சந்திரயான்-3விண்கலம் இன்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்க உள்ளது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை ஒட்டு மொத்த நாடும் எதிர்பார்த்து காத்திருக்கிறது. சந்திரயான்-3 திட்டம் சந்திரயான்- 2 திட்டத்தின் தொடர்ச்சியாக நிகழ்த்தப்படுகிறது. சந்திரயான்- 2 லேண்டர் நிலவில் தரையிறங்கும் கடைசி நிமிடத்தில் நிலவில் மோதி தோல்வியடைந்தது.
இதையடுத்து பல கட்ட மேம்படுத்தல் பணிகளுக்குப் பின் சந்திரயான்-3 இன்று நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குகிறது. இந்நிலையில், சந்திரயான்-2 திட்டத்தின் விக்ரம் லேண்டரின் சிதைந்த பாகங்களை கண்டுபிடித்து 2019-ல் சர்வதேச தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்த சென்னையைச் சேர்ந்த ஐ.டி ஊழியர் சண்முக சுப்பிரமணியன், இன்று நடைபெறும் சந்திரயான்-3 தரையிறக்கத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறார்.
2019 டிசம்பரில், நாசா மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் இருந்து தப்பிய சந்திரயான்-2 லேண்டரின் கழிவுகளை சுப்பிரமணியன் கண்டுபிடித்து அனைவரையும் வியக்க வைத்தார். நாசா, இஸ்ரோவின் உயர் தொழில்நுட்பம் மூலம் கண்டுபிடிக்க முடியாததை இவர் ஒரு லேப்டாப் வைத்து கண்டுபிடித்து அசத்தினார்.
2019-ம் ஆண்டு நவம்பரில் லேப்டாப் மட்டும் வைத்து சந்திர மேற்பரப்பின் பழைய மற்றும் படங்களை வைத்து பல நாட்களாக ஒப்பீடு செய்தார். ஜூம் இன், ஜூம் அவுட், பிக்சல் பிக்சலாக ஒப்பீடு செய்தார். இந்த முறை, வழக்கத்திற்கு மாறானதாக இருந்தாலும்
விக்ரம் லேண்டரின் பகுதிகளை கண்டுபிடிக்க வழிவகுத்தது.
அமெரிக்காவின் நாசா-ம் இந்த அடையாளங்களை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டது. சுப்ரமணியனை பாராட்டியது. ஒளி பிரதிபலிக்கும் விதத்தில் உள்ள வேறுபாடுகளைப் பயன்படுத்தி, இயற்கைப் பொருட்களை மனிதனால் உருவாக்கப்பட்ட பொருட்களுடன் ஒப்பிட்டு, கண்டுபிடிப்பைச் செய்தார் என்று கூறியது.
சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் சண்முக சுப்ரமணியன், சந்திரயான்-3 தரையிறங்குவதை முன்னிட்டு கடந்த சில நாட்களாக பிஸியாக இருந்தார்.
செவ்வாயன்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய அவர், "சந்திரயான் தரையிறக்க நிகழ்விற்காக மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். சந்திரயான்-3 தரையிறங்கும் செயல்முறையைப் பார்க்க நான் நாளை (இன்று) விடுப்பு எடுக்கிறேன்.
தரையிறங்கும் தளத்தை பார்க்க நான் டிஜிட்டல் எலிவேஷன் மாடல்களை தயார் செய்துள்ளேன். இதில் அனைத்து பள்ளங்கள் மற்றும் மலைகளும் உள்ளன. நான் ஏற்கனவே பொது களத்தில் உள்ள தகவல் மற்றும் புகைப்படங்களிலிருந்து முன்மொழியப்பட்ட தரையிறங்கும் தளத்தின் படங்களை செயலாக்கி வெளியிட்டுள்ளேன்" என்றார்.
இஸ்ரோவின் தகவல்களைக் கொண்டு லேண்டர் தரையிறங்கும் உத்தேச இடத்தை டிஜிட்டல் எலிவேஷன் மாதிரிகளை உருவாக்கியதாக கூறினார். "சுற்றியுள்ள நிலப்பரப்பின் உயர வேறுபாடுகளை நான் இப்படித்தான் அளவிடுகிறேன் - உதாரணமாக, பள்ளங்களின் ஆழம் அல்லது மலைகளின் உயரம். இமேஜர்கள் மற்றும் ஸ்பெக்ட்ரோமீட்டர்களுக்கான ஒருங்கிணைந்த மென்பொருள் (ஐஎஸ்ஐஎஸ்) மற்றும் பிடிஎஸ்4 வியூவரை நாசா மென்பொருள் மூலம் படங்களைச் செயலாக்கவும் அசல் இஸ்ரோ படங்களைத் திறக்கவும் பயன்படுத்துகிறேன்,” என்று அவர் பயன்படுத்தும் முறைகளைப் பற்றி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“