நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் அனுப்பபட்ட நேரத்தில் சந்திரயான் -3 விண்கலத்தில் உள்ள உயர் தொழில்நுட்ப கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்களை இஸ்ரோ பகிர்ந்துள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பபட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் பூமி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் பின் பூமி சுற்றுப்பாதை 5 முறை உயர்த்தப்பட்டது. ஆகஸ்ட் 1-ம் தேதி விண்கலம் பூமி சுற்றுப்பாதையை நிறைவு செய்தது.
தொடர்ந்து நிலவு சுற்றுப் பாதைக்கான செயல்முறை டிரான்ஸ்லூனார் பயணத்தை தொடங்கியது. 5 நாட்கள் பயணத்திற்கு பின் ஆகஸ்ட் 5-ம் தேதி நிலவை நோக்கி செல்வதற்கான செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. ஆகஸ்ட் 5-ம் தேதி இரவு 7.15 மணியளவில் நிலவு சுற்றுப் பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 23-ம் தேதி சந்திரயான் -3 விண்கலம் நிலவை அடைந்து நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், விண்கலம் நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் அனுப்பபட்ட நேரத்தில் நிலவின் மேற்பரப்பை படம்பிடித்த வீடியோவை இஸ்ரோ ட்விட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“