அண்டார்டிகாவில் உள்ள இரண்டு நிரந்தர சீன ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றான Zhongshan ஆராய்ச்சி நிலையத்தில் செயற்கைக்கோள் கண்காணிப்பதற்கான தரைத் தளத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. ஸ்வீடன் நாட்டின் விண்வெளி மையம் சீனாவுடனான ஒப்பந்தங்களை மீண்டும் புதுப்பிக்க மறுப்பு தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுநாள் வரை சீன விண்கலத்திற்கான தரை நிலைய (Ground stations) ஆதரவை ஸ்வீடன் வழங்கி வந்தது. சீன விண்கலம் விண்ணில் பறப்பதற்கும் தரவுகளை பெறுவதற்கும் ஸ்விடன் தரை நிலையங்கள் உதவியாக இருந்தன. இந்நிலையில் சில காரணங்களால் சீனாவுடனான ஒப்பந்தங்களை மீண்டும் புதுப்பிக்க ஸ்வீடன் மறுப்பு தெரிவித்து விட்டது.
ஸ்வீடனை தளமாகக் கொண்ட விண்வெளி மையம் புவிசார் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக புதிய சீன ஒப்பந்ததை ஏற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
சீன செயற்கைக்கோள் ரிலே தரவு மற்றும் பரிமாற்றத்தை ஆதரிக்கும் புதிய நிலையங்கள் சீனா ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி குரூப் நிறுவனத்தால் கட்டமைக்கப்படுகிறது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு நிரந்தர சீன ஆராய்ச்சி நிலையங்களில் ஒன்றான Zhongshan ஆராய்ச்சி தளத்தில் தரை நிலையம் நிறுவப்படுகிறது. இதற்காக
சீன அரசு ஏரோஸ்பேஸ் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்திடம் 6.53 மில்லியன் டாலர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
அண்டார்டிகாவின் ப்ரைட்ஸ் விரிகுடாவில் அமைந்துள்ள ஜாங்ஷான் (Zhongshan) ஆராய்ச்சி தளத்தில் 4 தரை நிலையங்கள் கட்டப்பட உள்ளது. இந்தப் பகுதி தெற்கு இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது. அர்ஜென்டினாவின் படகோனியாவில் சீனாவால் கட்டப்பட்ட தரைநிலையம் அமைதியான விண்வெளி கண்காணிப்பு மற்றும் தரவுகளை கொடுத்து வருகிறது. அதன் தான் இலக்கு என சீனா உறுதியளித்த நிலையில், தற்போது சீனாவின் இந்த புதிய திட்டம் கவலையளிப்பதாக பல்வேறு நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு, இலங்கையில் உள்ள சீனாவால் கட்டப்பட்ட ஹம்பாந்தோட்டா துறைமுகத்திற்கு சீனாவின் ராணுவ கண்காணிப்பு கப்பல் வந்தது. இது அண்டை நாடுகளின் செயற்கைக்கோள், ராக்கெட், ஏவுகணைகளை கண்காணிக்கும் உளவு கப்பல் என கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக இந்தியா இதற்கு பலத்த எதிர்ப்பு தெரிவித்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil