Dinosaur Killing Asteroid, Chicxulub தாக்கம்: அமெரிக்காவின் புவியியல் சங்கம் (GSA) கூற்றின்படி, சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 10 கிலோமீட்டர் சிறுகோள் பூமியைத் தாக்கியபோது டைனோசர்களின் அழிவு தூண்டப்பட்டது. ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், சிக்சுலப் சிறுகோளின் தாக்கம் மெகா நிலநடுக்கத்தைத் தூண்டியது. அது 100 பில்லியன் டிரில்லியன் ஜூல் ஆற்றலை வெளிபடுத்தியது. அல்லது 2004 சுமத்ரா பூகம்பத்தை விட சுமார் 50,000 மடங்கு அதிக ஆற்றலை வெளியிட்டதாக கூறலாம். இது ரிக்டர் அளவுகோலில் 9.1 அளவு பதிவாகியது என்று கூறினர்.
அக்டோபர் 9, ஞாயிற்றுக்கிழமை டென்வரில் நடந்த ஜிஎஸ்ஏ மாநாட்டில் ஆராய்ச்சியாளர் ஹெர்மன் பெர்முடெஸ் இந்த மெகா நிலநடுக்கம் சம்பந்தமான ஆய்வு சான்றுகளை சமர்ப்பித்தார். பெர்முடெஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெக்சாஸ், அலபாமா மற்றும் சில இடங்களுக்கு சென்று தரவுகளை சேகரித்தார். கொலம்பியா மற்றும் மெக்சிகோவில் ஏற்பட்ட தாக்கம் குறித்து ஆராய்ச்சிக்கு கூடுதலான தரவுகளை இங்கு சேகரித்தார்.
2014ஆம் ஆண்டில், பெர்முடெஸ் கொலம்பியாவில் உள்ள கோர்கோனிலா தீவில் களப்பணி செய்து கொண்டிருந்த போது உருண்டை படிவுகளைக் கண்டறிந்தார். ஸ்பிரூல் வைப்பு என்பது 1.1 மிமீ விட சிறிய கண்ணாடி மணிகளால் நிரப்பப்பட்ட வண்டல் அடுக்குகள் மற்றும் "டெக்டைட்ஸ்" மற்றும் "மைக்ரோடெக்டைட்ஸ்" எனப்படும் துண்டுகள் ஆகும்.
சிக்சுலப் சிறுகோள் பூமியைத் தாக்கியபோது, கடல் தளத்திற்கு கீழே 15 மீட்டர் வரை மண் மற்றும் மணற்கல் அடுக்குகள் சிதைந்தன என்று ஆய்வு கூறுகிறது. பெர்முடெஸின் ஆய்வின்படி, சிக்சுலப் சிறுகோள் தாக்கதின் விளைவாக நிலநடுக்கம் ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.
மெகா நிலநடுக்கத்திற்கான ஆதாரம் மெக்சிகோ மற்றும் அமெரிக்காவில் உள்ளது என்று கூறுகிறார்.
இது மட்டுமல்லாது பெர்முடெஸ், மிசிசிப்பி, அலபாமா மற்றும் டெக்சாஸ் ஆகியவற்றில் ஏற்பட்ட மெகா நிலநடுக்கத்துடன் தொடர்புகளையும் ஆவணப்படுத்தினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“