இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் கடந்த மாதம் 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம் ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் நிலவுக்கு அனுப்பபட்டது. நிலவின் தென் துருவத்தை ஒட்டியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக விண்கலம் அனுப்பபட்டுள்ளது.
179 கிலோ மீட்டர் உயரத்தில் புவி சுற்றுவட்ட பாதையில் அனுப்பப்பட்ட சந்திரயான் விண்கலம் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் புவி சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது. இதன்பின், Orbit Raising Manueuver எனப்படும் புவி வட்ட சுற்றுப்பாதை உயர்த்தும் பணிகள் நடைபெற்றது.
புவியின் சுற்றுவட்ட பாதையில் மிக அருகில் வரும்போது விண்கலத்தை உந்துவிசை மேற்கொள்ள செய்து அதன் மூலம் புவியின் நீள் வெட்டப் பாதையில் அதிக தூரம் செல்லுமாறு உயர்த்தப்பட்டது. 5 கட்டமாக சந்திரயான்-3 விண்கலத்தின் சுற்றுப் பாதை உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலம் நேற்று நள்ளிரவுடன் புவி சுற்று வட்டப் பாதையை நிறைவு செய்து, நிலவை நோக்கிய பயணத்தை இன்று (செவ்வாய்கிழமை) தொடங்கியுள்ளது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இது குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், "சந்திரயான்-3 விண்கலம் புவி சுற்று வட்டப் பாதையை நிறைவு செய்து நிலவு சுற்றுப்பாதை பணியைத் தொடங்கியுள்ளது. இஸ்ரோவின் (டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நெட்வொர்க்) வளாகத்தில் இருந்து பெரிஜி-ஃபயரிங் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இதையடுத்து விண்கலம் டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதைக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
மேலும், விண்கலம் நிலவை அடைந்ததும், ஆகஸ்ட் 5-ம் தேதி சந்திர சுற்றுப்பாதைக்குள் நுழையும் (Lunar-Orbit Insertion) செய்யப்படும்" என்றும் கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“