இந்தியாவின் சந்திரயான்- 3 விண்கலம் நேற்று (ஆகஸ்ட் 23) மாலை 6.04 மணியளவில் நிலவின் தென் துருவப் பகுதியில் வெற்றிகரமாக சாஃப்ட் லேண்டிங் செய்தது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இந்தியா வரலாறு படைத்துள்ளது. நிலாவில் வெற்றிகரமாக தரையிறங்கிய 4-வது நாடு என்ற பெருமையையும் படைத்துள்ளது.
சந்திரயான்- 3-ன் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் திட்டமிட்டபடி தரையிறங்கியது. விக்ரம் லேண்டர் தரையிறங்கி அதில் இருந்து பிரக்யான் ரோவர் வெளிவரும் வகையில் வடிவமைக்கப்பட்டது. அதன் படி நிலவில் லேண்டர் தரையிறங்கியதும் புழுதி படலம் ஏற்பட்டது. புழுதி அடங்கியப் பின் இரவு 11 மணியளவில் ரோவர் வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கியது.
லேண்டர் மற்றும் ரோவர் ஒரு சந்திர நாள் (14 நாட்கள்) நிலவின் தென் துருவப் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளும். சந்திர நிலநடுக்கம், உறைந்த நீர், கனிம வளங்கள் உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இஸ்ரோ இன்று (ஆகஸ்ட் 24) வெளியிட்ட 'X' பதிவில், நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த சந்திரயான்- 3-ன் விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளியே வந்து ஆய்வைத் தொடங்கி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”