சீனா விண்வெளியில் சொந்தமாக தனது விண்வெளி நிலையத்தை அமைத்து வருகிறது. வீரர்களை விண்ணுக்கு அனுப்பியும் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சூரியன் குறித்து ஆய்வு மேற்கொள்ள குவாஃபு-1 என்ற செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்பியுள்ளது.
மேம்படுத்தப்பட்ட விண்வெளி அடிப்படையிலான சூரிய விண்கலம் (The Advanced Space-based Solar Observatory (ASO-S)) லாங் மார்ச்-2டி (Long March-2D) ராக்கெட் மூலம் விண்ணுக்கு ஏவப்பட்டது.
குவாஃபு-1 என்பது புனைப்பெயர் ஆகும். சூரிய விண்கலம் பூமியிலிருந்து 720 கிலோமீட்டர் உயரத்தில், சர்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுப்பாதையை விட உயரமான சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 859 கிலோகிராம் எடையுள்ள இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது.
விஞ்ஞானி சின்ஹுவா கூறுகையில், "செயற்கைக்கோள் இப்போது சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. முதலில் 6 மாத கால இயக்க நிலை தொடங்கும், அதன் பிறகு அறிவியல் செயல்பாடுகள் தொடங்கும். இந்த விண்கலம் சூரிய காந்தப்புலத்திற்கும் இரண்டு பெரிய வெடிப்பு நிகழ்வுகளுக்கும் இடையிலான காரணத்தை ஆய்வு செய்யும். சூரிய எரிப்பு மற்றும் கரோனல் வெளியேற்றம் குறித்து ஆய்வு செய்யும்.
ஏஎஸ்ஓ-எஸ் விண்கலம் வருடம் முழுவதும் 24 மணிநேரமும் சூரியனை ஆய்வு செய்யும் திறன் கொண்டது" என்றார்.
இந்த விண்கலம் 4 வருடங்கள் செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும்
500 ஜிகாபைட் டேட்டா அனுப்பும். சூரியன் குறித்த ஆய்வு அதன் ரகசியங்களை வெளிப்படுத்தும். ஆராய்ச்சியாளர்கள் சூரியன் குறித்து பல தகவல்களை தெரிந்து கொள்ள இந்த ஆய்வு உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாசாவின் பார்க்கர் சோலார் ஆய்வுக்குப் பிறகு சூரியன் குறித்த பெரிய ஆய்வு தற்போது சீனா மேற்கொள்கிறது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் சோலார் ஆர்பிட்டர் மற்றும் 2021இல் ஏவப்பட்ட சீனாவின் ஜிஹே ஆய்வுகள் தற்போது சூரியனை நெருங்கி வருகிறது.
இந்தியாவும் சூரியன் குறித்த ஆய்வு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஆதித்யா எல்-1 திட்டம் அடுத்த ஆண்டு தொடங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“