நெருக்கமாக ஒன்றையொன்று சுற்றிவரும் 'இரட்டை நட்சத்திர அமைப்புகளில்' கோள்கள் உருவாகுவது கிட்டத் தட்ட அசாத்தியம் என்றே நம்பப்பட்டது. காரணம், இந்த 2 நட்சத்திரங்களின் கடுமையான ஈர்ப்பு விசை, கோள்களின் உருவாக்கத்தை சிதைத்து விடும் என்று கருதப்பட்டது. ஆனால், TESS விண்கலம் கண்டறிந்த TOI-2267 எனப்படும் இந்த அமைப்பில், 3 கோள்கள் வெற்றிகரமாக உருவாகி, தங்கள் பாதையில் சுற்றி வருகின்றன. இது கோள்கள் எப்படி உருவாகின்றன, கடுமையான சூழலை எப்படித் தாங்கி நிலைக்கின்றன என்பது குறித்த நம் புரிதலை மொத்தமாக மாற்றியுள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
இந்த டூயல் நட்சத்திரங்களில் உள்ள ஒரு கிரகம், புகழ்பெற்ற 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படத்தின் டேடூயின் கிரகத்தைப் போலவே 2 சூரியன்கள் அஸ்தமனமாவதைப் பார்க்கும் வாய்ப்பைக் கொண்டிருக்கலாம். இந்தக் கண்டுபிடிப்பு முறியடித்த சாதனைகள் என்ன தெரியுமா? அதன் இரு நட்சத்திரங்களையும் சுற்றிவரும் கோள்களைக் கொண்ட முதல் இரட்டை அமைப்பு இதுதான். 2 கோள்கள் ஒரு நட்சத்திரத்தையும், 3-வது கோள் அதன் துணையான மற்றொரு நட்சத்திரத்தையும் சுற்றி வருகின்றன. இது கோள்களுடன் அறியப்பட்ட மிகவும் கச்சிதமான (Compact) மற்றும் மிகவும் குளிர்ந்த நட்சத்திர ஜோடி ஆகும். ஆய்வுக்குழு உறுப்பினர் செபாஸ்டியன் ஸுனிகா-ஃபெர்னாண்டஸ், "இந்த கண்டுபிடிப்பு, சிக்கலான சூழல்களில் கோள் உருவாக்கம் குறித்த கோட்பாடுகளின் வரம்புகளை ஆராய ஒரு அரிய வாய்ப்பை அளிக்கிறது," என்று உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
இந்தக் கிரகங்கள் பூமியில் இருந்து சுமார் 120 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளன. இவை பாறைகளால் ஆன கிரகங்கள் (Rocky Planets) எப்படி கடுமையான ஈர்ப்பு விசையின் நடுவிலும் நிலைத்திருக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு 'இயற்கை ஆய்வகமாக' செயல்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த புதிய அமைப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (JWST) போன்ற அதிநவீன கருவிகளுக்கு ஒரு சரியான இலக்காக மாறியுள்ளது. இந்தத் தொலைநோக்கிகள் மூலம், இந்தக் கோள்களின் நிறை (Mass), அடர்த்தி (Density) மற்றும் அவற்றின் வளிமண்டல அமைப்பு ஆகியவற்றைப் பற்றி மேலும் ஆராய முடியும். விண்வெளியின் கோள் அமைப்புகள் பற்றிய நம் கற்பனைகளை இந்தக் கண்டுபிடிப்பு விரிவுபடுத்தியுள்ளது!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us