/indian-express-tamil/media/media_files/2025/06/10/M8fIoon1QjIaxN9bZE87.jpg)
28,000mph வேகத்தில் பூமியை நெருங்கும் ராட்சத 'சிட்டி கில்லர்' விண்கல்: நாசா எச்சரிக்கை!
விண்வெளி ஆர்வலர்களுக்கு திகில் செய்தி! ஒரு வணிக ஜெட் விமானத்தின் அளவுள்ள மிகப்பெரிய விண்கல், பூமியை நோக்கி மிக வேகமாக நெருங்கிக்கொண்டிருக்கிறது என நாசா (NASA) எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிக்கு 28,000 மைல் வேகத்தில் பயணிப்பதாக நாசா தெரிவித்து உள்ளது.
'நகரத்தை அழிக்கும்' விண்கல்!
2025 QD8 எனப்பெயரிடப்பட்ட இந்த விண்கல், சுமார் 17 முதல் 38 மீ. அகலம் கொண்டது. இது பூமியிலிருந்து வெறும் 135,465 மைல்கள் (218,009 கிமீ) தொலைவில் கடந்து செல்லும். இந்த தூரம், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தில் பாதியளவை விட சற்றே அதிகம். இந்த விண்கல் பூமியைத் தாக்கினால், ஒரு நகரத்தையே அழிக்கக்கூடும் என்பதால், விஞ்ஞானிகள் இதை சிட்டி கில்லர் (City Killer) என்றழைக்கின்றனர். ஆனால், கவலைப்படத் தேவையில்லை என விஞ்ஞானிகள் உறுதி கூறியுள்ளனர். ஏனெனில், நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) இந்த விண்கல்லால் எந்தத் தாக்கமும் ஏற்படாது என தெரிவித்துள்ளன.
ஏன் இதை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்?
2013-ல் வெறும் 18 மீட்டர் அளவுள்ள விண்கல் ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் நகரில் விழுந்தபோது, 1,500 பேர் காயமடைந்தனர். அதேபோல, 1908-ல் நடந்த துங்குஸ்கா வெடிப்பு, மிகப்பெரிய வனப்பகுதியை அழித்தது. இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடக்காவிட்டாலும், புவிக்கு அருகில் வரும் விண்கற்களை தொடர்ந்து கண்காணிப்பது ஏன் அவசியம் என்பதை இவை உணர்த்துகின்றன.
விண்கல்லை நேரடியாகப் பார்க்க முடியுமா?
துரதிர்ஷ்டவசமாக, இந்த விண்கல்லை வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. துல்லியமான தொலைநோக்கிகள் இருந்தால் மட்டுமே அதை காண முடியும். இருப்பினும், வானியல் ஆர்வலர்களுக்காக, இத்தாலியில் உள்ள தொலைநோக்கிகள் மூலம் விண்கல் கடந்து செல்லும் காட்சிகளை, தி விர்ச்சுவல் டெலஸ்கோப் ப்ராஜெக்ட் (The Virtual Telescope Project) நேரலையாக ஒளிபரப்ப உள்ளது.
நாசா தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான விண்கற்களைக் கண்காணித்து வருகிறது. அடுத்த 100 ஆண்டுகளுக்கு புவிக்கு அச்சுறுத்தல் இல்லை என நாசா உறுதியளித்துள்ளது. எனினும், இந்த விண்கல், நம் வளிமண்டலத்திற்கு வெளியே உள்ள விண்வெளியின் பிரம்மாண்டத்தை மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.