நிலவுக்கு செல்லும் பாதையில் சுற்றி வரும் சந்திரயான் 3 விண்கலம் இன்று (ஆகஸ்ட் 5) இரவு 7 மணியளவில் நிலவு சுற்றுப் பாதையில் செலுத்தப்படும் என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கனவுத் திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்வெளிக்கு ஏவப்பட்டது. நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பபட்டுள்ளது. விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 3 விண்கலம் ஏவப்பட்ட 16 நிமிடத்தில் பூமி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. இதன் பின் பூமி சுற்றுப்பாதை 5 முறை அதிகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி விண்கலம் பூமி சுற்றுப்பாதையை நிறைவு செய்தது. இதன் பின் நிலவு சுற்றுப் பாதைக்கான பயணத்தை தொடங்கியது. டிரான்ஸ்லூனார் சுற்றுப்பாதையில் செலுத்தபட்டது. இந்நிலையில் இன்று சந்திரயான் 3 விண்கலத்தை நிலவு சுற்றுப் பாதைக்கு செலுத்த இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், சந்திரயான் 3 விண்கலம் நிலவின் மூன்றில் இரண்டு பங்கு தூரத்தை கடந்துள்ளது. லூனார் ஆர்பிட் இன்ஜெக்ஷன் (LOI) எனப்படும் நிலவு சுற்றுப்பாதைக்கு செலுத்தும் பணி ஆகஸ்ட் 5-ம் இரவு 7 மணிக்கு மேற்கொள்ளப்படும். சந்திரயான்-3 நிலவுக்கு மிக அருகில் (பெரிலூன்) இருக்கும் போது இந்த பணி மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“