/indian-express-tamil/media/media_files/2025/11/03/rogue-planet-2025-11-03-09-51-25.jpg)
வினாடிக்கு 600 கோடி டன் பொருட்களை விழுங்கும் கிரகம்... அசுரவேகத்தில் வளர்ச்சி!
நமது சூரிய குடும்பத்தை விட சுமார் 620 ஒளி ஆண்டுகள் தொலைவில், தனிமையில் சுற்றித்திரியும் கோள் (Rogue Planet) வானியலாளர்களைத் திக்குமுக்காட வைத்துள்ளது. Cha 1107-7626 எனப் பெயரிடப்பட்ட இந்தக் கோளானது, நமது வியாழன் கோளின் நிறையைப் போல 5 முதல் 10 மடங்கு வரை இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக கோள்கள் மெதுவாகவே உருவாகும் அல்லது வளர்ச்சி அடையும். ஆனால், இந்தக் கோள் ஒரு விண்மீனைப் போலச் செயல்படுகிறது.
விண்வெளியில் உள்ள வாயு மற்றும் தூசி நிரம்பிய ஒரு வட்டு இந்தக் கோளைச் சுற்றி அமைந்துள்ளது. அதில் உள்ள பொருட்கள் அனைத்தும், வினாடிக்கு சுமார் 6 பில்லியன் டன்கள் என்ற அசுர வேகத்தில் கோளின் மேற்பரப்பில் விழுந்து உறிஞ்சப்படுகின்றன. சமீபத்திய தரவுகள் என்ன சொல்கின்றன தெரியுமா?
இந்த வாயு உறிஞ்சும் விகிதம், கடந்த சில மாதங்களில் திடீரெனப் பன்மடங்கு அதிகரித்துள்ளது. கோள்கள் அமைப்பில் இந்த மாதிரியான திடீர் வெடிப்பு வளர்ச்சி மிகவும் அரிதான ஒன்றாகும். வானியலாளர்கள் இந்த வேகமான திரட்சிக்குக் காந்த செயல்பாடுகளே காரணமாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.
இந்த வேகமான திரள்வு நிகழ்வின்போது ஒரு விசித்திரமான இரசாயன மாற்றம் நிகழ்ந்துள்ளது. திடீரெனக் கோளின் வட்டில் நீராவி (Water Vapour) கண்டறியப்பட்டுள்ளது. இந்தச் சுறுசுறுப்பான வளர்ச்சி தொடங்கும் முன், அங்கு நீராவி இருந்ததற்கான எந்த அறிகுறியும் இல்லை. இது, கோள்கள் உருவாகும்போது ஏற்படும் தீவிரமான இரசாயன செயல்முறைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
Cha 1107-7626 கோளின் இந்தப் போக்கு, பாரம்பரிய வானியல் வரையறைகளை உடைக்கிறது. விண்மீன்களுக்கும் கோள்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை இது கேள்விக்குள்ளாக்குகிறது. சுதந்திரமாகக் காணப்படும் இந்தக் கோள்கள், வெளியேற்றப்பட்ட பழைய வாயுப் பிண்டங்களாக இல்லாமல், விண்மீன்களைப் போலவே 'பிறந்திருக்கலாம்' என்பதற்கான புதிய தடையத்தை இந்தக் கண்டுபிடிப்பு வழங்குகிறது. இந்தச் சுவாரஸ்யமான நிகழ்வை, வெரி லார்ஜ் டெலஸ்கோப்பின் X-shooter ஸ்பெக்ட்ரோகிராஃப் மூலம் கண்காணித்து, பின்னர் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் தரவுகள் மூலம் வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கோள்களின் உருவாக்கம் என்பது நாம் நினைத்ததை விடப் பலமடங்கு தீவிரமானதாகவும் வன்முறை நிறைந்ததாகவும் இருக்கலாம் என்பதை இக்கண்டுபிடிப்பு உணர்த்துகிறது. இத்தகைய திடீர் வளர்ச்சி, கோள்களின் வளிமண்டலத்தையும், எதிர்காலத்தில் நிலாக்கள் உருவாவதையும் பாதிக்கக்கூடும். வானியலாளர்கள், இந்த விண்மீன் மண்டலத்தில் இதுபோன்ற வெடிப்பு நிகழ்வுகள் எவ்வளவு அடிக்கடி நடக்கின்றன என்பதைக் கண்டறியத் திட்டமிட்டுள்ளனர். Cha 1107-7626 குறித்த ஆய்வுகள், நமது கோள் உருவாக்க மாதிரிகளில் ஒரு புரட்சியைக் கொண்டு வரலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us