சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் மாட்யூல் (எல்.எம்) 2-வது மற்றும் இறுதிக் கட்ட டீபூஸ்டிங் இன்று (ஆகஸ்ட் 20) செய்யப்பட்டு, சுற்றுப் பாதை வெற்றிகரமாக குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டர் 25 கி.மீ x 134 கி.மீ தூத்தில் நிலவைச் சுற்றி வருவதாக தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் லேண்டர் நிலவுக்கு மிக அருகில் சுற்றி வருகிறது.
மேலும் இஸ்ரோ கூறுகையில், லேண்டர் மாட்யூல் இப்போது உள் சோதனைக்கு உட்படுத்தப்படும் என்றும் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 5.45 மணியளவில் விண்கலம் நிலவில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 21-23 தேதிக்குள் நிலவை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட ரஷ்யாவின் லூனா 25 விண்கலம் நேற்று (ஆகஸ்ட் 19) நிலவுச் சுற்றுப் பாதை குறைப்பின் போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.
ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் கூறுகையில், "சுற்றுப் பாதை குறைப்பின் போது தானியங்கி நிலையத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் சுற்றுப் பாதை குறைக்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது. இருப்பினும் இதனால் விண்கலம் நிலவில் தரையிறங்குவதைத் தடுக்குமா என்பதை அது குறிப்பிடவில்லை".
இந்தியா மற்றும் ரஷ்யா இரு நாடுகளும் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்பியுள்ளன. நிலவின் தென் துருவத்தில் முதலில் தரையிறங்குவது யார் என்ற போட்டி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் லூனா 25 நாளை (ஆகஸ்ட் 21) நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொழில்நுட்ப சிக்கலால் திட்டமிட்டபடி தரையிறங்குமா என சிக்கல் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“