இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான்-3 விண்கலம் கடந்த 14-ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஒட்டியுள்ள பகுதிகளை ஆய்வு செய்வதற்காக விண்கலம் அனுப்பபட்டுள்ளது. இந்நிலையில் படிப்படியாக புவிவட்ட சுற்றுப் பாதை உயர்த்தும் படிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன் முதற் சுற்று பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. திங்கட்கிழமை அன்று 2-வது சுற்று பாதைக்கு விண்கலத்தை உயர்த்தும் பணி நடைபெற்றது. அப்போது குறைந்தபட்சம் 226 கி.மீ தூரமும் அதிகபட்சமாக 41,603 கி.மீ தொலைவிலும் புவியின் நீள்வட்டப் பாதையில் சந்திரயான்-3 விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது.
தொடர்ந்து நேற்று மாலை 3 மணியளவில் 3-வது புவி வட்ட சுற்றுப்பாதைகக்கு உயர்த்தும் பணி வெற்றிகரமாக செய்யப்பட்டதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். திட்டமிட்டபடி விண்கலம் 51400 கிமீ x 228 கிமீ சுற்றுப்பாதையை அடைந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.
மேலும் அடுத்த சுற்றுப் பாதைக்கு உயர்த்தும் பணி நாளை (ஜூலை 20) பிற்பகல் 2-3 மணி அளவில் நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் ஆகஸ்ட் 23-ம் தேதி மாலை 5.47 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ கூறியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“