டோலமிக் காலத்தைச் சேர்ந்த மம்மி செய்யப்பட்ட 2000 செம்மறி ஆடு தலைகள் எகிப்தின் அபிடோஸில் உள்ள ராம்செஸ் II கோயிலில் கண்டெடுக்கப்பட்டதாக தொல்பொருள் அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை தெரிவித்தனர்.
கோயில்கள் மற்றும் கல்லறைகளுக்குப் புகழ்பெற்ற தெற்கு எகிப்திய தளமான அபிடோஸில் உள்ள ராம்செஸ் II கோயிலில் சுற்றுலா மற்றும் தொல்பொருட்கள் அமைச்சகம் சார்பில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது. இதில் செம்மறி ஆடுகள் உள்பட பல்வேறு விலங்குகளின் மம்மிகளும் கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
மம்மி செய்யப்பட்ட 2000 செம்மறி ஆடு தலைகள், நாய்கள், காட்டு ஆடுகள், பசுக்கள், மான்கள் மற்றும் முங்கூஸ்கள் கோயிலில் காணப்பட்டுள்ளன. இவைகள் 1,000 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என்றும் வழிபாட்டிற்காக பலிகொடுக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. ராம்செஸ் II இறந்த பிறகும் தொடர்ந்து அங்கு மரியாதை செலுத்தப்பட்டு வந்ததையும் இது குறிப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த கண்டுபிடிப்புகள் டோலமிக் காலம் வரையிலான இரண்டாயிரமாண்டுகளுக்கும் மேலான இந்த தளத்தின் அறிவை விரிவுபடுத்துகிறது. கி.மு 30 இல் ரோமானிய வெற்றி வரை டோலமிக் காலம் சுமார் மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.
பண்டைய உலகத்தை அறிய ஆய்வு செய்யும் நியூயார்க் பல்கலைக்கழகத்தின் ஒரு குழுதான் இந்த அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளன. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மம்மி செய்யப்பட்ட விலங்குகளின் எலும்புகளையும், சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 5 மீட்டர் தடிமன் (16 அடி) சுவர்களைக் கொண்ட அரண்மனையையும் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு வகை
சிலைகள், பாப்பைரி, பழைய மரங்களின் எச்சங்கள், தோல் ஆடைகள் மற்றும் காலணிகள் ஆகியவையும் இந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“