/indian-express-tamil/media/media_files/2025/08/18/beneath-the-ice-in-antarctica-2025-08-18-12-35-31.jpg)
அண்டார்டிக் பனிக்கு அடியில் ரகசிய உலகம்: 4,000 மீட்டர் ஆழ பனிப் பள்ளத்தாக்குகள் கண்டுபிடிப்பு!
அண்டார்டிகா என்றாலே நம் நினைவுக்கு வருவது உறைந்த, உயிரற்ற நிலப்பரப்புதான். ஆனால், அதன் பனிக்கு அடியில் ஒரு மறைந்த உலகம் உள்ளது. அது, இந்த ஒட்டுமொத்தப் பூமியின் ஆரோக்கியத்திற்கும் மிகவும் முக்கியமான ஒன்று என்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டறிந்து வருகிறார்கள்.
'மரைன் ஜியாலஜி' (Marine Geology) என்ற அறிவியல் இதழில் சமீபத்தில் வெளியான ஓர் ஆய்வுக் கட்டுரை, அண்டார்டிகாவின் கடல் தளத்தில் 332 நீர்மூழ்கிப் பள்ளத்தாக்குகள் (submarine canyons) புதைந்திருப்பதைக் கண்டறிந்துள்ளது. 'இன்டர்நேஷனல் பாத்திமெட்ரிக் சார்ட் ஆஃப் தி சதர்ன் ஓஷன்' (International Bathymetric Chart of the Southern Ocean (IBCSO v2)) மூலம் உருவாக்கப்பட்ட மேம்பட்ட கடலடி வரைபடத்தைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் இந்த நீர்மூழ்கிப் பள்ளத்தாக்குகளை முதல் முறையாகக் கண்டறிந்துள்ளனர்.
இந்த பள்ளத்தாக்குகள் சுமார் 4,000 மீட்டர் ஆழம் கொண்டவை. கடலுக்கடியில் உள்ள நெடுஞ்சாலைகள் போல செயல்பட்டு, ஊட்டச்சத்துகள், படிவுகள் மற்றும் தண்ணீரை கடற்கரையிலிருந்து ஆழ்கடலுக்கு நகர்த்துகின்றன. இதன் மூலம் கடல்வாழ் உயிரினங்கள் வளம்பெறுகின்றன, மேலும், இது கடல் நீரோட்டங்களையும் பாதிக்கிறது. இவற்றின் முக்கிய பணி, புவியின் ஒட்டுமொத்த காலநிலையை சீராக்குவதுதான்.
கிழக்கு அண்டார்டிகாவில் உள்ள பள்ளத்தாக்குகள் அகலமாகவும், 'U' வடிவிலும் காணப்படுகின்றன. பனிப்பாறைகளால் பல நூற்றாண்டுகளாக மெதுவாக உருவாக்கப்பட்டதைக் குறிக்கிறது. அதே சமயம், மேற்கு அண்டார்டிகாவில் உள்ள பள்ளத்தாக்குகள் செங்குத்தாகவும், குறுகலாகவும், 'V' வடிவிலும் இருக்கின்றன. இது, அவை சமீபத்திய காலத்தில், தீவிரமான புவியியல் நிகழ்வுகளால் உருவானதைக் காட்டுகிறது. இந்தப் பள்ளத்தாக்குகள், சூடான நீரை பனிப்பாறைகளின் அடியில் செலுத்தி, அவற்றை உருகுவதற்குக் காரணமாக உள்ளன. மேலும், குளிர்ந்த நீரை ஆழ்கடலுக்குள் தள்ளி, 'அண்டார்டிக் பாட்டம் வாட்டர்' (Antarctic Bottom Water) போன்ற உலகளாவிய கடல் நீரோட்டங்களுக்கு உதவுகின்றன.
இந்த கண்டுபிடிப்பு ஒரு ஆரம்பம் மட்டுமே. இதுவரை பூமியின் கடலடியில் வெறும் 27% மட்டுமே அதிக தெளிவுத்திறனுடன் (high resolution) வரைபடமாக்கப்பட்டுள்ளது. அண்டார்டிகாவிலேயே நூற்றுக்கணக்கான பள்ளத்தாக்குகள் மறைந்திருக்கும்போது, உலகெங்கிலும் உள்ள கடல்களில் ஆயிரக்கணக்கான பள்ளத்தாக்குகள் இருக்கக்கூடும். ஒவ்வொரு பள்ளத்தாக்கும் பனிப்பாறைகளின் வரலாறு மற்றும் புவியின் எதிர்காலக் காலநிலை பற்றிய ரகசியங்களை வைத்திருக்கலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.