/indian-express-tamil/media/media_files/2025/11/05/hindu-kush-himalayan-glaciers-2025-11-05-18-32-48.jpg)
'2100-க்குள் 75% இமயமலை பனிப்பாறைகள் காலி'... சயின்ஸ் இதழில் வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்!
ஆசியக் கண்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் இந்து குஷ் இமயமலைப் பகுதி (HKH) ஆபத்தில் இருப்பதாக புதிய அறிவியல் ஆய்வு எச்சரித்து உள்ளது. புவி வெப்பமயமாதல், தொழில்புரட்சிக்கு முந்தைய அளவை விட 2 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், என்ன நடக்கும் தெரியுமா? 2100-ம் ஆண்டுக்குள், இமயமலைத் தொடர் தனது பனிப்பாறைகளில் 75% அதாவது 4-ல் 3 பங்கை, முற்றிலுமாக இழந்திருக்கும். வெறும் பனி உருகுவது மட்டுமல்ல; ஆசியாவின் முக்கிய நதிகளின் நீராதாரமே இந்தப் பனிப்பாறைகள்தான். இவற்றை நம்பி சுமார் 200 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் குடிநீர் மற்றும் விவசாய ஆதாரங்கள் அனைத்தும் கேள்விக்குறியாகும்.
சயின்ஸ் இதழில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வு, பாரிஸ் ஒப்பந்தத்தின் முக்கியத்துவத்தை மீண்டும் ஒருமுறை நமக்கு நினைவூட்டுகிறது. புவி வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸாகக் கட்டுப்படுத்தினால், இமயமலை மற்றும் காகசஸ் பகுதிகளில் உள்ள பனிப்பாறைகளில் 40 முதல் 45% நம்மால் காப்பாற்ற முடியும். இது ஓரளவுக்கு நம்பிக்கையான செய்தி. ஆனால், வெப்பம் 2 டிகிரியைத் தொட்டால், இழப்பு 75% ஆக உயர்ந்து, பேரழிவாக மாறும்.
இந்த ஆபத்து இமயமலைக்கு மட்டுமல்ல. தற்போதைய காலநிலை கொள்கைகளின்படி, உலகம் 2.7 டிகிரி செல்சியஸ் உயர்வை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அப்படி நடந்தால், உலகின் மொத்த பனிப்பாறைகளில் வெறும் 24% மட்டுமே எஞ்சியிருக்கும். குறிப்பாக, மனித வாழ்வுக்கு முக்கியமான சில பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்படும். ஐரோப்பிய ஆல்ப்ஸ், வட அமெரிக்க ராக்கீஸ், ஐஸ்லாந்து பனிமலைத் தொடர்கள், 2°C வெப்ப உயர்விலேயே தங்கள் பனிப்பாறை அளவுகளில் 85 முதல் 90% இழந்துவிடும் (வெறும் 10-15% மட்டுமே மிஞ்சும்).
மிகக் கவலையளிக்கும் விஷயம், ஸ்காண்டிநேவியா பகுதியில் உள்ள பனிப்பாறைகள் முற்றிலுமாக உருகி, ஒன்றுகூட மிஞ்சாமல் போகும் அபாயம் உள்ளது. ஆராய்ச்சியாளர்கள் கூறும் மிக அதிர்ச்சிகரமான தகவல் இதுதான். ஒருவேளை நாம் புவி வெப்பமயமாதலை முழுமையாகக் கட்டுப்படுத்தி, வெப்பநிலையைச் சீராக்கினாலும், பனிப்பாறைகள் உருகுவது உடனடியாக நிற்காது. ஏற்கனவே ஏற்பட்ட பாதிப்பால், பனிப் பாறைகள் உருகுவது இன்னும் பல பத்தாண்டுகளுக்குத் தொடரும். அவை மெல்ல மெல்ல உயர் மலைப்பகுதிகளுக்குப் பின்வாங்கி, ஒரு புதிய சமநிலையை அடைய பல நூற்றாண்டுகள் ஆகும். 10 நாடுகளைச் சேர்ந்த 21 விஞ்ஞானிகள் கொண்ட குழு, 8 விதமான பனிப்பாறை மாதிரிகளைப் பயன்படுத்தி, 200,000-க்கும் மேற்பட்ட பனிப் பாறைகளை ஆய்வு செய்து இந்த முடிவுகளை வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us